எய்ட்ஸ் மருந்து தட்டுப்பாடு!



வல்லரசு இமேஜின் விபரீத சைடு எஃபெக்ட்

எய்ட்ஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்வது மட்டுமே ஒரு அரசாங்கத்தின் வேலை அல்ல. ஹெச்.ஐ.வி பாதித்த நோயாளிகள் அனைவருக்கும் தங்கள் உயிரைத் தக்க வைத்துக்கொள்ள உதவும் மருந்துகளை இலவசமாகத் தருவதும் அரசின் கடமைதான். ஆனால், எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளுக்கு இந்தியாவில் தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறது, ‘சென்டர் ஃபார் அட்வகஸி அண்ட் ரிசர்ச்’ எனும் தன்னார்வ ஆய்வு அமைப்பு. இந்தியாவில் 5 மாநிலங்களில் 1547 எய்ட்ஸ் நோயாளிகளிடையே ஆய்வு செய்திருக்கும் இந்த அமைப்பு, நூற்றுக்கு 18 நோயாளிகள் ஒரு நாளுக்கான மாத்திரைகளைக் கூட வாங்க முடியாமல் அவதிப்படுவதாகக் கண்டறிந்திருக்கிறது.



‘‘ஆன்டி ரெட்ரோவைரல் (antiretroviral) எனப்படும் எய்ட்ஸ் மருந்துகள் ரொம்பவும் காஸ்ட்லி. எனவேதான் அரசு மருத்துவமனைகள் இதனை இலவசமாக வழங்கி வருகின்றன. இந்தியாவில் 20 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பதாக ஒரு மதிப்பீடு உண்டு. ஆனால், இந்த எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் உயர்ந்துகொண்டே போகிறது என்பதனை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை!’’ என ஆரம்பிக்கிறார் ‘பாஸிட்டிவ் வுமன் நெட்வொர்க்’ அமைப்பின் தலைவரான கௌசல்யா.

மேற்படி அந்த ஆய்வில் இணைந்து பங்காற்றிய அமைப்பு இது. எய்ட்ஸ் மருந்து தட்டுப்பாட்டுக்கான காரணங்களை பட்டியலிடுகிறார் இவர். ‘‘ஹெச்.ஐ.வி பாதித்த நோயாளிகளின் சிகிச்சைக்காகவே உலக அளவில் ‘குளோபல் ஃபண்ட்’ என்ற அமைப்பு செயல்படுகிறது. இதுதான் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு எய்ட்ஸ் மருந்துகளுக்கான மானியத்தை அளிக்கிறது. இந்தப் பணம்தான் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புகள் மூலம் பல்வேறு இந்திய மாநிலங்களுக்கும் செல்கிறது.

பல ஆண்டுகளாக சீரிய முறையில் இந்த நிதி வந்துகொண்டிருந்தது. ஆனால், அண்மைக்காலமாக ‘இந்தியா ஒளிர்கிறது’ என்றும், ‘இந்தியா ஒரு முன்னேறிய நாடு’ என்றும், ‘வல்லரசு’ என்றும் உலக அளவில் பிரசாரம் வலுத்து வருவதால் இந்த நிதி கிடைப்பது குறைந்து வருகிறது. மாநில அரசுகளுக்கும் மத்திய அரசோடு ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாததால் தேவையான நிதியைக் கேட்டு வாங்குவதில் சுணக்கம் உள்ளது.

‘‘எய்ட்ஸ் நோய்க்கு சுமார் 32 வகையான மாத்திரைகள் உண்டு. ஹெச்.ஐ.வி வைரஸ் நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை முற்றிலுமாக அழித்துவிடுவதால் பல்வேறு பிரச்னைகளும் ஒரு எய்ட்ஸ் நோயாளிக்கு வரலாம். இதையும் சேர்த்துக் கட்டுப்படுத்த பல கூட்டு மருந்துகளும் உள்ளன. ஆனால், இவ்வகை மருந்துகளை ‘மூன்றாம் நிலை மாத்திரைகள்’ என்பார்கள். இந்தியாவில் இதுவரை கிடைக்காத மாத்திரைகள் இவை. இவற்றையும் கொண்டுவருவோம் என்று அரசு அறிவித்திருந்தது.

ஆனால் அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை. குறைபாடுள்ள எய்ட்ஸ் பரிசோதனைகளும் இதற்குக் காரணம். நம் ஊரில் ஒருவர் எய்ட்ஸ் நோயாளியாக பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டால், ஆயுள் முழுவதும் அவர் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளும் நடைமுறை இருக்கிறது. இது தேவையில்லை. ஒவ்வொரு முறையும் பரிசோதனைகள் செய்து தேவையான அளவு மட்டும் மாத்திரைகளைத் தரலாம். ஆனால் இங்கே எய்ட்ஸ் நோயாளிகளுக்கான வைரல் கவுன்ட் சோதனை செய்யும் கருவியே போதுமான அளவு இல்லை.

விலை குறைவுதான் என்றாலும் இதனை மருத்துவமனைகளில் கொண்டு வர அரசு அக்கறை காட்டவில்லை. இதுவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு மிக முக்கியமான காரணம். மேலும் நிர்வாகக் கோளாறு, எய்ட்ஸ் நோயாளிகள் மீதான மெத்தனம் போன்ற காரணங்களால் மருந்து தட்டுப்பாடு தொடர்கதையாகிவிட்டது. முதலில் இந்தத் தட்டுப்பாடு 2012 டிசம்பர்வாக்கில் தலை காட்டியது. பிறகு 3 மாதம், 6 மாதம் இடைவெளியில் அடிக்கடி தட்டுப்பாடு வந்து தலைவலி கொடுத்தது.

கடந்த வாரம் கூட தமிழகத்தில் எய்ட்ஸ் மாத்திரைகளே இல்லாத அளவுக்கு தட்டுப்பாடு!’’ என்கிற கௌசல்யா, இதனால் ஏற்படும் விளைவுகளையும் விவரிக்கிறார்... ‘‘தமிழகத்தைப் பொறுத்தவரை சுமார் 2 லட்சம் பேர் எய்ட்ஸ் மருந்துகளுக்காக நடையாய் நடக்கிறார்கள். எங்கள் ஆய்வில் சுமார் 43 சதவீதத்தினர் மருந்து இல்லாமல் வெறுங்கையுடன் திரும்புவதாகச் சொன்னார்கள். அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து போக முடியாமலும் பயணச் செலவுக்குப் பணமில்லாமலும் சிலர் மருந்து சாப்பிடுவதை முழுமையாக நிறுத்திவிடுகிறார்கள்.

இந்திய எய்ட்ஸ் நோயாளிகளில் 10 பேரில் ஒருவர் மருந்துப் பிரச்னையால் இறப்பதாகச் சொல்லப்படுகிறது’’ என விவரிக்கிற கௌசல்யா, ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்கிறார். ‘‘எய்ட்ஸ் நோயாளிகள் என்பவர்கள் ஏதோ குற்றவாளிகள் அல்ல. இந்தியாவில் 40 சதவீத எய்ட்ஸ் நோயாளிகள் பெண்கள். அதிலும் 86 சதவீதம் பேர் கணவன் மூலமே இந்த நோயைப் பெற்றவர்கள். இப்படிப்பட்ட பரிதாபத்துக்கு உரிய மனிதர்களை அலைக்கழிக்காமல் மருந்துகளை சீராகக் கிடைக்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை!’’

எய்ட்ஸ் நோயாளிகள் என்பவர்கள் குற்றவாளிகள் அல்ல. இந்தியாவில் 40 சதவீத எய்ட்ஸ் நோயாளிகள் பெண்கள். அதிலும் 86 சதவீதம் பேர் கணவன் மூலமே இந்த நோயைப் பெற்றவர்கள்!

- டி.ரஞ்சித்