ஸ்கைப், வாட்ஸ்அப்பை விழுங்க வருது கூகுள்!



வாட்ஸ்அப்பும் ஃபேஸ்புக்கும்தான் உலகம் என்றான பிறகு கூகுளும் அடுத்த கட்டம் போக வேண்டுமல்லவா? அதற்காகத்தான் வந்திருக்கிறது கூகுள் டியோ! இணையக்கடவுள் கூகுளின் புத்தம் புதிய வீடியோ காலிங் ஆப். 4ஜி தலைமுறைக்கு ஏற்ற டைமிங் வரவு. ஸ்கைப், ஐ.எம்.ஓ., ஐபோன் கனவான்களுக்கு மட்டுமான ஃபேஸ்டைம் என பொலிகாளைகள் உலவும் மார்க்கெட்டில் கும்கி யானை போல குதித்திருக்கிறது இந்த கூகுள் டியோ. ‘இது சும்மா சாம்பிள்தான் கண்ணா... இன்னும் அடுத்தடுத்து அதிரடி வெளியீடு இருக்கு’ என பயங்காட்டுகிறது கூகுளின் அதிகார பூர்வ ப்ளாக். இதில் போட்டி பார்ட்டிகளுக்கு மிரட்சி... பொதுமக்களுக்கு மகிழ்ச்சி!

கடந்த மே மாதமே கூகுள் தலைவரான சுந்தர் பிச்சை இரண்டு முக்கிய ஆப்ஸ்களைப் பற்றி பொதுவெளியில் அறிவித்தார். ஒன்று கூகுள் அல்லோ, இன்னொன்று கூகுள் டியோ. இரண்டுமே இன்றைய சோஷியல் மீடியா யுகத்தைக் குறி வைத்திருக்கும் அம்புகள். இதில் அல்லோ என்பது கிட்டத்தட்ட வாட்ஸ்அப்புக்கு மாற்றான வல்லிய படைப்பு. அது ஆன் தி வேயில் இருக்க, முந்திக்கொண்டு ரிலீஸ் ஆகியிருக்கிறது டியோ.

‘கால் செய்து பேசும் காலமெல்லாம் காலாவதியாகிடுச்சு. சும்மா முகத்துக்கு முகம் பார்த்துப் பேசுங்க ப்ரோ’ என ஒரு கலாசார மாற்றத்துக்கு நம்மை அழைக்கும் கலக்கல் ஆப் இது. வெளியிடப்பட்ட மூன்றே நாளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு பயனர்கள் இதைப் பதிவிறக்கிவிட்டார்கள். ஐபோன் வாக்காளப் பெருமக்களுக்கும் ஐ டியூன்ஸ் மார்க்கெட்டில் இதே டியோ கிடைக்கிறது. ஆக, இதன் மூலம் ஆண்ட்ராய்டு to ஐபோனுக்குக் கூட வீடியோ கால் செய்ய முடியும்.

ஃபேஸ்டைம் என்பது ஐபோனில் இருந்து இன்னொரு ஐபோனுக்கு மட்டுமே தொடர்புகொள்ளக் கூடிய வீடியோ ஆப். டியோ நேரடியாக ஆப்பு வைத்திருப்பது இந்த ஃபேஸ்டைமுக்குத்தான் என்கிறார்கள். ஆண்ட்ராய்டு நண்பர்களையும் இணைப்பதால் ஐபோன் அம்பிகள் இதை அசுர வேகத்தில் ஸ்வீகரித்து வருகிறார்கள்.

டியோவின் சிறப்பம்சமே எளிமைதான். ‘‘ஒரு குழந்தை கூட இதில் குழப்பமின்றி வீடியோ கால் செய்ய முடியும்’’ என சவால் விடுகிறது கூகுள். மேலும் வெறும் 8.82 MB மட்டுமே இருக்கும் இதன் லைட் வெயிட் செம ஆச்சரியம். கிட்டத்தட்ட 40 MB கொண்ட ஸ்கைப்புக்கு இது அசத்தலான மாற்றாக இருக்கும். பொதுவாக வீடியோ கால் வருகிறதென்றால் அதை நாம் எடுத்த பின்புதான் எதிர்முனை நபரின் முகம் நமக்குத் தெரியும்; நம் முகமும் அவருக்குத் தெரியும். எல்லா வீடியோ காலிங் ஆப்பிலும் இதுதான் கதை. இதற்கு மாற்றாக ‘னாக் னாக்’ என்ற வசதியைத் தருகிறது டியோ. இதன்படி, வீடியோ கால் வரும்போதே அழைப்பவரின் முகம் நமக்குத் தெரியும். ‘அப்படியெல்லாம் தெரிய வேண்டாம்’ என்றால், இந்த அம்சத்தை ஆஃப் பண்ணி வைக்கவும் வழிமுறை உண்டு.

நம்ம ஊரைப் பொறுத்தவரை நத்தை வேக 2ஜி இணையத்தைப் பயன்படுத்துகிறவர்கள்தான் இன்னமும் அதிகம். 4ஜி, 3ஜி எல்லாம் இருந்தாலும் டவர் கிடைக்காமல் பல சமயம் சிக்னல் வீக்காகும். வீடியோ கால்கள் இந்த வீக் சிக்னலால் அறுந்துவிடும். அப்படிப்பட்ட நேரத்திலும் அழைப்பை துண்டிக்காமல் துல்லியமான இணைப்பை வழங்கும் வல்லமை கூகுள் டியோவுக்கு உண்டு என்கிறார்கள். ஸோ, இந்தியா போன்ற நாடுகளில் இது நம்பர் ஒன் வீடியோ காலிங் ஆப்பாக மாற வாய்ப்புகள் எக்கச்சக்கம்.

டியோவின் கதை இப்படியிருக்க, அடுத்து வரப் போகும் அல்லோ பற்றித்தான் அதிகமாய் அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிறது டெக் உலகம். வாட்ஸ்அப் போலவே இருக்கும் இதனை ஸ்மார்ட் மெசேஜிங் ஆப் என்று அழைக்கிறது கூகுள். வார்த்தைகளை டைப் செய்ய சோம்பல்பட்டு, வாட்ஸ்அப்பை சும்மா வேடிக்கை பார்ப்பவர்கள் இங்கு அதிகம். ஆனால் இதில் யாராவது நம்மிடம், ‘ஹாய்! இன்னிக்கு சினிமாவுக்குப் போலாமா?’ எனக் கேட்டால், இதுவே அதற்கு பதிலைத் தயாரித்துவிடுமாம்.

‘போலாமே... எப்போ? எங்கே?’ என்றும், ‘நான் வரலப்பா வேலை இருக்கு’ என்றும் திரையில் காட்டப்படும் பதில்களை ஜஸ்ட் தொட்டால் போதும். அதேபோல ஆங்கில வார்த்தைகளை இதில் கஷ்டப்பட்டு டைப் செய்யும் அவசியமில்லை. நாம் பேசப் பேச அதுவே டைப் செய்து ‘send’ என்று சொன்னவுடன் அனுப்பிவிடும். மேலும் இந்த ஆப் நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொண்டு, அவற்றை முதல் ஆப்ஷனாகத் தந்துதவும்.

இதற்காகவே கூகுள் அசிஸ்டன்ட் என்ற விர்ச்சுவல் மெஷினுடன் இந்த ஆப் இணைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ‘அதிநுட்ப மூளை இணைக்கப்பட்ட வாட்ஸ்அப்தான் அல்லோ’ என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். கூகுள் ப்ளே ஸ்டோரில் அல்லோவுக்கு ‘கம்மிங் சூன்’ என்று போர்டு போட்டதிலிருந்து வாட்ஸ்அப் நிர்வாகத்துக்குத் தூக்கமில்லையாம்! பார்க்கலாம்... ஸ்கைப்பை டியோவும் வாட்ஸ்அப்பை அல்லோவும் விழுங்குமா என்று!

ஒரு குழந்தை கூட இதில் குழப்பமின்றி வீடியோ கால் செய்ய முடியும்!

- நவநீதன்