நியூஸ் வே



* ஒரு வயது பெண் குழந்தையின் வயிற்றிலிருந்து மூன்றரை கிலோ எடை கொண்ட கருவை இரண்டு மணி நேரம் போராடி அகற்றியுள்ளனர் கோவை மருத்துவர்கள். நிஷா என்ற அந்தக் குழந்ைதயின் வயிற்றில் கட்டிதான் இருக்கிறது என நினைத்திருந்தனர் பெற்றோர். ஆனால், ஸ்கேனில் அந்தக் குழந்தைக்குள் ஒரு குழந்தை கருவாய் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டது. ‘‘தாயின் கர்ப்ப காலத்தில் இரண்டு கருக்கள் ஒன்றுக்குள் ஒன்று இணைந்து உருவாகி விடும் அரிதான நிலை இது’’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

* மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாறப் போகிறது. இப்போதைய பெயரின்படி West Bengal என்பது ஆங்கில எழுத்து வரிசைப்படி கடைசியில் வருவதால், மாநிலங்களுக்கான கூட்டங்கள் பலவற்றில் மேற்கு வங்க பிரதிநிதிகளுக்கு கடைசியாகவே பேச வாய்ப்பு கிடைக்கிறதாம். கிழக்கு வங்காளம் பிரிவினைக்குப் பிறகு தனி நாடாகவே ஆகிவிட்ட பிறகு, ‘மேற்கு’ என்ற வார்த்தைக்கு தேவையே இல்லை. எனவே ‘பங்களா’ என பெங்காலியிலும் ‘பெங்கால்’ என ஆங்கிலத்திலும் பெயர் மாற்றம் செய்கிறார்கள். இப்படியாவது முதல் வரிசையில் வந்தால் சரி!

* அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கும் உத்தரப்பிரதேசத்து குக்கிராமத்துக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கிளின்டன் கடந்த 2014ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜப்ரௌலி கிராமத்துக்கு வந்தார். இதனால் கிடைத்த மீடியா வெளிச்சத்தால், இந்த கிராமத்தில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இதனால் கிளின்டன் மீது இப்போதும் அம்மக்கள் நன்றியுடன் இருக்கிறார்கள்.

அவர் மனைவி ஹிலாரி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தெரிந்ததுமே அவருக்காக ஜப்ரௌலி மக்கள் பிரார்த்திக்கத் துவங்கிவிட்டார்கள். எங்கே பார்த்தாலும் ஹிலாரி படத்தைத் தூக்கிப் பிடித்தபடி, ‘‘ஜே’’ கோஷம்தான். ஹிலாரி அமெரிக்க அதிபரானால் தன் கணவரைப் போல அவரும் இந்த கிராமத்துக்கு வருவார், கிராமம் மேலும் முன்னேறும் என எதிர்பார்க்கிறார்கள் இம்மக்கள்!

* திரைப்படங்களுக்கு யு, ஏ, யுஏ எனச் சான்றிதழ் கொடுப்பது போல, ‘க்யூ’ என்ற சான்றிதழையும் கொடுக்கலாம் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் மத்திய சென்சார் போர்டு தலைவர் பலாஜ் நிஹலானி. இந்தியத் திருநாட்டின் பாரம்பரியத்தைக் காப்பாற்றும், நல்ல கருத்தை அடிப்படையாகக் கொண்ட படங்களுக்கு இந்த ‘க்யூ’ சான்றிதழ் கொடுப்பார்களாம். குடும்பத்துடன் வரும் ரசிகர்களுக்கு இது ஒரு சிபாரிசாக அமையுமாம். ‘‘அரசும் தணிக்கைக் குழுவும் திரைப்படங்களை ஒழுக்க விதிக்குள் அடக்க முயற்சிக்கும் அறிகுறியே இது’’ எனச் சாடியிருக்கிறார் இயக்குனர் மகேஷ் பட்!

* ராமர் கோயில், ராமர் பாலம் எனப் புராண மீட்புப் படலம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த லெவல் சென்றிருக்கிறது. ராமாயணத்தில் லக்ஷ்மணனின் உயிரைக் காப்பாற்றியதாகக் கூறப்படும் சஞ்சீவனி மூலிகையை இமயமலை அடிவாரங்களில் அவர்கள் தேடப் போகிறார்களாம். ‘‘இதற்காக முதல் கட்டமாக 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது!’’ எனப் பெருமையாக அறிவித்திருக்கிறார் அம்மாநிலத்தின் மாற்று மருத்துவத்துக்கான அமைச்சர் சுரேந்திர சிங் நேகி. இதைவிட பசிபிக் ஓஷனைக் கடைந்து அமுதம் எடுக்கும் ப்ராஜெக்ட் கொண்டுவந்தால் இன்னும் நிறைய ‘ஒதுக்கலாமே’!

* ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் பூத்திருக்கும் அந்த பிரமாண்ட மலரைப் பார்க்க பெருங்கூட்டம். கேரளாவின் வயநாட்டில் ஆலாட்டில் பகுதியில் இருக்கும் குருகுல தாவரவியல் பூங்காவில் இந்த மலர் பூத்திருக்கிறது. ‘அமோர்போபாலஸ் டைடானம்’ என தாவரவியல் பெயர் கொண்ட இதனை ‘பிணப்பூ’ என்பார்கள். மிக மோசமான நாற்றம் இதிலிருந்து கிளம்பும்.

இந்தோனேஷியாவைத் தாயகமாகக் கொண்ட இந்த செடி அபூர்வமாகவே பூக்கிறது. இரண்டு நாட்கள் மட்டுமே இந்த மலர் வாடாமல் இருக்கும். ‘உலகிலேயே இதுதான் பெரிய பூ’ என ஒரு கோஷ்டியும், ‘இல்லை... இல்லை... இது உண்மையில் பல பூக்களின் தொகுப்பு. எனவே இதைப் பூங்கொத்து எனச் சொல்ல வேண்டும்’ என்று இன்னொரு கோஷ்டியும் இன்னும் அடித்துக்கொள்கின்றன.  ‘

* சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதியை மோசமான வார்த்தைகளால் பேசிய உத்தரப் பிரதேச பா.ஜ துணைத் தலைவர் தயாசங்கர் சிங் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். சிறைக்குச் சென்று ஜாமீனில் வந்தவர், இப்போது மாயாவதிக்கு எதிராக கடும் சவால் விடுத்திருக்கிறார். ‘‘எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் மாயாவதி நிற்கட்டும். என் மனைவி அவரை எதிர்த்துத் தனித்துப் போட்டியிட்டு வெல்வார். என் மனைவிக்கு அரசியல் ஆசைகள் இல்லை. இருந்தும், மாயாவதி ஒப்புக்கொண்டால் இந்தச் சவாலை சந்திக்க அவர் தயார்!’’ என்கிறார்.

* ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரெட் லீ இப்போது அடிக்கடி இந்தியா வருகிறார். கிரிக்கெட் வேலையாக அல்ல! இந்திய-ஆஸ்திரேலிய கூட்டுத் தயாரிப்பான ‘அன்இண்டியன்’ என்ற படத்தில் நடிக்கும் லீ, அந்தப் பட வேலைகளுக்காகவே வருகிறார். ‘‘கிரிக்கெட் வீரர்களால் நல்ல நடிகர்களாக உருமாற முடியும். குறிப்பாக விராட் கோஹ்லி நல்ல நடிகராக வருவார்’’ என்கிறார் அவர்.  ‘

* கூகுள் நிறுவனம் இந்திய ரயில்வேயுடன் இணைந்து ரயில்டெல் என்ற நிறுவனம் மூலம் நாடு முழுவதும் 23 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை வழங்கி வருகிறது. ‘‘மாதம்தோறும் 20 லட்சம் பேர் இதன்மூலம் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்’’ என்று கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார். சராசரியாக ஓர் இந்தியர் நாள் முழுக்க பயன்படுத்தும் டேட்டாவைப் போல 15 மடங்கு அதிக டேட்டாவை ரயில் நிலையங்களில் பயன்படுத்துகிறார்கள் நம் மக்கள். இந்த வருட இறுதிக்குள் மேலும் 100 ரயில் நிலையங்களுக்கு வரப் போகிறது வைஃபை சேவை.

* சர்வதேச அரங்கில் இந்தியர்கள் யாராவது விருதுகள் வாங்கினாலும், சாதனைகள் நிகழ்த்தினாலும், உடனே பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து வாழ்த்துச் செய்தி வந்துவிடும். குறைந்தபட்சம் ட்விட்டரிலாவது வாழ்த்து தெரிவிப்பார். ஆனால் ரமோன் மகசேசே விருது வாங்கிய பெஜவாடா வில்சனுக்கும், டி.எம்.கிருஷ்ணாவுக்கும் அவர் வாழ்த்து சொல்லவில்லை. தலித் சமத்துவத்துக்காகக் குரல் கொடுக்கும் இந்த இருவருக்கும் பிரதமர் வாழ்த்து சொல்லாதது ஏன் என பலரும் குழம்புகிறார்கள்.