கவிதைக்காரர்கள் வீதி



* நதியின் போக்கிலேயே
சென்றால்
கடலை அடைந்துவிடலாம்.

* வேண்டுதல்
நிறைவேறும்போது
கல் கடவுளாகிறது.
* கடலில் கால்
நனைக்கும்போது
கவனமாய் இருங்கள்
அலை வந்து குழிபறிக்கும்.

* வலியுறுத்தி
திணிக்கப் பார்க்காதீர்கள்
விரும்பி ஏற்றுக்கொண்டதற்கு
இருக்கும் மதிப்பே வேறு.

* விழிப்புக்கும் உறக்கத்திற்கும்
இடையே
அகந்தை செத்துப்போனது
கண்விழித்ததும்
ஓடிவந்து தோளில்
அமர்ந்துகொள்கிறது.

* அலைக்கழிக்கும் காற்றுக்கு
தலைவணங்கி நிற்கின்றன
சருகுகள்.

* அந்தி வானத்தில்
வெளிச்சம் ஓய்வெடுக்க
இருள் எல்லோருடைய
அந்தரங்கத்திலும்
எட்டிப் பார்க்கிறது

* நெருப்பைக்
கண்டுபிடிக்காத காலங்களில்
மனிதனை
மண்தான் தின்றிருக்கும்.

* பட்டாம்பூச்சியைப்
பின்தொடர்ந்து சென்றால்
அதன் குதூகலத்திற்கு
காரணம் கண்டறிய முடியாதா?

* எதிர்ப்படும் மனிதர்களிடம்
விலங்குகளைக் கண்டால்
கூண்டுக்குள்
பதுங்கிக்கொள்ளுங்கள்.

-ப.மதியழகன், மன்னார்குடி.