கப்பலில் வருது கபாலி பொம்மை!



தமிழகத்தின் இயல்பு வாழ்க்கையே ‘கபாலி’யால் தலைகீழாகி இருக்கிறது. விமானங்கள் முதல் கார் வரை எல்லாமே ‘கபாலி’ கெட்டப்புக்கு மாறிக்கொண்டிருக்கின்றன. இப்படி ‘கபாலி’ ரிலீஸில் ‘மகிழ்ச்சி’ கொண்டிருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு இன்னொரு  குட் நியூஸ். சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் போன்ற ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் மினியேச்சர் பொம்மைகள் போல, ‘கபாலி’ ரஜினியின் மினி சிலையும் இனி மார்க்கெட்டுக்கு வரப்போகிறது.



சீனாவில் இருந்து இதை ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்து வரவழைத்திருக்கிறார் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு. ‘‘மலேசியா ஷூட்டிங் அப்போ அங்கே பார்த்து வந்த ஐடியா இது! சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் கேரக்டர்களின் பொம்மைகள் அங்க வச்சிருந்தாங்க. பார்க்கவே ரொம்ப அட்ராக்‌ஷனா இருந்தது. இது குழந்தைகள் விளையாடக்கூடியதுனு சொன்னாங்க. ரஜினி சாரை அப்படி ரெடி பண்ணினா எப்படி இருக்கும்னு உடனே யோசிச்சோம்.

அப்புறம் என்ன..? ‘கபாலி’ ரஜினி சிலை ரெடி!’’ என ரசனையும், பரவசமுமாகப் பேசுகிறார் ‘வி கிரியேஷன்ஸ்’ சி.இ.ஓவான டி.பரந்தாமன். ‘கபாலி’ படப்பிடிப்பில் ஏ டூ இசட் ரஜினியுடன் கூடவே இருந்தவர் இவர்.



‘‘ரொம்ப அசத்தலா இருக்கே?’’
‘‘நன்றிங்க. இப்படி சிலைகள் தயாரிக்கறதுல சீனா முதலிடத்துல இருக்கு. ஸ்போர்ட்ஸ் ஹீரோக்கள், ஹாலிவுட் ஹீரோக்கள்னு எல்லா சிலைகளையும் அவங்க ரெடி பண்ணி உலகம் முழுக்க விற்கறாங்க. நாம போட்டோ மட்டும் கொடுத்தா போதும்... பக்காவா சிலையை ரெடி பண்ணிடுறாங்க. ரஜினி சாரின் போட்டோவை அச்சு அசலா அதே மாதிரி பர்ஃபெக்‌ஷனோட ஃபிகரின்களா ரெடி பண்ணிட்டாங்க. இதுக்காக ரெண்டு மூணு நிறுவனங்களிடம் தனித்தனி கெட் அப்களைக் கொடுத்திருந்தோம்.

அவங்க சாம்பிள்களை செய்து அனுப்பினாங்க. எல்லாரும் ஈஸியா வாங்கக்கூடிய விலையிலயும் முழு தரத்தோடவும் செய்து கொடுக்கிற நிறுவனத்தை ஃபில்டர் பண்ணி அவங்ககிட்ட ஆர்டர் கொடுத்துதான் இப்போதுள்ள சிலையை கொண்டு வந்திருக்கோம். ஒவ்வொரு சிலையும் ஆறரை இன்ச் உயரம் இருக்கும். ஸ்டைலான ரஜினி சாரின் போஸோடு, ‘கபாலி’ எனப் பொறிக்கப்பட்டிருக்கும். முத்தூட் ஃபின் கார்ப், ஷாப் சி.ஜெ., அமேஸான் ஆகிய நிறுவனங்கள் மூலம் இதை விற்பனை செய்யப் போறோம்.

விற்பனை விலை தோராயமா ஆயிரம் ரூபாய் இருக்கலாம். இப்போ எங்கள் கையில இருக்குறது சாம்பிள்தான். சிலைகள் ரெடியாகி சீனாவில் இருந்து கப்பலில் அனுப்பிட்டாங்க. சென்னைக்கு இன்னும் வந்து சேரல. ‘கபாலி’ படப்பிடிப்பு முடிஞ்ச பிறகுதான், சிலைகள் ரெடியானது. அதன் போட்டோக்களை ரஜினி சாருக்கு அனுப்பி வச்சோம். ரொம்ப சந்தோஷப்பட்டார். சிலைகள் தவிர, ‘கபாலி’ 3டி போட்டோஸ், மொபைல் கவர்கள், ஸ்டைல் போஸ்டர்ஸ்னு வெரைட்டியா விற்பனைக்குக் கொண்டு வர்ற ஐடியாவும் இருக்கு!’’

‘‘எப்படி இருக்கார் ரஜினி..?’’
‘‘நல்லா இருக்காருங்க. ‘கபாலி’ முழுவதும் ரஜினி சாரோட நான் ட்ராவல் பண்ணினது இனிமையான அனுபவம். சாரைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்ட தருணங்கள் நிறைய. மலேசியாவில் கொளுத்துற வெயில்ல ஷூட்டிங் போகும்போது, ரசிகர்கள் நிறைய பேர் அவரைப் பார்க்கறதுக்காக ரோட்டோரத்துல வெயிட் பண்ணிட்டிருப்பாங்க. அதிலும் சிலர் ரஜினி சாரையெல்லாம் நம்மளால பார்க்க முடியுமானு ஒரு ஓரத்துல எங்கேயாவது தயங்கித் தயங்கி நின்னுட்டிருப்பாங்க.

அப்படி ஆட்களை ரஜினி சார் கவனிச்சிட்டார்னா போதும்... அப்படியே அவங்க முன்னாடி போய் நின்னு சர்ப்ரைஸ் கொடுப்பார். எண்ணங்கள்ல அவர் ரொம்ப தூய்மையானவர். மலேசியா ஷூட்டிங் முடிச்சு, இந்தியா திரும்புறதுக்காக ஏர்போர்ட்டுக்கு சாரோட கார்ல போய்க்கிட்டிருந்தேன். அது 12 ட்ராக் ரோடு. கார்கள் படு வேகமா போய்க்கிட்டிருந்தன. எங்க காரை ஒருத்தர் தன்னோட டூவீலர்ல ஃபாலோ பண்ணினார். எங்க கார் போன அதே ஸ்பீடுக்கு அவரும் பின் தொடர்ந்து வந்தார்.

எங்க டிரைவர்கிட்ட, ‘கொஞ்சம் கார் ஸ்பீடைக் குறைங்க. மெதுவா போங்க’னு ரஜினி சார் சொன்னார். காரோட ஸ்பீட் குறையவும், அந்த ரசிகர் காரை ஒட்டியே பைக்ல வந்தார். ரஜினி சார், கார் கண்ணாடியை இறக்கி, ‘ஏர்போர்ட் போறோம். ரொம்ப அர்ஜென்ட்’னு சைகையில அவர்கிட்ட சொன்னார். அதன்பின் அந்த பைக் பின்தொடரலை. அந்த ரசிகர் புரிஞ்சிக்கிட்டு எங்களை ஃபாலோ பண்ணலைன்னு நினைச்சோம்.

ஆனா, ஏர்போர்ட் போனதும், எங்களுக்கு முன்னாடியே அந்த ரசிகர் நின்னுட்டிருந்தார். ரஜினி சாரும் அவரைக் கூப்பிட்டு, ‘இவ்வளவு வேகமா வண்டி ஓட்டக்கூடாது. சேஃப்டி ரொம்ப முக்கியம்’னு கண்டிப்போட சொல்லிட்டு, அவரோடு செல்ஃபியும் எடுத்து சந்தோஷப்படுத்தினார். ரசிகனோட உயிர் பாதுகாப்பு ரொம்ப முக்கியம்னு கருதுற அவரோட பண்பு, இன்னும் என்னை அவரோட தீவிர ரசிகரா ஆக்கிடுச்சு!’’

‘‘ஏர்- ஏஷியா விமானத்துல ‘கபாலி’ ஸ்டிக்கரை ரஜினி பார்த்தாரா?’’
‘‘அக்டோபர்ல படப்பிடிப்பு போயிட்டிருக்கும்போதுதான், அப்படி ஒரு ஐடியா தோணுச்சு. ஏர் ஏஷியா வெளிநாடுகள்ல பிஸியான ஏர்வேஸ்னாலும் இந்தியாவில் அதோட ரீச் இன்னும் முழுமையா சேரல. சீனாவில் அந்த நிறுவனத்தினரை சந்திச்சோம். எங்களோட அப்ரோச் அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. மினியேச்சர் ‘கபாலி ஃபிளைட்’ ரெடி பண்ணிக் காட்டினாங்க. ஷூட்டிங்கில் இருந்த ரஜினி சார்கிட்ட காட்டினோம். ஆனா, இப்போ நிஜ ஃபிளைட் இன்னும் பிரமாண்டமா இருக்கு. அதோட படங்களையும் சாருக்கு அனுப்பி வச்சோம். சார் சந்தோஷப்பட்டிருக்கார். மகிழ்ச்சி.’’

- மை.பாரதிராஜா
படங்கள்: பரணி