ரொம்ப நல்லவன்... ரகசியமா கெட்டவன்!



ரொம்ப நாளா என் மனசுக்குள் ஊறிக் கிடந்த ஒரு கதை... கலகலப்பா காதல்(கள்), காமெடினு இடத்தையும் பொழுதையும் சந்தோஷமா வச்சிக்க இடம் இருக்கிற படம். சிங்கப்பூரில் நடக்கிற மாதிரி இருந்தால்தான் அழகா இருக்கும். இப்படி எல்லாமே கனிந்து வந்ததுதான், ‘பறந்து செல்ல வா’! எல்லாமே நம் கண் பார்க்க மாறிக்கொண்டு இருக்க, காதல் மட்டும் நூற்றாண்டு தாண்டி நிக்குது. அதை எளிமையும், இனிமையும், கவிதையும், காமெடியுமாய் சொல்ல முயற்சித்ததற்கு வந்த விடைதான் இந்தப் படம்!’’ - உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் தனபால் பத்மநாபன்.



‘‘டிரெய்லரே இளமையில் அசத்துகிறது. எப்படி படத்தை எதிர்பார்க்க..?’’
‘‘முதலில் எடுத்த படத்தின் சாயல் துளியும் இல்லாமல் அடுத்த படம் எடுக்கிறதுதான் இயக்குநரா எனக்கு அழகு. இது முக்கோணக் காதல் கதை. காதலை தேடிக்கிட்டே இருக்கிறவன் கடைசியில் பிரியப்பட்ட காதலை சென்றடைகிற கதை. நிறைய சுவாரஸ்யமான இடங்களுக்கு உத்தரவாதம் இருக்கு. காதல் என்கிற அற்பமான, அற்புதமான சந்தோஷம் இருப்பதால்தான் சமூகம் வாழ்கிறது.

சினிமாவும் வாழ்கிறது. வயசும் மனசும் வாழ்க்கையோட சண்டை போடுகிற பருவத்தில், ரசனையா ஒரு லெட்டர் எழுதி கையெழுத்து போடுவோமே... அது பைத்தியக்காரத்தனம்தான். ஆனா, அதுதானே ஆகப் பெரிய அன்பு! அதையே சிங்கப்பூர் மாதிரி அழகும், துறுதுறுப்பும் இருக்கிற சிட்டியில் வச்சு சொன்னால் எப்படியிருக்கும்? ஆகக் கடைசியில் நவீன இளைஞர்களுக்கான பட முயற்சியில், எல்லோருக்கும் பிடிக்கிற படமாகவே இது மாறிப் போச்சு!’’



‘‘எப்படியிருக்கிறார் நாசரின் வாரிசு பாஷா?’’
‘‘ஒரு படம்னா என்னங்க? அது ஒரு லைஃப். சண்டை, காமெடி, காதல், சென்டிமென்ட், ஆட்டம், பாட்டம், எமோஷன் எல்லாம் சேர்ந்ததுதானே நம்ம லைஃப்! அதை சினிமாவா பார்க்கிறப்ப எல்லோருக்கும் பிடிக்கப் போகுது. அதைத்தான் இதில் செய்திருக்கேன். பாஷா இதில் அமைந்திருப்பது ரொம்ப நல்ல விஷயம். உள்ளேயே ‘ஜீன்’ இருக்கு இல்லையா, அது அவ்வளவு அழகா வேலை செய்திருக்கு. துள்ளலும், துடிப்புமா பாஷா இதில் அவ்வளவு கச்சிதம். அவன் ரொம்ப நல்லவன்.

ஆனா, ரகசியமா கெட்டவன். வீட்டுல ஐ.நா சபை மெம்பர் மாதிரி இருந்துட்டு தெருவைத் தாண்டியதுமே தீவிரவாதியா திரிவாங்களே... அப்படிப்பட்ட பசங்களில் ஒருத்தன். அவனுடைய காதல் அடைகிற மாற்றங்களில், அந்த அழகான தருணங்களில் ஆரம்பிக்கிறது படம். மழை சந்தோஷம்... ஆலங்கட்டி மழை இன்னும் சந்தோஷம் இல்லையா? அப்படித்தான். காதலையே கலாட்டாவா பேசுகிற, காமெடியில் அதகளமா கொண்டு போகிற கதை.

‘சைவம்’ படம் பார்த்திட்டு பாஷா அப்படியே மனசுக்குள் ஊடாடினார். படு ஸ்டைலா வர்ற சாக்லெட் பையன். எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி சில பசங்க இருப்பாங்கல்ல... அப்படி நொடிக்கு ஒரு குறும்பு பண்ணி, சின்னச் சின்னதா பொய் சொல்லி, காதலில் கசிந்துருகி, ஜாலியா அலைகிற ச்சோ ஸ்வீட் பையன் பாஷா.’’

‘‘சிங்கப்பூர் பொண்ணு அள்ளுதே!’’
‘‘அந்தப் பொண்ணோட பெயர் நரேல். அழகில் கனிஞ்சு நிற்கிறதை விடுங்க. அந்தப் பொண்ணு நடிக்கிற, உள்வாங்குற விதமே அழகு. ஒரு இடத்துல லவ், வெறுமை, ஏமாற்றம், சந்தோஷம்னு எல்லாத்தையும் ஒரே ஷாட்ல காட்டணும். நிச்சயம் ரொம்பக் கடினமான இடம். அனுபவம் இருந்தா, உடனே அந்த ஷாட்டைக் கடந்து போயிடலாம்.

இவர் புதுசாச்சேனு நினைச்சா, அதை அப்படியே அழகா தாண்டிப் போயிட்டார். எனக்கே அந்த இடம் முக்கியமான இடமா ஆகிப்போச்சு. அப்புறம் நம் ஐஸ்வர்யா ராஜேஷ்... கிராமத்தில், குப்பத்தில், கிழிந்த புடவைகளில் இருக்கிற பொண்ணா வந்தே பழகிப் போன ஐஸ்வர்யா, இதில் நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கிற பொண்ணு. ஸ்கிரீன் ப்ரசன்ஸ்... அதில் அவங்க வேற இடம்!’’

‘‘கருணாகரன், சதீஷ், ஆர்.ஜே பாலாஜினு பெரிய கூட்டத்தை வச்சிருக்கீங்க!’’
‘‘நாம் செய்கிற வேலையை நல்லபடியா செய்துக்கிட்டே இருந்தால், அதுவே ஒரு நல்ல இடத்திற்கு கொண்டு போய்ச் சேர்க்கும்னு சொல்வாங்க. அப்படிப்பட்ட பக்குவத்திற்கு இவங்க மூணு பேருமே வந்துட்டாங்க. டைமிங்கில் அள்ளிட்டு போறாங்க. பெண்களுக்கும், பசங்களுக்கும் அவங்க பண்ணுகிற காமெடி உள்ளே இழுத்துப் போகும்!’’

‘‘ரைட்டர் பேயோனை கொண்டு வந்துட்டீங்க...’’
‘‘எனக்கு அவர் எழுத்துகள் பிடிக்கும். அவர் காமெடியெல்லாம் படிக்கிறபோதே புன்னகையை மீறி சலசலக்க வைக்கும். படிச்சிட்டு இருக்கும்போதே சிரிச்சு, வீட்ல திரும்பிப் பார்த்திருக்காங்க. ‘காதல்’ ஜோஸ்வா ஸ்ரீதர் இதில் அப்படியே வெளியே வந்திருக்கார். ‘மண் மீது இன்பம் என்ன பெண்தானே... பெண்ணின்றி வாழ்க்கை இங்கு வீண்தானே’ என்ற பாடலை நீங்கள் மறக்க முடியாது.

அதில் பாஷா, நரேல், ஐஸ்வர்யா நடிச்சுப் பார்த்தபோது அவ்வளவு சந்தோஷம். காதலையும், அன்பையும் அள்ளிக்கொண்டு போய் அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி ஆட வைத்திருக்கிறார் ஜோஸ்வா. இவ்வளவு முயற்சிக்கும், பின்னணியில் இருக்கிறார் தயாரிப்பாளர் அருமைச்சந்திரன். அவருக்கு என் வந்தனம். உங்களை கலகலப்பான காதல், காமெடி திக்குமுக்காடலுக்கு அழைக்கிறேன்!’’

- நா.கதிர்வேலன்