நியூஸ் வே



* தனது சுயசரிதையான ‘Ace against Odds’ நூலை சல்மான் கான் வந்து வெளியிட்டதில் சானியா மிர்சா ரொம்பவே ஹேப்பி! ‘டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் ஆண் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் பரிசுத்தொகை தர வேண்டும்’ என வலியுறுத்தி வரும் சானியா, தன் வாழ்க்கைப் போராட்டங்களை இந்த நூலில் சம்பவங்களாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்.



இந்த ஒலிம்பிக்ஸில் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் பதக்க வாய்ப்பு இருப்பதாக நம்பும் சானியா, ‘‘இந்தியாவுக்காக விளையாடுவது போன்ற அழுத்தம் மிகுந்த பணி வேறு எதுவுமில்லை. ஆனால் இந்த பிரஷர் எனக்குப் பழகி விட்டது’’ என்கிறார்.

* உகாண்டா அதிபர் யோவெரி முசுவெனி செய்த ஒரு போன்கால் இப்போது உலக வைரல். ஒரு விழாவில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியவர், கெய்ரும்பா என்ற கிராமம் அருகே வண்டியிலிருந்து திடீரென இறங்கி நடுரோட்டில் ஒரு சேரில் அமர்ந்து போன் பேசலானார். இதை அவரது அதிகார பூர்வ ஃபேஸ்புக் தளத்தில் வெளியிட, சும்மா இருப்பார்களா நெட்டிசன்கள்? அந்தப் படத்தை போட்டோஷாப் மூலம் விதவிதமாக வெட்டி ஒட்டி நக்கலடித்து வருகின்றனர்.

* ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட சுற்றுச்சூழல் போராளி பியூஸ் மனுஷ் சேலத்தில் வசிக்கிறார். சேலம் மற்றும் தர்மபுரி பகுதிகளில் மக்கள் துணையோடு பல்வேறு ஏரிகள், புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளை மீட்டுக்கொடுத்த பெருமை மனுஷின் ‘சேலம் சிட்டிசன் ஃபோரம்’ அமைப்புக்கு உண்டு.



சமீபத்தில் சேலம் முள்ளிவாடி ரயில்வே கேட்டை ஒட்டிய பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களோடு போராடிய மனுஷை கைது செய்த காவல்துறை, அவரை பிணையில் வரமுடியாதபடி செய்திருக்கிறது. கைதுக்குப் பிறகு அவரை சிறையில் காவலர்கள் அடித்ததாகவும் அவரது மனைவி ஊடகங்களிடம் முறையிட்டிருக்கிறார். சேலம் வினுப்பிரியா தற்கொலை போன்ற பிரச்னைகளில் போராடியதால்தான் மனுஷ் இப்போது இப்படிப் பழிவாங்கப்படுகிறார் எனச் சொல்லி களத்தில் இறங்கியிருக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

* பிரியங்கா காந்தி, நடிகர் ராஜ் பாபர் என கிசுகிசுக்கள் பரவ, யாருமே எதிர்பார்க்காதபடி ஷீலா தீட்சித்தை உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் வேட்பாளர் ஆக்கியுள்ளது காங்கிரஸ். மூன்று முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா, பஞ்சாப்பில் பிறந்து உத்தரப் பிரதேச மருமகள் ஆனவர். உ.பி.யின் கனோஜ் தொகுதி எம்.பி.யாக அரசியல் வாழ்வைத் துவங்கியவர்.

அங்கு கிடைத்த தோல்வி அவரை டெல்லிக்கு அனுப்பியது. இப்போது டெல்லியில் கிடைத்த தோல்வி அவரை மீண்டும் உ.பி. அரசியலுக்கு அனுப்பியுள்ளது. ‘‘பிராமணர்கள் ஓட்டைக் கவர்வதற்கான முயற்சி இது’’ என சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

* பிரபல எழுத்தாளர்களை ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைத்து, அங்கே விருந்தினர் அறையில் தங்கியபடி எழுத வைக்கிற புதுமையைச் செய்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி. இந்தியாவின் மிகப்பெரிய மாளிகையும், அதன் அழகிய வடிவமைப்பும், கண்கவர் பூங்காக்களும் கற்பனைக் குதிரையை வேகமாகப் பறக்கவிடும் அல்லவா? இந்தத் திட்டத்தின்படி முதல் நபராக ஜனாதிபதி மாளிகை போனவர், அமிதவ் கோஷ். அவரது மனைவியும் எழுத்தாளருமான டெபோரா பேக்கரும் உடன் போயிருந்தார்.

* மீரட் கோர்ட்டில் ஒரு விசித்திரமான குடும்பநல வழக்கு. அர்ஷத் பத்ருதின் என்பவர் தன் மனைவி மீது புகார் மனு அளித்திருக்கிறார். ‘‘எனக்கும் என் மனைவி சகானாவுக்கும் 2001ல் திருமணம் ஆனது. இஸ்லாத்தில் தீவிர பற்று கொண்டதால் நான் தாடியை மழிப்பதில்லை. ஆனால், திருமணமானதில் இருந்தே என் மனைவி என்னை ஷாருக்கான், சல்மான்கான் போல் ஷேவ் செய்ய வற்புறுத்தி வருகிறார்.

மேலும் அவர் தனது ஸ்மார்ட் போனில் காலையும் மாலையும் சாட் செய்தபடியே இருக்கிறார். இதையெல்லாம் தட்டிக்கேட்டால் எங்கள் நான்கு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டுகிறார்!’’ என்கிறது அவரது மனு. ஷேவ் பண்ணாததுக்கெல்லாம் சாவா?

* கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் அது பற்றிய தகவல் தந்து வரி கட்டினால் பொது மன்னிப்பு தரும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. செப்டம்பர் 30ம் தேதி இதற்குக் கடைசி நாள். இதற்காக நிறைய விளம்பரம் செய்யும் மத்திய அரசு, விமானப் பயணங்களில் இப்போது தரும் போர்டிங் பாஸ்களில் இந்த விவரத்தை அச்சிட்டுள்ளது. விமானத்தில் போகிறவர்கள் மட்டும்தான் கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்களோ!

* ஜப்பானில் விளையும் மிக அரிதான ரூபி ரோமன் திராட்சைப் பழம், உலகிலேயே மிக காஸ்ட்லியான திராட்சை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. 30 திராட்சைகள் இருக்கும் ஒரு 700 கிராம் கொத்து கடந்த வாரம் எக்கச்சக்க விலை விற்றது. ஒரே ஒரு திராட்சையின் விலை 24 ஆயிரம் ரூபாய்.

* பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கல்வி காவிமயமாவது தொடர்கதைதான். அதில் தற்போது ஆணாதிக்கமும் சேர்ந்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் எட்டாம் வகுப்பு பாடத்தில் சாந்த் கன்வர் ராம் எனும் சிந்தி கவிஞரின் பாடல் இடம்பெற்றிருக்கிறது. அதில் பெண்ணின் கடமை தன்னுடைய ஆடவனைப் பின்பற்றுவதுதான் எனச் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

‘‘அந்த மொத்தப் பாடத்திலும் ஆணாதிக்கம் தாண்டவமாடுகிறது!’’ என்கிறார் டெல்லியைச் சேர்ந்த கல்வியாளர் தேவ்யானி பரத்வாஜ். இவர் தலைமையில் ஒரு குழு ராஜஸ்தான் பாடத்திட்டத்தில் மேலும் பல ஆணாதிக்கக் கருத்துக்கள் இருப்பதாகக் கண்டித்திருக்கிறது!

* இன்று உலகமே எமோஜி வழியேதான் பேசிக்கொள்கிறது. ஆடு, மாடு, மரம், மட்டை என அனைத்தையும் சிறுசிறு ஐகான் ஓவியங்களாகப் புரிய வைப்பதுதான் எமோஜி. ஆனால் இதில் இதுவரை டாக்டர், விவசாயி, விஞ்ஞானி, சமையல் நிபுணர் போன்றவர்கள் எல்லாம் ஆண் உருவங்களாகவே இருந்தனர்.

‘‘இளவரசி, மணமகள், ஹேர்கட் போன்றவை எல்லாம் பெண் உருவத்தில் இருக்க இதில் மட்டும் ஏன் ஆணாதிக்கம்?’’ என்ற விமர்சனம் வலுத்திருந்தது. எமோஜிக்களை உருவாக்கும் யுனிகோட் கன்சோர்டியம், இந்தக் குறையைப் போக்கும் விதமாக தற்போது 11 பெண் புரொஃபஷனல் எமோஜிக்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது!

* லாலு பிரசாத் யாதவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க ஒரு முயற்சி துவங்கியது. ‘‘நிறைய நடிகர்களைவிட நான் எந்த விதத்திலும் குறைந்தவன் இல்லை. என்னைப் பற்றி ஒரு படம் எடுத்தால், அதில் நான்தான் ஹீரோவாக நடிப்பேன்’’ என லாலு அதிரடியாக சொல்ல, அந்த முயற்சி அப்படியே டிராப் ஆகிவிட்டது.

* ரவிசங்கர் பிரசாத் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, தனது அறையில் பெரிய திரை ஒன்றை மாட்டியிருந்தார். நாடு முழுக்க செல்போன் டவர்களின் செயல்பாடுகளை அதில் பார்க்கலாம். எங்காவது சேவைக் குறைபாடு இருந்தால், அது திரையில் தெரியும். உடனே அந்தப் பகுதி தொலைத்தொடர்பு அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரிப்பார். இப்போது பிரசாத் சட்ட அமைச்சராகி இருக்கிறார். அவர் என்ன திரை வைப்பார் என எல்லோரும் ஆவலாக எதிர்பார்க்கிறார்கள்.