தர்மதுரை விமர்சனம்



பிறந்த ஊரிலிருந்து பிரிந்து வந்த ஒரு மகனின் நினைவுப் பயணமே ‘தர்மதுரை’. பாசமான குடும்பம், அதிகபட்ச நேர்மையோடு வாழ்கின்ற மருத்துவர் விஜய் சேதுபதி, அவரது வாழ்க்கை சம்மந்தப்பட்டு  கிராமத்து மக்களின் பிரியங்கள், சம்பிரதாயங்கள், அன்பு என பல மதிப்பீடுகளை ஒரே படத்தில் சிறப்பாகப் பதிவு செய்ய முயன்ற அழகிற்கே இயக்குநர் சீனு ராமசாமிக்கு இறுக்க, நெருக்க பாராட்டுகள். அபூர்வமான குணங்களுடன் வளர்ந்து, மருத்துவம் பயின்ற விஜய்சேதுபதி, முழு நேரக் குடிகாரனாக மாறுகிறார். அவரை வீட்டில் வைத்துக் கொண்டிருப்பதே சகோதரர்களுக்கு பெரும் தலைவலியாகிறது. விஜய்சேதுபதி குடிநோயாளி ஆனதுக்கு யார் காரணம்? ஏன்? அவரது மீதி வாழ்க்கை என்னவானது  என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

முதல் காட்சியில் குடிகாரனாக மாறி சலம்பித் திரியும் கிராமத்து இளைஞனாக விஜய்சேதுபதி அறிமுகம்.  முகவெட்டும், அலட்சியமும், உருவமும் அட்டகாசமாகப் பொருந்துகிறது அவருக்கு! போதை மயக்கத்தில் சலம்புவதும், காதல் மயக்கத்தில் கிறங்குவதுமாக அசத்துகிறார். மொத்தப் படத்திற்கும் தன் இயல்பான  நடிப்பில் வித்தியாசம் தந்து படத்திற்கு தனி கலர் சேர்ப்பது விஜய்சேதுபதியே! சந்தேகமே இல்லாமல் அவரது கேரியரில் ‘தர்மதுரை’ சிறப்பு!

‘‘போஸ்டர் ஒட்ற மைதாவை புரோட்டா போடுறாங்க. அதப் போய் சாப்பிடலாமா?’’ என்று கரிசனமும், இயல்புமாய் சொல்கிற அழகு, குடித்து விட்டு கலாட்டா பண்ணும் சிருஷ்டியிடம் ‘உங்க வீட்டுக்கு வர்றேன்’ என்று கொடுக்கிற உறுதிமொழி, தன்னை நம்பிய ஐஸ்வர்யா தற்கொலை செய்து இறந்து கிடக்கும்போது காட்டும் துடிப்பு என எல்லா இடத்திலும் பியூட்டிஃபுல் விஜய்ேசதுபதி!. சரண்யாவுக்கு ‘தென்மேற்கு பருவக்காற்றி’ல் கொடுத்த பர்ஃபாமென்ஸை இந்தத் தடவை சேதுபதிக்கு இடம் மாற்றியிருக்கிறார் டைரக்டர்.

‘இந்த அளவுக்கு நடிக்கத் தெரியுமா?’ என்று கேட்க வைத்திருக்கிறார் தமன்னா. சேதுபதியை தன் தோழி காதலிப்பதைக் கண்டு, அதை ஏற்றுக்கொள்வதில் ஆகட்டும், கடைசியில் சேதுபதியையே மணமுடிப்பதில் ஆகட்டும்... அந்த லிவிங் டுகெதர் போர்ஷன் ஹைக்கூ! கொஞ்ச நேரம் வந்தாலும் அந்த குழி விழும் கன்னத்தில் அசத்துகிறார் சிருஷ்டி. துணுக்கு எழுதும் அன்புச்செல்வியாக ஐஸ்வர்யா மனம் அள்ளுகிறார்.

ஏழைப் பெண்ணாக எத்தனை படங்களில் வந்தாலும், அந்த உயரத்தில் அத்தனை பாங்கு! ராதிகா சரத்குமார் என்ன இருந்தாலும் சீனியர் என்பதை அழுத்தம் திருத்தமான வசனங்களில் நிரூபிக்கிறார். மகன் மீது பிரியம் காட்டும் காட்சிகளில் ராதிகா காட்டுகிற நடிப்புக்கு இணையாகவோ, துணையாகவோ யாரையும் குறிப்பிட முடியாது. எல்லோரும் விரும்பும் நல்மன மனிதர் வேடத்துக்கு அப்படியே பொருந்துகிறார் ராஜேஷ்.

வைரமுத்துவின் வரிகளை ஈர இசையுடன் நம் இதயக் கரை சேர்க்கிறார் யுவன்ஷங்கர். இப்படியே மீண்டு வாருங்கள் யுவன்! ‘மக்க கலங்குதப்பா...’, ‘ஆண்டிப்பட்டி அரசம்பட்டி’ இரண்டு பாடல்கள் அவரின் பெருமை பேசும். வேண்டிய அழகோடு, கிராமத்தின் வெளிறிய அழகை, வெயிலை பதிவு செய்ததில் சுகுமாரின் ஒளிப்பதிவு கம்பீரம்.

குறைகளும் இல்லாமல் இல்லை. பணத்தை தவறுதலாக எடுத்துக்கொண்டு கிளம்பும் சேதுபதி, அதைக் கடைசிவரை பார்க்காமல் இருப்பது காதில் பூ. சிருஷ்டியின் மறைவு இவ்வளவு சுருக்கமாகவா? ஆரம்பத்தில் தொடங்கும் வேகம்... இடையில் குறைவதைத் தவிர்த்திருக்கலாம். ஆனாலும் ‘தர்மதுரை’... தங்கதுரை!

- குங்குமம் விமர்சனக்குழு