பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்!



தோல்வியைக் கொண்டாடுவது இந்தியர்களின் மனநிலைக்குப் புதிய விஷயம். ஆனால் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கு  முதல்முறையாகத் தகுதி பெற்ற இந்தியப் பெண் தீபா கர்மாகர், நூலிழை வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டாலும், அவரை  ஆராதித்தனர் இந்தியர்கள். ‘ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியர்கள் செல்ஃபி எடுக்கத்தான் போனார்கள். இவர்களால் பணமும் வாய்ப்பும்  வேஸ்ட்’ என எழுத்தாளர் ஷோபா டே விமர்சனம் செய்தபோது, அவரை பலரும் காய்ச்சி எடுத்தார்கள்.

ஆனாலும் சமூக வலைத்தளங்களில் ஒலிம்பிக் வீரர்கள் மீதான கேலி ஒருபக்கம் தொடர்ந்தபடி இருக்கிறது. தங்கள் தோல்விகளுக்காக தீபா  கர்மாகர், விகாஸ் கிருஷ்ணன் என பலர் மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். இந்தத் தோல்விகளுக்கும் பின்னடைவுகளுக்கும் அவர்கள்  மட்டுமே காரணம் இல்லை என்பதுதான் உண்மை.

* தீபா கர்மாகரை இப்போது கொண்டாடும் பலருக்கு, மூன்று மாதங்களுக்கு முன்பு வரை அவரின் பெயர்கூட தெரியாது. இத்தனைக்கும்  அவர் ஆறு வயதிலிருந்து ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி செய்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக விளையாடி 77 பதக்கங்களைக் குவித்திருக்கிறார். இதில்  67 தங்கப் பதக்கங்கள். ‘‘ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்ற பிறகே என்னை கவனிக்க ஆரம்பித்தார்கள். ஒலிம்பிக் மைதானத்தில்  நடைபெற்ற முதல் தகுதிப் போட்டியில்தான், நான் விளையாடும்போது வாழ்க்கையில் முதல்முறையாக அரங்கம் நிறைந்து, என் பெயரை  உச்சரிக்கும் ரசிகர்களைப் பார்த்தேன்’’ என தீபா சொல்கிறார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்கச் செல்லும்போது, தனது பிசியோதெரபிஸ்ட் சஜத் அகமது தன்னோடு வர வேண்டும் என கேட்டார் தீபா. ஆனால்  ‘ஒரே ஒரு ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு பிசியோ எதற்கு?’ என மறுத்துவிட்டார்கள் அதிகாரிகள். அபாயகரமான புரோடுநோவா வால்ட் என்ற  சாகசத்தைச் செய்யும்போது அவருக்கு ஏதும் பிரச்னை நேர்ந்தால், முதலில் உதவ வேண்டியவர் இந்த பிசியோதான்! இவருக்கு அனுமதி  கிடைக்கவில்லை, ஆனால் மத்திய விளையாட்டு அமைச்சர் விஜய் கோயலுடன் நான்கு உதவியாளர்கள் போய் பிரேசிலில் அலப்பறை  செய்தார்கள்.

* குத்துச்சண்டையில் கடைசி நம்பிக்கையாக இருந்த விகாஸ் கிருஷ்ணன் காலிறுதியில் தோற்று வெளியேறினார். ஏற்கனவே இரண்டு  பதக்கங்கள் வென்ற விளையாட்டு என்பதால் நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய குத்துச்சண்டை  சங்கத்துக்கும் உலக குத்துச்சண்டை ஃபெடரேஷனுக்கும் வெட்டு குத்து சண்டை. இதனால் வீரர்களுக்கு போதுமான பயிற்சி கிடைக்கவில்லை.  விகாஸ் கிருஷ்ணன் அரிதான இடது கை வீரர். அவரது பலவீனம், இடது கை வீரரிடம் தோற்றுவிடுவது.

இதுவரை இப்படி மூன்று போட்டிகளில் தோற்றிருக்கிறார். இந்தியாவில் திறமையான இடது கை குத்துச்சண்டை வீரர்கள் குறைவு. ‘‘யாருடன்  மோதி பயிற்சி பெறுவது? ஏதாவது திறமையான வெளிநாட்டு வீரர்களுடன் மோதி பயிற்சி பெற ஏற்பாடு செய்யுங்கள்’’ என அவர் கெஞ்சிக்  கேட்டும் பலன் இல்லை. உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு இடது கை வீரரிடம்தான் அவர் தோற்று பதக்க வாய்ப்பை இழந்தார்.

* வில்வித்தையில் தீபிகா குமாரி மீது பலரும் நம்பிக்கையோடு இருந்தனர். சர்வதேசப் போட்டிகள் பலவற்றில் பதக்கங்களை வென்று  நம்பிக்கை தந்தவர் தீபிகா. ஒலிம்பிக்கில் மட்டும் அவரை துரதிர்ஷ்டம் துரத்துகிறது. கடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியின்போதே,  ‘‘வேகமாக வீசும் காற்றுதான் என்னைப் பழி வாங்கிவிட்டது’’ என புலம்பினார் தீபிகா. இப்போது ரியோ டி ஜெனிரோவிலும் அதே  காற்றுதான் வில்லனாகி இருக்கிறது. இடைப்பட்ட இந்த 4 ஆண்டுகளில், வேகமான காற்றுக்கு இடையே வில்லை குறிபார்த்து செலுத்தும்  பயிற்சியை அவருக்குத் தராதது யார் குற்றம்?

* ஹினா சித்து. உலக ரேங்கிங்கில் நம்பர் 1 இடத்துக்கு எல்லாம் சாதாரணமாக வந்த இளம் துப்பாக்கி வீராங்கனை. பல லட்சம் செலவில்  தன் வீட்டிலேயே தனியாக துப்பாக்கி சுடும் அரங்கம் அமைத்து பயிற்சி எடுத்தவர். ஒலிம்பிக் தகுதிச் சுற்றிலேயே வெளியேறினார் அவர்.  ‘‘அங்கு போனதும் திடீரென மனம் வெறுமையாகிவிட்டது. எனக்கு என்ன நேர்ந்தது என்றே தெரியவில்லை. என்னால் போட்டியில் கவனம்  செலுத்த முடியவில்லை’’ என தோல்விக்குக் காரணம் சொன்னார் அவர்.

எழுதிய எல்லாம் காணாமல் போய் வெள்ளைக் காகிதமாக தேர்வுத்தாள் இருந்தால் எப்படி மார்க் கிடைக்கும்? இப்படி ஆகாமல் தடுக்க  மனநல ஆலோசகர்கள் அவசியம் தேவை. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் உடல் தகுதியோடு மனத்தகுதியும் பெற கடும் பயிற்சிகள்  தரப்படுகின்றன. இங்கு எதுவுமே முழுமையாக இல்லை.

இளம் திறமைகளை அடையாளம் கண்டு, பயிற்சி தந்து வெற்றியாளராக மாற்றுகின்றன பல நாடுகள்; இங்கு திறமையை நிரூபிக்கவே  போராட வேண்டியுள்ளது. விளையாட்டு அமைப்புகள் பலவும் அரசியல்வாதிகள், பணக்காரர்கள் கையில் சிக்கியிருக்கின்றன. வீரர்கள்  அவர்களுக்கு கூழைக்கும்பிடு போட்டு உதவியும் பயிற்சியும் பெறவேண்டிய நிலை! இந்த நிலை மாறாதவரை எதுவும் மாறாது! பாவம்  வீரர்கள், அவர்களை கேலி செய்யாதீர்கள்!

- அகஸ்டஸ்