விஜய்சேதுபதியின் இடத்தில் அரவிந்த்சாமி!



‘போகன்’ இயக்குநர் லக்‌ஷ்மன்

போலீஸ் கமிஷனர் அலுவலகம்... டி-ஷர்ட், ஜீன்ஸ் காஸ்ட்யூமில் கேஷுவலாக சிரிக்கும் அரவிந்த்சாமி, தனது லேப்டாப்பை உயிர்ப்பித்து  எதிரே இருக்கும் மானிட்டருடன் இணைக்க, திரை முழுவதும் புள்ளிவிவரங்கள். பக்கத்தில் போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி. ‘‘முழு  ஷூட்டிங்கும் முடிச்சிட்டோம். இன்னும் ரெண்டு பாடல்கள்தான் பாக்கி. தீபாவளிக்கு ஆக்‌ஷன் சரவெடியா வர்றோம் பாஸ்!’’ - படபடவென  பரபரக்கிறார் ‘போகன்’ இயக்குநர் லக்‌ஷ்மன். ஏற்கனவே ரவிக்கு ‘ரோமியோ ஜூலியட்’ ஹிட் கொடுத்த கை இது.

‘‘முதல் படம் ஒரு க்யூட்டான லவ் ஸ்டோரி. அந்தப் படத்தை பார்த்த ரவி, ‘என்னப்பா? ஹன்சிகா படம் மாதிரி பண்ணியிருக்கே!’னு  செமயா கலாய்ச்சார். ஆனா, ‘போகன்’ல முழுக்க முழுக்க ரவியோட அட்ராசிட்டி மிளிரும். இந்தப் படத்துல அரவிந்த்சாமி அமைஞ்சது  எங்களுக்கு லக்கி பிரைஸ்!’’

‘‘அதென்ன ‘போகன்’?’’
‘‘ ‘எல்லா சுக போகங்களுக்கும் அடிமையானவன்’னு சொல்வாங்களே... அப்படி ஒருத்தனுக்குப் பெயர்தான் ‘போகன்’. ‘ரோமியோ  ஜூலியட்’டைவிட பல மடங்கு பிரமாதமான, இன்ட்ரஸ்டிங் சீக்குவென்ஸ் இந்தப் படத்துக்காக பிடிச்சிருக்கேன்.  ரவி இதுல உதவி போலீஸ்  கமிஷனர். கேரக்டர் பெயர் விக்ரம். அரவிந்த்சாமி சார் ஆதித்யாவா வர்றார். ராஜ வம்சத்தின் கடைசி வாரிசு அவர்.

படத்துல ‘போகன்’ அவர்தான். ஹவுஸ்வொய்ஃப் ஆக விரும்புற ஒரு பொண்ணா நடிச்சிருக்காங்க ஹன்சிகா. இந்தப் படத்தைப் பார்க்கற  எல்லா இளைஞர்களும், ‘ஹன்சிகா மாதிரி ஒரு லவ்வர் அமையணும்’னு சொல்றது நிச்சயம். அக்‌ஷரா கவுடா கெஸ்ட் ரோல்  பண்ணியிருக்காங்க. படத்தைத் தயாரிச்சது பிரபுதேவா. கிட்டத்தட்ட பத்து வருஷப் பழக்கம், இப்ப எனக்காக படமே தயாரிக்க வச்சிருக்கு!’’

‘‘ஜெயம் ரவி...’’
‘‘ரவிக்கு இது ஆக்‌ஷன் ப்ளாக். படத்துல வில்லன் அவர்தான். நிறைய காட்சிகள்ல ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்கார். 80 அடி உயரத்துல கூரான  ஒரு கல். அதுல இருந்து ரவி குதிக்கணும். ‘டூப் போட்டுக்கலாம்’னு சொன்னேன். மறுத்துட்டார். வேற ஒரு ஹீரோவா இருந்திருந்தால், இந்த  கேரக்டர் பண்ணவே திணறியிருப்பாங்க. ஒவ்வொரு சீனையும் உள்வாங்கி புரிஞ்சு பண்ணுவார் ரவி. ‘புரியாமல் பண்ணினேன்னா... அப்புறம்  ராத்திரியில என்னால நிம்மதியா தூங்க முடியாது’னு சொல்லுவார். நான் எஸ்.ஜே.சூர்யா ஸ்கூல்ல வளர்ந்த மாதிரி, அவர் எடிட்டர் மோகன்  சாரோட டிஸிப்ளின் ஸ்கூல்ல படிச்சு வளர்ந்தவர். அதனாலயே, சின்னச் சின்ன விஷயத்துக்குக்கூட மெனக்கெடுறார்!’’

‘‘என்ன சொல்றார் அரவிந்த்சாமி?’’
‘‘அவருடைய கேரக்டருக்கு முதல்ல விஜய்சேதுபதிகிட்ட கேட்கலாம்னு நினைச்சேன். அரவிந்த்சாமி சார் - ரவி காம்பினேஷன் மறுபடியும்  அமைஞ்சா, ‘தனி ஒருவன்’ கூட கம்பேர் பண்ணுவாங்களோனு பயந்தேன். அப்புறம் ரவிதான் ‘இந்த ஒன்லைன் அவருக்குப் பிடிக்கும்’னு  சொல்லி அரவிந்த்சாமி சார்கிட்ட அழைச்சிட்டுப் போனார். ஷூட்டிங் வந்த ரெண்டாவது நாள்லயே அரவிந்த்சாமி இந்த ஸ்கிரிப்ட்டை லவ்  பண்ண ஆரம்பிச்சிட்டார்.

அவர்கிட்ட நிறைய கத்துக்க முடியும். சில சீன்களை அவர்கிட்ட சொல்லும்போது, அதைப் பத்தி அவர் சொல்ற விளக்கம் பிரமிப்பா  இருக்கும். அவ்வளவு டைரக்‌ஷன் நாலெட்ஜ் உள்ளவர். ஒரு சீன்ல அவர் வெறும் கையால கண்ணாடியை உடைச்சதில் கையில் சிராய்ப்பு  ஆகிடுச்சு. ஆனாலும், வேதனையைக் காட்டாம அடுத்த ஷாட்டுக்கு ரெடியானார். ‘விளையாடு மங்காத்தா’ மாதிரி கெத்தா ஒரு ஸாங்  அவருக்கு வச்சிருக்கோம்!’’

‘‘ஹன்சிகா...’’
“சிம்ரன், ஜோதிகா மாதிரி ஒரு நல்ல பர்ஃபாமர். ‘உங்க படத்துல மட்டும் ஹன்சிகா பர்ஃபார்மென்ஸ் பின்றாங்களே?’னு நிறைய பேர்  எங்கிட்டயே கேட்டிருக்காங்க.  ரவியும், ஹன்சிகாவும் ஏற்கனவே ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் என்பதால, அவங்க போர்ஷன்ஸ் நல்லா  வந்திருக்கு. ‘ரோமியோ ஜூலியட்’டிலும் சரி...  இந்தப் படத்திலும் சரி... எனக்கொரு நல்ல டெக்னிக்கல் டீம் அமைஞ்சிருக்கு. 

கேமராமேன் சௌந்தர் சார் என் முதுகெலும்பு. ஒரு ஷாட்டை பத்து நிமிஷத்துல ஓகே பண்ணிடலாம்னு நினைச்சா கூட விடமாட்டார்.  இன்னும் நல்லா பண்ணணும்னு ரசிச்சு வொர்க் பண்றவர். டி.இமான் இசையமைச்சிருக்கார். ஐந்து பாடல்கள். அவருக்கும் எனக்குமான  புரிதல் நல்லா இருக்கறதால, நினைச்சதை அவர்கிட்ட கேட்டு வாங்கிடுறேன்!’’

‘‘நீங்களே ஹீரோதான்னு பேசிக்கறாங்க...’’
‘‘பல வருஷப் போராட்டத்துக்குப் பிறகு இயக்குநரா வந்திருக்கேன் பாஸ். ‘ரோமியோ ஜூலியட்’டுக்கு முன்னாடி ஒரு படத்துல ஹீரோவா  கமிட் ஆகி ரெண்டு ஷெட்யூல் ஷூட்டிங்கும் போச்சு. நமக்கு எதுக்கு தேவையில்லாத ரிஸ்க்னு அதை அப்படியே டிராப் பண்ணிட்டு,  இயக்கம் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன். நான் படிச்சது, வளர்ந்தது எல்லாமே சென்னையிலதான். டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர்  வீட்டுல வாடகைக்கு குடியிருந்ததால சினிமா என்னை ஆக்கிரமிச்சது.

எஸ்.ஜே.சூர்யா சார்கிட்ட அசிஸ்டென்ட் ஆனேன். அவர் ராத்திரி, பகல் பார்க்காம அசுரத்தனமா உழைப்பார். நைட் மூணு மணிக்கு  ஃப்ரெஷ்ஷா சீன் சொல்லி, கருத்து கேட்பார். சினிமாவை அவரை மாதிரி நேசிக்கறவங்க குறைவு. அவர் கல்யாணம் பண்ணிக்காம  இருக்கறது கூட அந்த நேசத்தை வேற யார்கிட்டேயும் ஷேர் பண்ணிக்கக் கூடாதுங்கறதுக்காகத்தான்னு சொல்வாங்க. அவரோட ‘நியூ’ படத்தின்  மூலம் நான் விநியோகஸ்தராவும் மாறினேன். அப்புறம், ‘கள்வனின் காதலி’ படத்தைத் தயாரிச்சேன். அப்போ எனக்கு வயசு 24தான். அந்த  அனுபவங்களும் பக்குவமும்தான் என்னை இந்த இடத்துல நிறுத்தியிருக்குனு நினைக்கிறேன்!’’

- மை.பாரதிராஜா