டிஸிப்ளின் சிரஞ்சீவி... ஒரிஜினாலிட்டி மகேஷ்பாபு..!



ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலு

‘‘இப்பதான் சினிமாவுல நுழைஞ்ச மாதிரி இருக்கு. திரும்பிப் பார்த்தா 20 வருஷம் கடந்துடுச்சு. ‘சேது’வுல நான் பண்ணின ஒளிப்பதிவையும்  இப்போ தெலுங்கில் பண்ணின மகேஷ்பாபு படத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, டெக்னாலஜி ரொம்பவே வளர்ந்திருக்குனு தெரியுது!’’  - ஃப்ளாஷ் சிரிப்பில் பேசுகிறார் ஆர்.ரத்னவேலு. தமிழ், தெலுங்கு சினிமாவின் டாப் மோஸ்ட் ஒளிப்பதிவாளர். ரஜினியின் ‘லிங்கா’வுக்குப்  பிறகு தெலுங்குப் பக்கம் போனவர், மகேஷ்பாபு, சிரஞ்சீவி என டாப் ஹீரோக்களின் படங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். 

‘‘என் படங்கள் எல்லாத்திலும் தொழில்நுட்பமும், யதார்த்தமும் மின்னும். ‘சேது’, ‘நந்தா’, ‘எந்திரன்’, ‘லிங்கா’, ‘ஹரிதாஸ்’னு என் ஒவ்வொரு  படத்திலும் வித்தியாசமான வொர்க் காட்டியிருக்கேன். ஸ்கிரிப்ட் பிடிச்சிருந்தா மட்டுமே படங்களை ஒப்புக்கறேன். எண்ணிக்கையை விட  தரமான சினிமாக்கள்ல நானிருக்கணும்னு விரும்பி உழைக்கறேன். ஒரு படத்துல வேலை செய்யும்போதே, அடுத்த படம் போக மாட்டேன்.  படம் முடிச்சு, ரிலாக்ஸா ஒரு பிரேக் எடுத்த பிறகுதான் அடுத்த படம். ‘ஹரிதாஸ்’ல என்னோட வொர்க் பார்த்துட்டு, ‘ரத்னவேல், நீங்க ஒரு  ஜீனியஸ்’னு பாலுமகேந்திரா சார் பாராட்டினார். அப்படி ஒரு லெஜண்ட் கிட்ட இருந்து பாராட்டு வந்தது பொக்கிஷமான தருணம்!’’

‘‘தமிழ் சினிமா - தெலுங்கு சினிமா... என்ன வித்தியாசம்?’’
‘‘பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. தமிழ்ல கமர்ஷியல் படங்கள் வந்தாலும் யதார்த்தமான படங்களுக்கு நிறையவே வரவேற்பு  கிடைக்குது. தெலுங்கில் இன்னமும் கமர்ஷியலைத்தான் விரும்புறாங்க. படங்களின் பட்ஜெட்டும் பெருசு. நாம நினைச்ச மாதிரி கொண்டு  வரணும்னா அதுக்காக ஸ்பெஷல் லைட்ஸ், செட்ஸ்னு செலவுகள் பிடிக்கும். அப்படி செலவுகளை பண்ண அவங்க தயாராவே இருப்பாங்க.  பட்ஜெட்டைப் பொறுத்தவரை தமிழ்ல நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. அதனால டெக்னிகல் விஷயங்கள் கம்மியாகிடும். ஷங்கர் சார் படம்  மாதிரி அமைஞ்சாதான் பெருசா வித்தியாசம் காட்ட முடியும். இப்ப தெலுங்கிலும் யதார்த்தமான படங்கள் ஓட ஆரம்பிச்சிருக்கறது  சந்தோஷமா இருக்கு!’’

‘‘ஒளிப்பதிவில் நாம ஹாலிவுட் தரத்துக்கு வந்துட்டோமா?’’
‘‘சினிமா இப்போ குளோபலைஸ்டு ஆகிடுச்சு. முன்னாடி நாலஞ்சு கேமராமேன்கள்தான் குவாலிட்டி கொடுத்தாங்க. ஆனா, இன்னிக்கு  எல்லாருமே நல்ல ரிசல்ட் காட்டுறாங்க. இங்கே போட்டியும் அதிகம். அதனால பெஸ்ட் வொர்க்கை கொடுத்தாகணும். நான் படிக்கும்போது  சென்னையிலும், புனேவிலும்தான் ஃபிலிம் இன்ஸ்டிடியூட். ஆனா இப்ப மாஸ் கம்யூனிகேஷன், விஸ்காம், மீடியா சயின்ஸ்னு படிச்சுட்டு  வருஷத்துக்கு பத்தாயிரம் பேர் வர்றாங்க.

எல்லாருமே பெஸ்ட்டா வேற இருக்காங்க. முன்னாடியெல்லாம் நம்மளோட ரசனைக்குத்தான் படங்களைக் கொடுத்துட்டு இருந்தோம்.  இப்போ விரல் நுனியில் உலக சினிமாக்களை டவுன்லோட் பண்ணி பார்க்கற வசதி இருக்கு. ஹாலிவுட் படத்தையும் நம்ம படத்தையும்  ஆடியன்ஸ் ஒப்பிடுறாங்க. அதனால நம்ம ஊர் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், டெக்னீஷியன்களுக்கு இப்போ ஒரு பிரஷர் இருக்கு.  ஹாலிவுட்ல ஆயிரம் கோடிக்கு எடுக்கற படத்தோட டெக்னிக்கையும் இங்கே ஐம்பது கோடியில் எடுத்த படத்தோட கம்பேர் பண்றாங்க.  ‘பாகுபலி’யை ஹாலிவுட்டிலும் கொண்டாடினாங்களே!’’

‘‘ ‘கபாலி’ ரஜினி..?’’
‘‘அர்னால்டு, சில்வஸ்டர் ஸ்டாலோன்னு உலகத்துல எந்த ஒரு ஹீரோவுக்கும் கிடைக்காத ஒரு இடம் ரஜினி சாருக்கு கிடைச்சிருக்கு. நான்  அவரோட பெரிய ஃபேன். ‘லிங்கா’வில் அவர் தங்கியிருந்த ஹோட்டல்ல அவருக்கு பக்கத்து ரூம் எனக்கு போட்டிருந்தாங்க. லேட் நைட்  நாங்க  ஷூட் முடிச்சுட்டு ஒண்ணா வருவோம். ‘நீங்க சாப்பிட்டீங்களா?’னு அக்கறையா  விசாரிப்பார். ரஜினி சாரைப் பத்தி நிறைய  சொல்லலாம்!’’

‘‘சீரஞ்சீவியோட 150வது படம் நீங்க பண்றீங்க... எப்படிப் போகுது?’’
‘‘அவர் கலக்குறார். ஒன்பது வருஷ இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கார். இப்பவும் அவர் எம்.பியா இருக்கறதால அரசியலை  வலுப்படுத்தும் விதமா ‘கத்தி’ படத்தை, ‘கத்திலன்டோடு’வா பண்றாங்க. அவர் மகன் ராம்சரண் என்னை அணுகி, ‘ரஜினி சாருக்கு ‘ரோபோ’  பண்ணினது மாதிரி எங்க அப்பாவுக்கும் ஒரு பெரிய படம் பண்ணணும்’னு சொன்னார். 25 நாட்களுக்கு மேல ஷூட்டிங் தொடருது. சிரஞ்சீவி  சார் ஃபுல் எனர்ஜியோட இருக்கார். ஸ்கூல் டிசிப்ளின் மாதிரி நல்ல விஷயங்கள் நிறைய கடைப்பிடிக்கிறார்.

காலையில ஏழு மணிக்கு ஷூட்டிங்னா, ஷார்ப்பா வந்துடுவார். அதே மாதிரி சாயங்காலம் ஆனா, ‘சீக்கிரம் முடிச்சு அனுப்புங்க’னு அவர்  ஒருநாளும் கேட்டதில்ல. பொறுமையா இருக்கார். பத்தாவது நாள், சாயங்காலம் ஆறு மணிக்கு ஷூட்டிங் வச்சிருந்தோம். மழை விடாம  பெய்தது. வெதர் ரிப்போர்ட்படி நைட் 12 மணிக்குதான் மழை விடும்னு தெரிய, ஷூட்டிங்கை  பேக்கப் பண்ணிக்கலாம்னு நானும்  டைரக்டரும் நினைச்சோம். ‘அதெல்லாம் வேணாம். நான் வெயிட் பண்றேன்’னு சொல்லி நடிச்சார் சிரஞ்சீவி சார்!’’

‘‘தெலுங்கில் மகேஷ்பாபுவோட ரெண்டு படங்கள் பண்ணிட்டீங்க...’’
‘‘ஆமா. அதுக்கு முன்னாடியே மகேஷ்பாபுவோட ஆறேழு படங்களுக்கு என்னைக் கேட்டிருப்பாங்க. அப்போ நான் தமிழ்ல பிஸியா  இருந்ததால, பண்ண முடியாம போச்சு. அல்லு அர்ஜுனோட ‘ஆர்யா’ படம் பண்ணும்போது அதோட இயக்குநர் சுகுமார் நண்பரானார்.   அவர் மகேஷ்பாபு படம் ‘நேனு ஒக்கடினே’ பண்ணும்போது, என்னையும் கூப்பிட்டார். அது வெளிநாடுகள்ல அதிகம் ஷூட்டிங் பண்ணின  படம். ரெகுலர் தெலுங்குப் படம் மாதிரியே இருக்காது.

அதில் என் வொர்க் பார்த்து மகேஷ்பாபு சார் நெருங்கிப் பழக ஆரம்பிச்சார். அதன்பிறகு இங்கே ‘லிங்கா’ வந்துட்டேன். அதை முடிச்சிட்டு  ‘குமாரி21 எஃப்’ படம் பண்ணின டைம்ல ‘பிரமோற்சவம்’ பண்ணக் கூப்பிட்டாங்க. எனக்காக ரெண்டு மாசம் காத்திருந்து ஷூட்  தொடங்கினாங்க. மகேஷ்பாபுவோட படங்கள்ல வொர்க் பண்றப்போ சூர்யா, விஜய் படங்களுக்கு வொர்க் பண்ற ஃபீல் இருக்கும். எனக்கு  கொஞ்சம் கொஞ்சம்தான் தெலுங்கு தெரியும். நான் ரொம்ப கம்ஃபர்ட்டபிளா இருக்கணும்னு செட்ல என்கிட்ட தமிழ்லதான் பேசுவார்.

சென்னையில படிச்சவர்ங்கறதால பக்கா சென்னைத் தமிழ்ல கூட பேசி அசத்துவார். நம்ம ஊர் ஹீரோக்கள் பலர்கிட்ட ரஜினி சார், கமல்  சாரோட பாதிப்பு இருக்கும். ஆனா மகேஷ்பாபுகிட்ட ஒரு ஒரிஜினாலிட்டி இருக்கும். எப்பவும் என்கரேஜ் பண்ணிட்டே இருப்பார். மறுபடி  மறுபடி அவரோட வொர்க் பண்ணணும்னு விரும்ப வச்சிடுவார்!’’

அர்னால்டு, சில்வஸ்டர் ஸ்டாலோன்னு உலகத்துல எந்த ஒரு ஹீரோவுக்கும் கிடைக்காத ஒரு இடம் ரஜினி சாருக்கு கிடைச்சிருக்கு.’’

- மை.பாரதிராஜா