குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி
ஓவியங்கள்: அரஸ்


ஒன்றரையணா டர்ன் ஓவர் பண்ற டீக்கடையில கூட சில்லறைகள் குளிக்கிற  கல்லாவ ஃபோகஸ் பண்ணி கேமரா வைக்கிறாங்க. தீபாவளிக்கு செஞ்ச பலகாரத்த பொங்கல் வரைக்கும் வச்சு விக்கிற ‘கணபதி ஐயர்’ டைப் பேக்கரிகள்ல கூட கண்ணாடி கிளாஸ் காணாம போகுதான்னு கண்டுபிடிக்க கேமரா வைக்கிறாங்க. பேசறதுக்காக கண்டுபிடிச்ச மொபைல் போன்களில் எல்லாம் இப்ப சினிமாவே எடுக்கிற அளவுக்கு பல ஆப்ஷன்களோட ஹை-ரெசல்யூஷன்ல கேமரா வைக்கிறாங்க.



டிவிடி பார்க்கவும் ஃபேஸ்புக் நோண்டவும் மட்டுமே பல சமயங்களில் பயன்படும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில்கூட கேமரா வைக்கிறாங்க. எல்லாத்தையும் காக்கும் சாமிய நம்ம சிலைத் திருடர்களிடமிருந்து காவல் காக்கறதுக்காக கோயில் கருவறையிலயே கேமரா வைக்கறாங்க. துணிக்கடையில கேமரா வச்சாங்க; சில துணிக்கடைக்காரங்க துணி டிரையல் பார்க்கிற ரூமுக்குள்ள கூட கேமராவை வச்சாங்க. பணக்கார கல்யாணங்களில் தலைக்கு மேல ஹெலிகேம் கேமராவெல்லாம் பறக்குது.

நாம மாசத்துல சம்பாதிக்கிறத ஒரு நாள்ல சம்பாதிக்கிற முதலாளிங்க எல்லாம் வீட்டுக்குள்ளயே ரூமுக்கு ஒரு கேமரா வைக்கிறாங்க. வருஷத்துல நாலு தடவை விசேஷத்துக்கு போட நகையை எடுக்கிற பீரோ லாக்கருக்குள்ள எல்லாம் கேமரா வைக்கிறாங்க. இப்படி பேனாவுல, சட்டை பட்டன்ல, கார் சாவி - பைக் சாவியில, ரிமோட் கன்ட்ரோல்ல, வாட்ச், மோதிரத்துல எல்லாம் கூட ‘டெக்னாலஜி டெவலப்ட் வெரி மச்’னு கடுகு சைஸ்ல கேமரா வைக்கிறாங்க, ஆனா வைக்க வேண்டிய இடத்துல எல்லாம் வைக்காம விட்டுடுறாங்க.

அட, வெளிப்படையாவே சொல்றோம்... ஜெகஜ்ஜால சாமியார் பெட்ரூம்ல கூட கேமரா வைக்கிறாங்க; ஆனா பொதுமக்கள் தினம் பொழங்குற பிளாட்பாரத்துல கேமரா வைக்க மாட்டேங்கறாங்க. சினிமா தியேட்டர்ல கார்னர் சீட் கசமுசாவெல்லாம் பதிவாகுற மாதிரி கேமரா வைக்கிறாங்க; ஆனா கோர்ட்டுல வந்து வக்கீலையே குத்திட்டு போறாங்க. அங்க ஒரு கேமரா வைக்க மாட்டேங்கறாங்க. மொத்தத்துல கேமராவும் நம்மூரு அரசியல்வாதிகளாட்டம் ஆயிடுச்சு. எங்க வைக்கணுமோ அங்க வைக்காம... எது வைக்கத் தேவையில்லாத இடமோ, அங்க வச்சிடுறாங்க.

பொதுவா நம்ம மக்கள் எதுக்கெல்லாம் தலை குனியறாங்கன்னு கண்டுபிடிக்க நினைச்சோம். உடனே, ‘முடி வெட்டுறப்ப தலை குனியறது... மொட்டையடிக்கிறப்ப தலை குனியறது’ன்னு எல்லாம்  சொல்லி காத்தடிக்கிற காலத்துல காதுல அடிக்காதீங்க.

* கல்வியறிவு 75% தாண்டினாலும், இன்னமும் நம்மில் பலர் பின்னால யாரு வரான்னு பார்க்காம ‘புளிச்’னு எச்சில் துப்பி சலவை சட்டையில் அபிஷேகம் பண்றோமே...  அதுக்குத் தலைகுனியறோமா? இல்லை!
* பொஞ்சாதிய தூக்கி வச்சு ஆடினாக்கூட வாழ்க்கை நல்லாயிருக்கும்; பொறந்த சாதிய தூக்கி வச்சு ஆடிக்கிட்டு இருக்கோம்... அதுக்காக  தலைகுனியறோமா? இல்லை.
* டிராபிக் ரூல்ஸை மதிக்காம தாறுமாறா ஏதோ குற்றாலம் ஃபால்ஸ்ல குளிக்கப் போற மாதிரி ஆனந்தமா போறோமே, அதுக்காக தலைகுனியறோமா? இல்லை.
* வீட்டுக்கு ரெண்டு பேரை ஐடி கம்பெனிகளுக்கு கொடுத்தாலும், இன்னமும் அமெரிக்க ஜனாதிபதி முருகேசன்னு நம்பிக்கிட்டு அரைகுறை பொது அறிவோட திரியுறோமே, அதுக்காவாவது தலைகுனியறோமா? இல்லை.
* விளைநிலங்களை விலைநிலங்கள் ஆக்கிட்டாங்கன்னு டைமிங்கில ரைமிங் பேசிக்கிட்டு ட்விட்டர், ஃபேஸ்புக்ல பொங்கிக்கிட்டும் புரட்சி பண்ணிக்கிட்டும் திரியுறோமே தவிர,  உணவளிக்கிற விவசாயத்துக்கு நம்ம பங்களிப்பு ஒண்ணுமில்லையேன்னு தலைகுனியறோமா? இல்லை.
* குப்பையையும் சரி, தொப்பையையும் சரி... கூட்டுறோமே தவிர என்னிக்காவது குறைச்சிருக்கோமா? ஊரையும் உடலையும் கட்டுப்பாடா  வைக்க முடியலைன்னு என்னைக்காவது தலைகுனியறோமா? இல்லை.
* சாம்பார்ல போடுற பருப்பளவுக்கு கூட சமுதாயத்து மேல நமக்கு பொறுப்பு இல்லை, அதை நினைச்சு எப்பவாவது தலைகுனியறோமா? இல்லை.
* பெண்களிடம் காதலைக் கொட்டுற அளவு கொஞ்சமாவது கௌரவத்தைக் காட்டுறோமா? பெண்ணைப் போற்றத் தெரியாத ஒரு சமூகம் மக்கி மண்ணோடதான் போகும்னு இதிகாசங்கள் சொல்லித் தந்தும் இரும்படிக்கிற இடத்துல ஈயாட்டம் இருக்கோமே, அதுக்காக தலைகுனியறோமா? இல்லை.

பொதுவா, நம்ம பசங்களும் பொண்ணுங்களும், ஏன்... பெரியவர்களும் இதுக்கெல்லாம் தலை குனியாம எதுக்காக தலை குனியறோம் தெரியுமா? தெரிஞ்சுக்குங்க, நாட்டுல பல பேரு தலை குனியறது செல்போனை நோண்ட மட்டும்தான்!

அடுத்தவர்கள் மதிக்க என்ன செய்யலாம்? அடுத்தவர் கண்களுக்கு அழகாய் தெரிய என்ன பண்ணலாம்? மொசைக் தரைக்கும் மார்பிள் தரைக்கும் பாலீஷ் போடுவது போல முகத்தை ஃபேஷியல், பிளீச்சிங் என பாலீஷ் போடலாம். கழுத்து, காது, கை விரல்கள் என சூரியன் படும் இடங்களில் எல்லாம் தங்க நகைகளை மாட்டி கவர்ந்து இழுக்கலாம். கண்களில் கூலிங் கிளாஸ் அணியலாம், கைகளில் ரோலக்ஸ் வாட்ச் அணியலாம். பைக்குக்கான வசதி இருந்தும், கார் வாங்கி கலக்கலாம்.

‘எனக்கு கவுன்சிலரை தெரியும்... கலெக்டரை தெரியும்’ என உதார் விட்டு ஊருக்குள் உலா வரலாம்.  நம்மைப் பற்றி பப்ளிசிட்டி செய்து புகழ் பரப்ப பதினோரு பேர் கொண்ட குழுவை அமைத்து உலகெங்கும் ஒளிபரப்பு செய்யலாம். எப்போதும் நாலு கைத்தடிகளுடன் வந்து கெத்து காட்டலாம். பெரிய மனிதர்களுடன் போட்டோ எடுத்து ஹாலில் மாட்டி, வீட்டுக்கு வருபவர்களை வாய் பிளக்க வைக்கலாம்.

விலையுர்ந்த துணிமணிகளை வாங்கிப் போட்டு நடமாடலாம். வில்லங்க வித்தியாச ஹேர் ஸ்டைல் போட்டு விளம்பர மாடலாய் வெளியே தெரியலாம். இதையெல்லாம் விட, செலவில்லாமல் அழகாகவும் மதிப்பாகவும் தெரிய... சந்திப்பவர்களிடம் எல்லாம் கொஞ்சம் அன்பாய்ப் பேசலாம்.