உறவெனும் திரைக்கதை



-ஈரோடு கதிர்

கோபம் என்பது அவருக்கு நாளுக்கு நாள் ஒரு நோயாகவே மாறிக்கொண்டிருந்தது. அதுவும் மிக எளிய காரணங்களுக்கான அவரின் கோபம் குறித்து, அருகிலிருந்து பார்க்கும்போது ஆச்சரியமாகவும், அயர்ச்சியாகவும் இருந்தது. அந்தப் பெருங்கோபங்களின் பின்னேதும் பெருங்குற்றங்கள் இருப்பதாய்த் தெரியவில்லை. சாலைகளில் வாகனத்தில் செல்லும்போது, எந்தவித பிரக்ஞையுமின்றி குறுக்காகப் பாய்பவர்கள் மீதும், அவசியமற்று ஹார்ன் அடிப்பவர்கள் மீதும், சவுக்கடிக்கு தெறிக்கும் வலி போல் அவரின் கோபம் துள்ளியெழும்.



வெளிநாடொன்றில் சில மாதங்கள் வசித்துவிட்டுத் திரும்பிய பின்தான், ஒரு ஒட்டுண்ணி போல இந்தக் கோபம் அவரிடம் வளரத் தொடங்கியது. சாலைப் பயணத்தில் அந்த நாட்டில் கடைப்பிடிக்கும் ஒழுக்கம், அவருக்குள் பதிந்து போயிருந்தது. அந்த ஒழுக்க நேர்த்தியிலிருந்து அவர் வெளியேறவேயில்லை.

சாலையில் செல்லும்போது பின்னாலிருந்து அவசியமின்றி யாரும் ஒலி எழுப்பினால், முகம் சட்டெனக் கடுமையாக மாறிவிடும். அவரையும் அறியாமல், ‘‘எதுக்குடா லூசுப் பயலே இப்படி ஹார்ன் அடிக்கிறே!” என்பார். நாளுக்கு நாள் சாலை ஒழுங்கு குறித்தும், ஹார்ன் ஒலி குறித்தும் மிக அதீதமாய் கவனிக்க ஆரம்பித்தார். உச்சபட்சமாய், ஒருமுறை சிக்னலில் நிற்கும்போது அருகில் நின்ற ஆள் ஹாரனை அலறவிட, இவர் ஏதோ சொல்ல, அந்த ஆள் பதிலுக்குப் பேச, சட்டென இறங்கியவர் ஓங்கி அறைந்துவிட, மிகப்பெரிய பிரச்னையாகிப் போனது.



இதுவொரு நோயாகவே மாறிப்போனதை அவரே உணர்ந்தபோது, முடிந்தவரை பயணங்களைத் தவிர்க்க முனைந்தார். நெரிசல் இல்லாத நேரங்களில் சாலைகளில் போகும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டார். எங்கு ஹார்ன் சப்தம் கேட்டாலும், மனசு வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. ‘என்னால் இந்த ஒழுங்கீனங்களை சமாளிக்க முடியவில்லை, என்ன செய்வது?’ என மிகத் தீவிரமாய் யோசித்தபோதுதான் 2014ம் ஆண்டு வெளியான ‘தி ரயில்வே மேன்’ எனும் ஆங்கிலப் படத்தை அவர் யதேச்சையாகப் பார்த்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆப்ரிக்காவில் ரயில் பாதைகள் அமைக்கும் திட்டத்தில் பல வருடங்களும், கல்லூரி விரிவுரையாளராக பல வருடங்களும் பணியாற்றிய எரிக் லொமக்ஸ், மிகப்பெரியதொரு ரயில் காதலர். தெளிந்த நீரோடை போலச் செல்லும் அவருடைய வாழ்நாளின் பெரும்பகுதியில், நினைவுகளிலிருந்து கனவுகள் வரை ‘நகாஸி’ எனும் ஜப்பானிய ராணுவ வீரன் விரட்டி விரட்டி துன்புறுத்துகிறான். அது மிகப்பெரும் வதை. அந்தத் துன்புறுத்தலால் அவருடைய தினசரி நிகழ்வுகள் பாதிக்கப்படுகின்றன.

மனச் சிதைவுக்குள்ளானவர் போல மாறுகிறார். மனைவியிடம் எதுவும் சொல்ல மறுக்கிறார். அவரின் துன்பம் கண்டு நண்பர்கள் கலங்குகிறார்கள். இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராணுவத்தில் தகவல் தொடர்புப் பிரிவில் பணிபுரிந்த லொமக்ஸ், ஜப்பான் படையிடம் போர்க் கைதியாகப் பிடிபடுகிறார். போர்க் கைதிகளை தாய்லாந்து-பர்மா இடையிலான சயாம் மரண ரயில் பாதைத் திட்டத்தில் பணியமர்த்துகிறது ஜப்பான் ராணுவம். ‘பணியமர்த்துகிறது’ எனும் வார்த்தை மிக மென்மையானதாகத் தோன்றலாம்.

காலம் காலமாய் கொத்தடிமைகளை, போர்க் கைதிகளை நடத்திய விதங்களை வரலாறுகளில் படித்தவர்கள், திரைப்படங்களில் பார்த்தவர்களே மிரண்டுபோகும் அளவிற்கு சித்திரவதை நிறைந்த வேலை. ‘எங்கே இருக்கிறோம்’ என்பதே தெரியாத வதை அது! ‘ஜப்பானியர்கள் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் செய்த அக்கிரமங்களுக்குப் பொருத்தமான தண்டனைதான் ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சுகள்’ என்று ஒரு பேச்சு இருப்பதை முழுமையாகப் புறந்தள்ளிவிட முடியாது.

லொமக்ஸ் உள்ளிட்ட நண்பர்கள் கைதானபோது பத்திரப்படுத்திய சில பொருட்களை வைத்து, அங்கிருக்கும் லாரி ஒன்றில் மின்சாரம் எடுத்து ஒரு ரேடியோ தயாரிக்கிறார்கள். ரேடியோ மூலமாக ஹிட்லரின் பின்னடைவுகள், பிரிட்டிஷ் படைகளின் நகர்வுகளைக் கேட்டு, தாம் மீட்கப்படுவோமென நம்பிக்கை கொள்கிறார்கள். அதோடு தன்னிடமிருக்கும் வரைபடத்தை வைத்து, ‘தற்போது எங்கே இருக்கிறோம்’ என்பதை நண்பர்களோடு பகிர்ந்துகொள்கிறார்.

அந்த ரேடியோ பிடிபடுகிறது. லொமக்ஸ் உள்ளிட்ட நண்பர்களிடம் கடுமையான விசாரணை நடக்கிறது. மற்றவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, லொமக்ஸ் ‘நான்தான் அதைச் செய்தேன்’ என ஒப்புக்கொள்கிறார். அந்த ரேடியோ மூலம் சீனப் படைக்கு தகவல் அனுப்பியதாக ஜப்பான் ராணுவம் வதைக்கிறது. ‘அது ரிசீவர் மட்டுமே, ட்ரான்ஸ்மிட்டர் கிடையாது. கேட்க மட்டுமே முடியும், எதையும் அனுப்பமுடியாது’ என எவ்வளவோ சொல்லியும் மிகக்கடுமையான வதைக்கு உள்ளாக்கப்படுகிறார் அவர்.

வக்கிரம் மிகுந்த வதையும் அடியும் கொடுமையும் தொடர்கிறது. அந்த வதைக்குக் காரணமாய் இருந்த ஜப்பானிய ராணுவ (மொழிபெயர்ப்பு) அதிகாரி நகாஸி என்பவன்தான் லொமக்ஸின் வாழ்நாள் முழுவதும் நினைவிலும், கனவிலும் துரத்துகிறான். அந்த துரத்தலிலிருந்து மீள முடியாத லொமக்ஸிற்கு, ஒரு கட்டத்தில் தாய்லாந்து பகுதியில் போர் நினைவகத்தில் சுற்றுலா வழிகாட்டியாக நகாஸி இருப்பது தெரிய வருகிறது. ‘நேரில் சென்று அவனைக் கொன்றுவிடுவதே, இந்த உளச்சிக்கலுக்கு தீர்வு’ என்று நண்பர் வலியுறுத்துகிறார்.

நகாஸியைக் கொலை செய்யும் விருப்பத்தோடு லொமக்ஸ் தாய்லாந்து பயணிக்கிறார். தான் சித்திரவதை செய்யப்பட்ட கொட்டடியிலேயே நகாஸியைச் சந்திக்கிறார். ‘போர் முடிவில் ஜப்பான் படையினர் அனைவரும் பிரிட்டிஷ் படையிடம் பிடிபட்டபோது நகாஸி மட்டும் தப்பித்தது எப்படி’ எனக் கேட்கிறார். தான் வதைபட்டு, சித்திரவதை செய்து தண்டிப்பட்ட அதே இடத்தில் நகாஸியைக் கொல்லத் தீர்மானிக்கிறார். தன் அத்தனை கோபங்களையும், அத்தனை வருட வதைகளையும், நகாஸியை வதைத்துக் கொலை செய்வதன் மூலமாக தணித்திட விரும்புகிறார்.

அந்த தண்டனைக்கும் கொலைக்கும் அமைதியாக நகாஸி தயாராகும் கணத்தில், சொற்களில் கோபத்தை இறக்கி வைத்து சமாதானமாகிறார் லொமக்ஸ். கொலை செய்ய வைத்திருந்த கத்தியை ஆற்றில் வீசுகிறார். மனைவியோடு ஊர் திரும்ப ஆயத்தமாகிறார். தன்னைப் போன்ற போர்க் கைதிகள் உருவாக்கிய நகரத்தீ கணவாயில் நகாஸியை மீண்டும் சந்திக்கிறார். அழுதபடி நகாஸி மன்னிப்பு கோருகிறார். லொமக்ஸ் நகாஸியை அணைத்தபடி முழுவதுமான மன்னிப்பு வழங்குகிறார்.

காலம் இருவருக்குள்ளும் நட்பைப் பூக்கச் செய்கிறது. கடிதங்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். சந்தித்து உறவாடுகிறார்கள். முதுமையெய்தி இறந்துபோகும் காலம் வரைக்கும் நட்பில் இணைந்திருக்கிறார்கள். மற்ற திரைப்படங்களைப் போல, இதையும் ஒரு படமாகக் கருதி, இதெல்லாம் திரைக்கதைகளில் சாத்தியமெனக் கடந்துவிட முடியாது. காரணம், இது எழுதப்பட்ட திரைக்கதை மட்டுமல்ல. எரிக் லொமக்ஸும், நகாஸியும் உண்மையாய் வாழ்ந்த மனிதர்கள்.

ராணுவப் பணியாற்றலும், கைதியாக வதைக்கப்பட்டதும், வாழ்நாள் முழுதும் வதை சுமந்ததும், நகாஸி குற்றவுணர்வைச் சுமந்ததும், நகாஸியை மன்னித்ததும், நட்பு பூண்டு வாழ்ந்திருந்ததுவுமென எல்லாமே உண்மையாய் நிகழ்ந்தவை. திரைக்கதைகளுக்கே சாத்தியமெனும் எத்தனையோ சம்பவங்கள் உண்மையாகவும் நடப்பதை மறுக்க முடியாது. படம் பார்த்த நண்பரிடம், லொமக்ஸ் வழங்கிய மன்னிப்பு பெரும் சலனத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். உறைந்திருந்தார். ‘‘மன்னிக்க கத்துக்கணும்’’ என்றார்.

சில நாட்களில் இயல்பாய் பயணங்களை மேற்கொள்வதாகவும், குறுக்காகப் பாய்ந்தவர்களை உறுத்துப் பார்த்து புன்னகைப்பதாகவும் சொன்னார். ஒருமுறை முக்கிய சாலையொன்றில் சென்ற சவ ஊர்வலத்தில் அறிவீனமாக ஒரு ஆள் பட்டாசுக் கட்டைக் கொளுத்தி வைத்திருக்கிறார். பட்டாசு வெடித்துச் சிதறுகையில், தெறித்து வந்த நெருப்புத் துகளொன்று கண்ணாடி இறக்கப்பட்ட காருக்குள் சென்ற அவரின் தோள்பட்டை அருகே சட்டையை பொத்தலிட்டுச் சுட்டிருக்கிறது.

காரை நிறுத்திவிட்டு நிதானமாக இறங்கி வந்தவர், கையில் பட்டாசுக் கட்டு வைத்திருந்த ஆளை அழைத்திருக்கிறார். புரியாமல் வந்தவனிடம் தன் தோள்பட்டையைக் காட்டி, நடந்ததைச் சொல்லியிருக்கிறார். பறையடித்த கூட்டம் மௌனிக்க, ஒட்டுமொத்த ஊர்வலத்தின் பார்வையும் அங்கு குவிந்திருக்கிறது. சாவு நடந்த குடும்பத்திற்கு நெருக்கமான யாரோ ஓடிவந்து அவரிடம் சமாதானம் பேச, நிதானமாக தான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார்.

‘நிதானமும் மன்னிப்பும் தவத்திற்கு நிகரானது’ என்கிறார் அவர் இப்போது! இங்கு தவறோ, குற்றமோ செய்யாதவர்கள் எவருமுண்டா? தமக்கெதிராக தவறும், குற்றமும் நிகழ்த்தப்படும்போது, குறைந்தபட்ச எதிர்வினையாக கோபம் பொங்குவதை ‘நியாயமற்றது’ என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அந்த நிலையில் அதுதான் ஒருவகையான வலி நிவாரணியும்கூட. அந்த வலி நிவாரணிகள் அப்போதிருக்கும் வலிகளை மட்டுப்படுத்தலாம்.

ஆனால் வலிக்கு பிரதானமாய் இருக்கும் சிதைவு மற்றும் காயத்தை வெறும் வலி நிவாரணிகளால் மட்டுமே ஆற்றிவிட இயலாது. வலி நிவாரணிகள் எப்போதும் பக்க விளைவுகளை ஏற்படுத்துபவை! தண்டிப்பதற்கு அதிகாரம், உடல் வலு, பொருளாதார வசதி மட்டுமே போதும். ஆனால் மன்னிப்பதற்கு வீரமும், தெளிவும், மிகப்பெரிய மன வலுவும் தேவை. காரணம், மன்னிப்பு என்பது வெறும் வலி நிவாரணி மட்டுமல்ல. அது, சிதைவைத் தடுத்து மீட்பதற்கும், காயத்தை ஆற்றுவதற்குமான மருந்து!

எந்தவித பிரக்ஞையுமின்றி குறுக்காகப் பாய்பவர்கள் மீதும், அவசியமற்று ஹார்ன் அடிப்பவர்கள் மீதும், சவுக்கடிக்கு தெறிக்கும் வலி போல் அவரின்  கோபம் துள்ளியெழும்.

தண்டிப்பதற்கு அதிகாரம், உடல் வலு, பொருளாதார வசதி மட்டுமே போதும். ஆனால், மன்னிப்பதற்கு வீரமும், தெளிவும், மிகப்பெரிய
மன வலுவும் தேவை.

(இடைவேளை...)

ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி