குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

‘அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...’ என்ற பாட்டோடு ஆரம்பித்தது உன் திரையுலக தலையெழுத்து, இன்று கோடம்பாக்கத்தில் சினிமா கனவுகளோடு நுழைபவர்களுக்கு உன் பெயர்தான் முதலெழுத்து. உங்களவுக்கு சினிமாவுக்காக கஷ்டப்பட்டவர்களும் இல்லை,  உங்களவுக்கு சினிமாவினால் நஷ்டப்பட்டவர்களும் இல்லை,  ஆனாலும் உங்களவுக்கு சினிமா மீது இஷ்டப்பட்டவர்களும் இல்லை.

நடிப்புக்கு இலக்கணம் வகுத்தது நடிகர் திலகம் என்றால், நமது கலையுலக நடிகர்களுக்கு நீங்கள்தான் நெற்றித் திலகம். உங்களது படங்கள் பேசிய மொத்த பாஷைகளின் எண்ணிக்கையை பல பிரதமர்கள் கூட பேசியதில்லை. பலருக்கும் தற்போது தெரியும் நுணுக்கங்கள் உங்களுக்கு அப்போதே தெரிந்தது.உங்கள் படங்களில் புகுத்தப்பட்ட புதுமைகள் பல வருடங்கள் கழித்தே எங்களுக்குப் புரிந்தது. அடுத்தவரின் கஷ்டங்களில் சிரிக்கக்கூடாது என்பது உடலும் மனமும் வருத்தி நீங்கள் செய்த பல விஷயங்களால் பொய்த்துப் போனது. நீங்கள் கஷ்டப்பட்டு எங்களை ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தீர்கள்.

படமே பார்க்காமல் பல இயக்கங்களால் உங்கள் கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டதுண்டு, சிந்திய கருத்துக்கு வேறொரு அர்த்தம் வைத்து உங்கள் குரல் நெரிக்கப்பட்டதுண்டு, கலை தேச புலிகளின் நரிகளின் கைகளால் உங்கள் கலை முயற்சிகள் இறுக்கப்பட்டதுண்டு. ஆறு பேர் மேல இழுக்க, நூறு பேர் கீழே இழுக்க, நீங்கள் கடந்து வந்த பாதைகள் எல்லாம் முட்களும் புற்களும் சரிபாதி நிரம்பியது.

படத்தைப் பற்றிப் பேச வைக்கத்தான் அத்தனை முயற்சிகள்,  ஆனால் பேசாமலே ஒரு படம் செய்து பலரையும் பேச வைத்தது நீங்கள் மட்டும்தான். முன்னூறு படம் முடிப்பதற்குள் எண்ணூறு வேடங்களைக் கடந்திருந்தீர்கள். நடிப்பு மன்னன், நாடோடி மன்னன் மற்றும் காதல் மன்னன் என மும்மன்னர்களின் தோள்களிலும் ஏறி விளையாடிய சிறு நட்சத்திரம் இன்று எட்டாத உயரத்தில் துருவ நட்சத்திரமாய் ஒளிவிடுகிறது.

உங்கள் கழுத்துகளில் விழுந்த மாலைகளில் உதிர்ந்த பூக்களை எடுத்து கைகளில் ஏந்தி உச்சம் பெற்றவர்கள் ஓராயிரம். கண்களுக்கும் எல்லா பெண்களுக்கும் பிடித்தமானவர் நீங்கள் ஒருவர்தான். நீங்கள் இதுவரை நடந்த தூரத்தை ஓடிக் கடக்கக்கூட இங்கு ஆட்கள் கிடையாது.  எங்களுக்கு சினிமா சிற்றின்பம், உங்களுக்கு சினிமா மட்டும்தான் பேரின்பம். இந்தியத் திரையுலகில் நீங்கள் செய்த முயற்சிகள், தமிழ்த் திரையுலகம் பயின்றிடும் பயிற்சிகள்.

உலகநாயகனே, மருதநாயகம் மெதுவாய் வரட்டும், எந்நாளானாலும் எங்கள் மனதின் நாயகன் நீங்கள்தான். தமிழ்த் திரையுலகினரை அடுத்த தளம் ஏற்றிவிடும் ஏணியே, கலைஞானியே, செவாலியேவுக்கு வாழ்த்துகள்.

பாரதப் பிரதமரை விட அதிகமாய் ஊர் சுற்றியவர் ஒருத்தர் இருக்காருன்னா, அது இவர்தான். கோயில் உண்டியலில் கோடிகளைக் கொட்டும் கோடீஸ்வரர் முதல், கோயில் வாசலில் கையேந்தும் பிச்சைக்காரர் வரைக்கும் பாகுபாடு இல்லாமல் கை குலுக்குவார் நம்ம ஆளு. பல லட்சாதிபதிகளின் வேண்டுகோள் இவர், பல லட்சியவாதிகளின் குறிக்கோள் இவர். சட்டையே போடாமல் கை வண்டி இழுப்பவரையும் சட்டை காலர் கூட அழுக்காகாமல் இருப்பவரையும் தினம் சந்தித்து சிரிக்க வைக்கும் சிறப்பானவர் இவர்.

நாம திட்டுற திட்டுக்கெல்லாம் தலையாட்டி டாஸ்மாக்கில் சின்னப் பையன் சைடுடிஷ் கொண்டு வருவதும்... நாம கொட்டுற குப்பையையெல்லாம் தலைப்பா கட்டிக்கிட்டு கார்ப்பரேஷன்காரர் எடுத்துப்போவதும்... இவரைப் பார்க்கத்தான்! அலுவலக கண்ணாடிக்கும் சட்டை துணி மாட்டி வைக்கும் வசதி வந்தது இவரைப் பார்த்ததனால்தான்; அழுக்குச் சட்டையுடன் சிக்னலில் ஒருவர் நம்ம கார் கண்ணாடியைத் துடைத்துத் தருவதும், இவரைப் பார்க்க வேண்டுமென்பதால்தான்.

திரையில் முடி கோதிப் போகும் அழகு கலைஞர்களையும், கழுத்து வரை நமக்கு திரையிட்டு முடி வெட்டி நம்மை அழகாக்கும் கலைஞர்களையும் தினம் சந்திக்கும் இயல்பானவர் இவர். தங்கம் விற்பவர்கள் முதல், வாழ வழியின்றி தங்கள் உடம்பின் அங்கம் விற்பவர்கள் வரைக்கும்... ஊசி பாசி விற்பவர்கள் முதல்  ஊசி போடும் மருத்துவர்கள் வரைக்கும்... வீடு வாடகைக்கு விடுபவர்கள் ஆரம்பித்து வயதை வாடகைக்கு விடுபவர்கள் வரைக்கும்... எல்லா அடுக்கு மனிதர்களிடமும் இவருக்குப் பழக்கம்  உண்டு; தினம் ஒரு முறையேனும் அவர்களைக் கண்டு வரும் வழக்கமும் இவருக்கு உண்டு.

தினம் பல முறை காய்கறி வியாபாரி முதல் கிரானைட் வியாபாரி வரை சந்திக்கிறார். அம்பானி  முதல் அருக்காணி வரை அனைவரையும் பார்த்தவர் அவர். பூ விக்கிறவங்க கூட பேசிக்கிட்டு இருப்பாரு, படக்குன்னு போதையில இருக்கிறவன் கூட புரள்வாரு. வேடிக்கையான ஆளு! ஓட்டு போடுறவன் கைகளில் சிரிப்பார், ஓட்டு வாங்குறவன் பைகளை நிறைப்பார். முப்பது லட்ச ரூபாய்க்கு கார் வாங்கணும் என்றாலும் சரி, மூணு ரூபாய்க்கு மோர் வாங்கணும் என்றாலும் சரி, அண்ணன் தயவு வேணும். 

நாட்டுல நடக்குற கொலை, கொள்ளை போன்ற குற்றங்களைச் செய்யத் தூண்டும் மர்ம நபரும் அவர்தான், ஆதரவற்றோர் இல்லங்கள் முதல் முதியோர் இல்லங்கள் வரை வாழ வைக்கும் தர்மபிரபுவும் அவர்தான். கதர்சட்டை, காக்கிச்சட்டை, கருப்புச் சட்டைன்னு எந்த வித்தியாசமும் இவருக்கு இல்ல, இவரைப் பொறுத்தவரைக்கும் எல்லாமே கலர் சட்டைதான். சில பேரை பார்த்த உடனே கிளம்பிடுவாரு, சில பேர பார்த்தா போகவே மாட்டாரு. இவரை மதிக்கிறவங்களிடம் கூட கொஞ்சம் தள்ளி இருப்பாரு, இவரை மதிக்காதவங்களுக்குக் கூட
அள்ளி நிறைப்பாரு!

‘யாரு இவரு’ன்னுதானே கேட்கறீங்க, அதான் கண்டுபிடிச்சு இருப்பீங்களே! திருவாளர் ‘ரூபாய் நோட்டு’தான் அவரு. இப்ப ஒத்துக்குவீங்களா, பாரதப் பிரதமரை விட அதிகமாய் ஊர் சுற்றியவர் இவர்னு!

-ஓவியங்கள்: அரஸ்