கவிதைக்காரர்கள் வீதி



பெயர்ச் சொல்

வனஜா என்னும் பெயர்
ஓர் இளம்பெண்ணுக்குரிய பெயராக
தோன்றவில்லை
காமாட்சியும் கனகவள்ளியும் கூட
அப்படித்தான்
எண்பதுகளில் சாந்தியும்
தொண்ணூறுகளில் ப்ரியாவும்
பிரசித்தி பெற்றது
ஒருதலைக் காதலால்
அம்பிகா என்றோ ராதா என்றோ
பெயர் வைக்க பிரியப்பட்டவர்கள்
எப்படியும் இப்போது

தாண்டியிருப்பார்கள் நாற்பது வயதை
மணிமேகலையோ கண்ணகியோ
இல்லவே இல்லை இன்று
பாடகியாக விரும்புகிற ஒரு பெண்
தன்னுடைய பெயரை
சுசீலாவாகவோ ஜானகியாகவோ
வைத்துக்கொள்ள எண்ணுவதில்லை
கல்பனா, வைஜெயந்தி என்பதும்
வழக்கொழிந்துவிட்டன
கமலாவை ஆரஞ்சு பழப்பெயராக
அறிபவர்களே அதிகம்
ஒரு பெண் தன் பெயரிலிருந்து
அறிவிக்க விரும்புவது
தானுமொரு பெண் என்பதைத்தானா?
எழுபதைத் தாண்டிய
என் அம்மாவின் பாட்டி பெயர்
சின்னப்பொண்ணு என்றே சொல்கிறது
வீட்டுப் பத்திரம்

-யுகபாரதி