சட்டம் திருந்தினால் சாலை திருந்துமா?



அதை சிலர் ஆபத்தான சட்டம் என்கிறார்கள்; அபத்தங்கள் இருப்பதாகப் பட்டியல் போடுகிறார்கள். வேறு சிலரோ, ‘இது காலத்தின் தேவை’  என்கிறார்கள். தேசம் முழுக்க விவாதங்களுக்குக் குறைவில்லை. 28 ஆண்டுகள் பழமையான இந்தியாவின் மோட்டார் வாகனச் சட்டத்தைத்  திருத்தும் முனைப்பில் இருக்கிறது மத்திய அரசு.

உலகின் மொத்த வாகனங்களில் 1 சதவீதம்தான் இந்திய சாலைகளில் ஓடுகின்றன. ஆனால் உலகின் 10 சதவீத சாலை விபத்துகள்  இந்தியாவில்தான் நிகழ்கின்றன. ஓராண்டில் நிகழும் 5 லட்சம் சாலை விபத்துகளில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். ஒவ்வொரு 3.6  நிமிடங்களுக்கும் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் ஒருவர் சாலையில் அடிபட்டு இறக்கின்றார். வரும் 2020ம் ஆண்டுக்குள் இந்த  உயிரிழப்பை பாதியாகக் குறைப்பதுதான் நோக்கம் என்கிறது மத்திய அரசு. இது சாத்தியமாகுமா?

இந்தியாவின் மோட்டார் வாகனச் சட்டம் 1988ல் அமலுக்கு வந்தது. இதில் 68 விதிகளை மாற்றியும் 28 புதிய விதிகளைப் புகுத்தியும்  நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை விரைந்து சட்டமாக்கத் துடிக்கிறது அரசு. ‘‘மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு  ஏற்றபடி லைசென்சிங் முறையை மாற்றவும், தண்டனைகளைக் கடுமையாக்கி விபத்துகளைத் தடுக்கவும் இந்தத் திருத்தம் அவசியம்’’  என்கிறார், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி.

சமூக ஆர்வலர்கள் வரவேற்கவும் வாழ்த்தவும் இதில் ஏராளமான நல்ல பரிந்துரைகள் உள்ளன...

* இப்போது பழகுநர் உரிமம் எனப்படும் எல்.எல்.ஆர் வாங்க ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு நடையாக நடக்க வேண்டியுள்ளது. இடைத்தரகர்  தேவைப்படுகிறார். இந்த சட்டம் அமலுக்கு வந்தால், ஆன்லைனிலேயே எல்.எல்.ஆர் பெறலாம்.

* ஒரு விபத்து நடந்து, அடிபட்ட முதல் 45 நிமிடங்களை ‘கோல்டன் ஹவர்’ என்கிறார்கள். இந்த நேரத்துக்குள் ஏதேனும் ஒரு  மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று சிகிச்சை கொடுத்தால், சாலை விபத்தில் நேரும் மரணங்களில் 50 சதவீதத்தைக் குறைத்துவிடலாம் என  புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஆனால் பணம் கிடைக்காது, போலீஸ் கேஸ், பிரச்னை என காரணங்களைச் சொல்லி பல தனியார்  மருத்துவமனைகள் தட்டிக் கழிக்கின்றன. புதிய சட்டப்படி மத்திய அரசு ஒரு நிதியை ஒதுக்கீடு செய்யும். இந்தியாவில் யார் எங்கு விபத்தில்  அடிபட்டாலும் அவருக்கு இந்த கோல்டன் ஹவர் சிகிச்சை இலவசம்.

* சாலை விபத்துகள் தொடர்பான இழப்பீடு கோரிக்கைகள் இனி வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படாது. 30 நாட்களுக்குள் இன்சூரன்ஸ்  நிறுவனத்தால் இழப்பீடு தரப்பட வேண்டும்.

* சாலை விதிமீறல்கள், விபத்துகள் தொடர்பான தகவல்கள் ஒரே இடத்தில் தொகுக்கப்படும். திரும்பத் திரும்ப குற்றங்கள் செய்பவர்களை  கடுமையாக தண்டிக்கவே இந்த ஐடியா. உதாரணமாக, ஒருவர் போதையில் வாகனம் ஓட்டி தண்டனை பெற்றும் மீண்டும் சிக்கினால்,  அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து லைசென்ஸையும் ரத்து செய்வார்கள். ஆபத்தான முறையில் இரண்டாவது முறையாக வாகனம்  ஓட்டி ஒருவர் சிக்கினால், அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஓராண்டு சிறையில் தள்ளலாம். தூத்துக்குடியில் தெருமுனையில்  நிற்கும் ஒரு டிராஃபிக் கான்ஸ்டபிள்கூட, இந்தியா முழுக்க நடக்கும் குற்றங்கள் பற்றி அறிய முடியும் என்பதால், தண்டனை தருவது சுலபம்.

* சிறுவர்கள், சிறுமிகளிடம் வாகனம் ஓட்டக் கொடுப்பது இப்போது அதிகரித்துள்ளது. இப்படி 18 வயது நிறைவு பெறாதவர்கள் வாகனம்  ஓட்டி சிக்கினால், அந்த வண்டியின் பதிவு ரத்து செய்யப்படும்; ஓட்டியவர்களுக்கு 25 வயது வரை லைசென்ஸ் தரப்படாது. அவர்களின்  பெற்றோருக்கு அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

* கார், டூவீலர் போன்றவற்றில் உற்பத்திக் குறைபாடு இருந்தால் நிறுவனங்களை தண்டிக்க இப்போதைய சட்டத்தில் வழி இல்லை.  நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து அந்த வாகனங்களைத் திரும்பப் பெறுவதே இப்போதைய நடைமுறை. சுற்றுச்சூழலுக்கோ,  பயணிகளுக்கோ ஆபத்து ஏற்படுத்தும் வாகனங்களைத் திரும்பப் பெறுவதை கட்டாயம் ஆக்குகிறது புதிய சட்டம். அதோடு அபராதமும்  நஷ்ட ஈடும் விதிக்கப்படும்.

‘‘இவை எல்லாமே நல்ல நோக்கத்தில் செய்யப்படும் திருத்தங்கள்தான். ஆனால் சட்டத்தை அமல்படுத்தும் இடத்தில் இருப்பவர்களுக்கு  அதிகபட்ச அதிகாரத்தைத் தரும் எதுவுமே ஆபத்தானது’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ‘‘உதாரணமாக, சிக்னலை மீறினால், போதையில்  வாகனம் ஓட்டினால், ஒன்வேயில் சென்றால் லைசென்ஸை டிராஃபிக் கான்ஸ்டபிளே பறிமுதல் செய்ய புதிய சட்டம் வழிகொடுக்கிறது. இந்த  விதிகளை வைத்து எவரையும் குற்றவாளி ஆக்கிவிட, ஒரு தவறான நபரால் முடியும்.

4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்கிறது சட்டம். 14 வயதுக்கு உட்பட்டவர்கள் காரில் பயணிக்க பக்கெட்  சீட்டோ, சீட் பெல்ட்டோ அவசியம் என்கிறார்கள். இந்தியாவில் குழந்தைகளுக்கு ஹெல்மெட்டோ, பக்கெட் சீட்டோ கிடைப்பதில்லை.
இந்தியாவில் சாலை விதிமீறல்களையோ, விபத்துகளையோ தடுக்க சட்டம் இல்லாமல் இல்லை. நிறைய இருக்கிறது.

இருக்கிற சட்டங்களை அமல்படுத்துவதில்தான் பிரச்னை. சிவப்பு விளக்கைப் பார்த்தும் நிற்காமல் செல்லும் வாகனங்களை டிராஃபிக்  போலீஸே கண்டுகொள்வதில்லை. பல நகரங்களில் போக்குவரத்து போலீஸ் பிரிவில் போதுமான ஆட்கள் இல்லை. இதையெல்லாம் சரி  செய்யாமல் சட்டங்களைத் திருத்தி பயனில்லை’’ என்கிறார்கள் அவர்கள்.

‘புதிய சட்டத்தால் லைசென்ஸ் வாங்கும் செலவு அதிகமாகும், இன்சூரன்ஸ் கட்டணம் அதிகமாகும், டிராஃபிக் போலீஸ் வாங்கும் மாமூலின்  அளவும் உயரும்’ என மூன்று நேரடி விளைவுகளை சுட்டிக் காட்டுகிறார்கள் பலரும். கடைசியில் எல்லாமே எளியவன் தலையில் வந்து  விழுகிறது.

- அகஸ்டஸ்