உறவெனும் திரைக்கதை



-ஈரோடு கதிர்

அவர்கள் பைத்தியக்காரர்கள்! ஒரு நவம்பர் மாத வியாழக்கிழமை... வழக்கமாக தான் இருக்கும் விரதத்தை மக்களுக்கான உண்ணாநிலைப்  போராட்டமாகத் தொடங்கிய இரோம் ஷர்மிளா, 16 ஆண்டுகளுக்குப் பிறகு போராட்டத்தின் வடிவத்தை மாற்றியிருக்கிறார். போராட்டத்தின்  வடிவம் மாறுவதே தோல்வியென்றும், போராட்ட வடிவத்தை காலத்திற்கேற்ப மாற்றுவதுதான் சரியான முடிவென்றும், தனிமனிதப்  போராட்டங்கள் வென்றதில்லை; குழுவாகப் போராடினால் மட்டுமே வெற்றி என்றும் விவாதங்கள் எழுகின்றன.

தனிமனிதப் போராட்டங்கள் வென்றதில்லையா என்ன? வரலாறு நெடுகிலும் வென்றெடுத்த போராட்டங்களின் பட்டியலை நோக்கினால்,  போராட்டத்தின் துவக்கமோ, திருப்புமுனையோ ஏதோ ஒரு தனி மனிதனால் மட்டுமே நிகழ்த்தப்பட்டு இருந்திருக்கின்றன. ‘எவையெல்லாம்  போராட்டங்கள்?’ என்று கேட்டால், ‘இதுதான் போராட்டம்’ என வரையறை செய்ய முடியவில்லை. எல்லாவற்றிலும் போராடும் சூழல்  காத்திருப்பது உண்மை.

தன் உணவுக்கு உழைப்பதில் தொடங்கி, ஊருக்காக உழைப்பது வரை போராடத்தான் வேண்டியிருக்கிறது. இயல்பாக நிகழ்வதை இன்னும்  கூடுதலாக்க... அல்லது வேறொரு நிலைக்கு அதை மாற்ற... புதிதாய் ஒன்றைப் புகுத்த... இப்படியாகப் பிரயத்தனப்படும் எல்லாமே  போராட்டமாகவே அமைகின்றன. அடையாளப்படுத்தப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட, கொண்டாடப்பட்ட போராட்டங்களுக்கும்...  புறக்கணிக்கப்பட்ட போராட்டங்களுக்கும்... உழைப்பு என்பது கிட்டத்தட்ட சம அளவிலானதுதான்.

மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிமடியில் சத்தியமங்கலம் அருகே அமைந்திருக்கும் கிராமம் அது. இயற்கை அந்த ஊருக்கு வறட்சியையே  பரிசளித்து இருந்தது. ஆனாலும், ‘எனக்கானது இப்படித்தான் வேண்டும்’ என தீர்மானிக்கும் மனிதர்களால் இயற்கையையும் அவர்கள்  விரும்பிய வண்ணம் வசப்படுத்தவும், வடிவமைத்துக்கொள்ளவும் முடிகிறது.

படிப்பதற்கு பெரிதும் சூழலற்ற விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த அய்யாசாமிக்கு, அவருடைய தந்தை மரங்களின் மேல் கொண்டிருந்த  காதல் தொற்றிக்கொள்கிறது. ஆடு மேய்க்கும்போது, சிறிய குழிகள் தோண்டி வேப்ப மர விதைகளையிட்டு நீரூற்றி வளர்க்கத்  துவங்கியிருக்கிறார். விதைகள் துளிர்விட, அவருக்குள் மரம் வளர்க்கும் ஆசை விருட்சமாகியிருக்கிறது. மரம் வளர்ப்பதில் கவனம் திரும்ப,  குடும்பத்தின் ஏழ்மை குறித்து அவர் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

சுமார் நாற்பது வருடங்களில் அவர் விதையிட்டு நீரூற்றி உருவாக்கிய மரங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ பத்தாயிரம். சமூக விரோதிகள்  கொள்ளையடித்ததுபோக மூவாயிரம் மரங்கள் மிஞ்சியிருக்கின்றன. எப்படி இது சாத்தியமானதெனக் கேட்டால், ‘‘மனுசனா பொறந்தா  ஏதாச்சும் செய்யணுமுங்க... எனக்கு மரம் வளர்த்துறதுமேல ரொம்ப ஆசைங்க’’ என்பதோடு முடித்துக் கொள்கிறார். ஊர் மக்கள்,  குடும்பத்தினரின் ஒத்துழைப்பு குறித்துக் கேட்கையில், குழந்தைபோல் சிரிக்கிறார்.

வெட்கத்தோடு மனைவியைச் சுட்டுகிறார் ‘‘வேட காலத்துல ஆடு, மாடு குடிக்க, வூட்ல பொழங்கக் கூட தண்ணியிருக்காது. வூட்டுச்  செலவுக்கு வெச்சிருந்த தண்ணியுங்கூட செடிக்கு கொண்டோயி ஊத்திருவாரு’’ என்கிறார் அவர் மனைவி. “ஊட்டுல தண்ணியில்லைனா ஒரு  நா சண்ட போடுவாங்க, இல்லனா சோறு ஊத்த மாட்டாங்க. நாம பட்டினி கெடந்துக்கலாம். ஆனா செடி செத்துப் போச்சுன்னா என்னங்க  பண்றது’’ என்கிற அவரின் வாதத்திலிருக்கும் உண்மை ஒருவராலும் உதற முடியாதது.

ஊர் வேறென்ன சொல்லியிருக்கும்? வழக்கமாய் அவர்கள் வழங்கும் பட்டம், ‘பொழைக்கத் தெரியாதவன்’, ‘பைத்தியக்காரன்’ என்பதுதானே!  ஈரோடு அருகே காஞ்சிக்கோவில் பகுதியைச் சார்ந்த நாகராஜன், தனது 17வது வயதிலிருந்து கடந்த 44 வருடங்களாக விதைகளைத் தெரிவு  செய்து,  முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, முள்வேலி அமைத்து, நீர் ஊற்றி, ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி  மரமாக வளர்த்தெடுத்திருப்பது பத்தாயிரத்திற்கும் அதிகம். ‘‘ஆரம்பத்தில் என் செயல்களைக் கண்டு ‘பைத்தியக்காரன்’ என்று ஊரே சொன்னது’’  என்றபடி சிரிக்கிறார்.

தினமும் காலை, மாலை நேரங்களில் மரம் நடுவதையும், அதனைப் பராமரிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பவருக்கு வந்த  சவால்கள் பல. சாலையோரம் நட்ட மரங்களை, விவசாய நிலத்தில் நிழலடிக்கிறது என்று விவசாயிகளும், பல சில்லறை காரணங்களைச்  சொல்லி சாலைப் பணியாளர்களும், மின்சார ஊழியர்களும் சர்வசாதாரணமாக வெட்டி வீசுகிறார்கள் எனக் கூறும்போது அவருடைய மனதில்  உணரும் வலி முகத்தில் வந்து படிகிறது.

ஆல், அரசன், புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை என வகைவகையாய் எட்டுத் திசையிலும் வளர்த்தெடுத்திருக்கிறார். கடும் கோடையிலும்  கூட மரக்கன்றுகளைச் சுற்றி தேங்காய் நார் தூவி, அருகில் உள்ள விவசாயிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி நீர் பெற்று தண்ணீர் தெளித்து  செடிகளைக் காப்பாற்றியிருக்கிறார். பீகார் மாநிலத்தில் சாலைகளால் இணைக்கப்படாத ஒரு கிராமம் கெஹ்லூர். நாடு  சுதந்திரமடைந்திருந்தாலும் சாதியும் பொருளாதாரமும் அடிமைப்படுத்தியே வைத்திருக்கும் சுதந்திரமில்லா சூழல். எலிகளை வேட்டையாடி  உண்ணும் விளையாட்டுச் சிறுவன் தஸ்ரத் மான்ஜிக்கு குழந்தைப் பருவ திருமணம் நடக்கிறது. மேட்டுக்குடியிடம் அடிமை வேலை செய்யும்  தந்தை தஸ்ரத்தை அடகு வைக்கும் சூழல் வருகையில், வீடு, மனைவி, ஊர் அனைத்தையும் விட்டு ஓடிப்போகிறான்.

தன்பத் நிலக்கரிச் சுரங்கத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிவிட்டு வண்ண ஆடைகளோடு ஊர் திரும்பும் தஸ்ரத்திற்கு கிடைத்த முதல் செய்தி,  தீண்டாமை எனும் கொடுமை நீக்கப்பட்டு, அனைத்து சாதியினரும் சமமென அறிவிக்கப்பட்டிருப்பதுதான். அடுத்த கணமே ‘சட்டம் வேறு,  சாதிகளின் கொடுமை வேறு’ என்பதை மோசமான ஒரு சம்பவத்தோடு புரிந்துகொள்கிறான். திருமணம் செய்து விட்டோடிய மனைவி மீதே  மையல் கொண்டு, மாமனாரிடம் சண்டை பிடித்து அவளை மீட்டு வருகிறான்.

மலைக்குப் பின்புறமாக இருக்கும் கெஹ்லூரிலிருந்து அருகாமை நகருக்குச் செல்ல வேண்டுமெனில் 55 கி.மீ தூரம் சுற்றித்தான் செல்ல  வேண்டும். ஆனால் மலையை நேரே கடந்தால் 15 கி.மீ பயணத்தில் அடைந்துவிட இயலும். இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்தபடி  மலை மீதேறும் தஸ்ரத்தின் ப்ரியமிகு மனைவி பகுனியா, மலைச்சரிவில் வழுக்கி விழுந்து படுகாயமடைகிறாள். தொட்டில் கட்டி மலை  மீதேறி அருகாமை நகரின் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றும், மகளை பிரசவித்து விட்டு பகுனியா மறைகிறாள்.

மனைவியின் மரணத்திற்குக் காரணமான மலை மீது தஸ்ரத்திற்கு கோபம் வெகுண்டெழு கிறது. ‘‘நீ உயர்ந்திருக்கிறாய், பலமாய் இருக்கிறாய்.  ஆனால் நீ உயர்ந்திருப்பது ஒரு தோற்ற மாயை. உன்னை நான் வெல்வேன்!” என மலையிடம் ஓங்காரமிடுகிறான். ‘மனைவியை இழந்த  வருத்தத்தில் பிதற்றுகிறான்’ என ஊர் நினைக்க, மலையைப் பிளந்து பாதை அமைப்பதாக சம்மட்டியோடு கிளம்புபவனை தந்தையும், ஊரும்  எள்ளி நகையாடுகிறார்கள். ஊர் அவனை ‘பைத்தியக்காரன்’ என்கிறது. கல் கொண்டு எறிகிறது.

ஓயாமல் பாறையைத் தகர்க்கும் தன் பணியைத் தொடர்கிறான். காயம் படுகிறான். களைத்துப் போகிறான். ஆனாலும் உரத்து நின்று  சம்மட்டியால் ஓங்கியடித்துக் கொண்டே இருக்கிறான். ஊரைக் கொல்லும் பஞ்சம் வருகிறது, ஊரே புலம் பெயர்கிறது. இவன் மட்டும்  தண்ணீரும் உணவும் இல்லாமல், வாடியபடி பாறைகளைத் தகர்ப்பதைத் தொடர்கிறான். நாட்கள், வாரங்கள், மாதங்கள் கடந்து ஆண்டுகளை  விழுங்குகிறது போராட்டம். 22 ஆண்டுகள் தனி மனிதனாக மலையை உடைத்து 25 அடி ஆழம், 30 அடி அகலம், 360 அடி நீளம் கொண்ட  பாதையை மனைவியின் மீது கொண்ட காதலால் ஊருக்காக அமைக்கிறான்.

2015ல் இந்தியில் வெளியான ‘மான்ஜி: மவுன்டெய்ன் மேன்’ இந்தித் திரைப்படம், வெறும் கதை அல்ல. ரத்தமும் சதையுமாய் 1934ல் பிறந்து  1960ல் தொடங்கி 1982ல் மலையை வெட்டி பாதை அமைத்து, 2007ல் வரலாறாகி நினைவில் நிற்கும் ‘தஸ்ரத் மான்ஜி’ எனும் மாமனிதனின்  உண்மைக் கதை. இங்கே எதுவும் யாருக்கும் எளிதில் கிட்டிவிடுவதில்லை. அவசியமாய்த் தேவைப்படும் ஒன்று, விரும்பியவண்ணம்  கிடைத்துவிடுவதில்லை. போராடித்தான் ஒவ்வொன்றையும் எட்ட வேண்டியிருக்கின்றது. போராடுவதற்கு முதலில் தேவையாய் இருப்பது,  ‘எது வேண்டும், எது வேண்டாம், எதைத் துறக்க வேண்டும்’ என்ற தெளிவுதான்.
 
இரோம் ஷர்மிளாவோ, அய்யாசாமியோ, நாகராஜனோ, தஸ்ரத் மான்ஜியோ... இவர்கள் மேற்கொண்ட தீர்மானம் அல்லது போராட்டத்திற்கு  கணப்பொழுது முடிவு போதுமானதாக இருந்திருக்கும். இவர்கள் யாரிடமும், ‘வாருங்கள்! குழுவாகச் சேர்ந்து உழைப்போம்’ என அணி  திரட்டியதாகத் தெரியவில்லை. தன்னை நம்பினார்கள், தான் போதுமெனத் தீர்மானித்தார்கள்.

எதனினும் பலம் வாய்ந்தது தனிமனிதனின் மனதில் அக்னிக் குஞ்சு போல் சுடர்விடும் கனவு. அது தன்னையே கூர்தீட்டி, தன்னையே  உறுதிப்படுத்திக்கொண்டு, அதில் ஈடுபடுபவனிடம் முழு அர்ப்பணிப்பையும், தியாகத்தையும், ‘பைத்தியக்காரன்’ எனும் பட்டத்தைச் சுமக்கும்  பக்குவத்தையும் கோருகிறது. அதைக் கொடுப்பவர்கள் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்.

மனைவியின் மரணத்திற்குக் காரணமான மலைமீது தஸ்ரத்திற்கு கோபம் வெகுண்டெழுகிறது. ‘‘உன்னை நான் வெல்வேன்!” என மலையிடம்   ஓங்காரமிடுகிறான்.

அவர்கள் தன்னை நம்பினார்கள், தான் போதுமெனத் தீர்மானித்தார்கள். எதனினும் பலம் வாய்ந்தது தனிமனிதனின் மனதில் அக்னிக் குஞ்சு  போல் சுடர்விடும் கனவு.

(இடைவேளை...)

ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி