பிரமாண்ட நட்பு ராட்சஸன்!



இது ஹாலிவுட் பிரமாண்டங்களின் சீஸன். ‘குங்ஃபூ பாண்டா’, ‘தி ஜங்கிள் புக்’, ‘அயர்ன்மேன் Vs கேப்டன் அமெரிக்கா’, ‘ஆங்கிரி பேர்ட்ஸ் தி மூவி’, ‘ஃபைண்டிங் டோரி’ என குழந்தைகளின் குதூகலக் குற்றாலத்தில் வாரா வாரம் சாரல் மழை. அதில் அடுத்த எதிர்பார்ப்புதான் டிஸ்னியின் ‘The BFG’. ‘Big Friendy Giant’ என விரியும் இந்த ஃபேன்டஸி படத்தை இயக்கியிருப்பவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். ‘ஜுராஸிக் பார்க்’ மூலம் ஹாலிவுட் படங்களுக்கான தமிழ் ரசிகர்களை மொத்த விலையில் உருவாக்கிய அதே பிரமாண்ட ராட்சஸன்!



‘பிளாக்பஸ்டர்களின் பிதாமகன்’ என்றுதான் ஸ்பீல்பெர்க்கை ஹாலிவுட் அழைக்கிறது. அப்படிப்பட்டவர், முதல்முறையாக வால்ட் டிஸ்னி நிறுவனத்தோடு இணைந்திருக்கிறார் என்பதில் பரபரத்துக் கிடக்கிறது பாக்ஸ் ஆபீஸ் ஏரியா. ‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘ஜுராஸிக் பார்க்’, ‘வார் ஆஃப் வேர்ல்ட்ஸ்’ போன்ற பிரமாண்டங்களை எல்லாம் கொடுத்துவிட்டு, கபால் என இறங்கி ஆப்ரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் தில், ஸ்பீல்பெர்க்குக்கு மட்டுமே உண்டு. ‘25 வருடங்களுக்குப் பின் அவர் இயக்கும் குழந்தைகளுக்கான ஃபேன்டஸி படம்’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது BFG!

பெல்ஜியத்தில் இந்தப் படம் ஜூன் 30ல் ரிலீஸ் ஆவதால் இதுவும் சம்மர் வெளியீடு வகையில் சேரும். அப்படிப் பார்த்தால் 8 வருடங்களுக்குப் பின் சம்மர் ரிலீஸ் கோதாவில் குதிக்கிறார் ஸ்பீல்பெர்க்!



சரி, BFG கதை என்ன?
‘ஒழுங்கா சாப்பிடு! இல்லாட்டி பெரிய அரக்கன் வந்து உன்னை முழுங்கிடுவான்!’ என சின்னக் குழந்தைகளுக்கு பயம் காட்டுவோம் இல்லையா? அந்த அடித்தளம்தான் கதை. சோஃபி என்ற எட்டு வயதுப் பெண் குழந்தைக்கு இரவில் தூக்கம் வராத வியாதி. தன்னந்தனியாக தெருக்களில் ஆந்தை போல உலவுகையில் அவள் ஒரு பிரமாண்ட அரக்கனைப் பார்த்து அலறுகிறாள். அவளை அரக்கர்களின் உலகுக்குக் கொண்டு செல்கிறான் அவன்.

மெல்ல மெல்ல அவன் நல்ல அரக்கன் என்பது தெரிந்து அவனோடு நட்பாகிறாள். அந்த அரக்கலோகத்தில் மற்ற எல்லோரும் குழந்தைகளை விழுங்கும் நான் வெஜ் அரக்கர்களாக இருக்க, இந்த நட்பரக்கன் மட்டும் வெஜிட்டேரியன். சக அரக்கர்களின் கோபத்துக்கு இதுவே காரணமாகிறது. நட்பரக்கனையும் அவன் விருந்தாளியான குட்டிப் பெண் சோஃபியாவையும் அவர்கள் வேட்டையாடத் துடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து எலிசபெத் ராணியின் துணையோடு இதர அரக்கர்களை எப்படி அழித்தார்கள் என்பதே கிராஃபிக்ஸ் கலக்கல் முழு சினிமா!

1982ம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த சிறுவர் நாவலைத்தான் படமாக்கியிருக்கிறார்கள். நவீன காலச் சிறுவர்களிடம் ஒரு பழங்காலக் கதை செல்லுபடியாகுமா? 70 வயதாகும் ஸ்பீல்பெர்க்கால் இனியும் குழந்தைகளுக்கான படங்கள் தர முடியுமா? நரமாமிசம் தின்பது எனும் மையக் கருவில் இருந்து குழந்தைகளுக்கான படைப்பு இயற்றப்படலாமா? என இந்தப் படத்துக்குத்தான் எத்தனை எதிர்க்கருத்துகள்! ஆனால், இவை அனைத்தையும் விஞ்சி நிற்கிறது எதிர்பார்ப்பு!

கடந்த சில வருடங்களாக ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் வசூலை வாரிக் குவிக்கின்றன. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட முக்கிய உள்நாட்டு மொழிகளில் ஹாலிவுட் படங்கள் டப்பிங் செய்யப்படுவதே அதற்குக் காரணம். இந்தப் படம் அதிலும் அடுத்த கட்டம் போகிறது. ஹாலிவுட்டில் அனிமேஷன் படம் வருகிறதென்றால் அதில் வரும் கற்பனைக் கதாபாத்திரம் ஒவ்வொன்றுக்கும் பிரபல ஹாலிவுட் நடிகர்களையே குரல் கொடுக்க வைப்பார்கள்.

அந்த அட்ராக்‌ஷனும் சேர்ந்து கொள்வதால் படம் மெகா ஹிட் ஆகும். தமிழ் டப்பிங்கில் இதுவரை அப்படியொரு டிரெண்ட் இல்லை. அதை முதன்முதலாக BFG உருவாக்கும் என்கிறார்கள். ரஜினியின் ‘லிங்கா’ பட வில்லனான ஜெகபதி பாபுதான் இந்தப் படத்தில் வரும் பெரிய நட்பான அரக்கனுக்கு குரல் கொடுக்கப் போகிறாராம். தமிழில் இல்லையென்றாலும் தெலுங்கு டப்பிங்கில் இந்த ஸ்டார் வேல்யூ நிச்சயம் எடுபடும். இந்தி டப்பிங்கில் பாலிவுட் நடிகர் குல்ஷன் குரோவர் அதே கேரக்டருக்கு குரல் கொடுக்கிறார்.

வருங்கால ‘மொழி மாற்றங்கள்’ இன்னும் பெரிய நட்சத்திரங்களின் குரல்களோடு பொலிவு பெற இது வழி வகுக்கும். யாருக்குத் தெரியும்... 2020 வாக்கில் புத்தம் புது ஹாலிவுட் படங்களுக்கு அஜித்தும் விஜய்யும் தனுஷும் சிம்புவும் டப்பிங் பேசி அசத்தலாம். அப்படியொரு ட்ரெண்டுக்கு BFG படமே துவக்கப்புள்ளியாக அமையலாம். 70 வயதானாலும் புதிய டிரெண்டை உருவாக்க ஸ்பீல்பெர்க்தான் வரவேண்டியிருக்கிறது!

- நவநீதன்