வாய்ப்பு



‘‘டைரக்டர், இசையமைப்பாளர், நடிகர்கள்... அனைவருமே புதுசு. இந்தப் படத்தில் நான் பாடமாட்ேடன்!’’ - பிரபல பாடகர் பத்மராகவன் கோபத்தோடு மறுத்தார். ‘எவ்வளவு பெரிய பாடகர் இவ்வளவு ஈகோ பிடித்தவராய் இருக்கிறாரே!’ - இளம் டைரக்டர் இந்திரனுக்குக் கோபம், கொதிப்பு. தன்னிடம் பலமுறை வாய்ப்பு கேட்டு வந்த வசந்தனைப் பாட வைத்தான்.



அத்தனை பாடல்களும் ஹிட். எங்கும் அந்தப் பாடல்களே ஒலித்தன. எவரும் அதைப் பற்றியே பேசினர். அந்தப் பாடல்களால் படமும் ஹிட். பத்மராகவனே பாடியிருந்தால் கூட இவ்வளவு ஹிட் ஆகியிருக்குமா தெரியாது. அவரைப் பார்த்து நாலு வார்த்தை நறுக்கென கேட்க வேண்டும். படப்பாடல் அடங்கிய சி.டியை எடுத்துக் கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றான். ‘‘மூத்த பாடகர் நீங்க... மதிச்சு வந்தேன். பாட மறுத்துட்டீங்க. அறிமுக பாடகனைப் பாட வச்சேன். சூப்பர் ஹிட். தான் என்கிற கர்வம்தானே காரணம்?’’ என்றான் இந்திரன்.

பத்மராகவன் சிரித்தார். ‘‘கர்வம் எனக்கில்ல. உனக்குத்தான். பாட வாய்ப்பு கேட்டு வந்த புதுப் பையனை நீ இன்சல்ட் செய்ததை தெரிஞ்சுக்கிட்டேன். அவன் வலி உனக்குப் புரியணும். அறிமுகம் ஆகும்போதே இப்படி இருந்தா, எதிர்காலத்துல நீ எப்படி ஆவேன்னு உனக்கே தெரியாது. புதியவர்களுக்கு நீ வாய்ப்பு தரணும்னுதான் பாட மறுத்தேன்!’’ - அவர் சொல்ல இந்திரன் அதிர்ந்தான்.    
                    

-வெ.தமிழழகன்