பேட்மின்டன் பிரம்மா!



அட்டகாசமான வெற்றி... அநியாய தோல்வி... பி.வி.சிந்துவின் கிராஃப் எப்போதும் இப்படித்தான். ஒலிம்பிக் துவங்குவதற்கு இரண்டு மாதங்கள் முன்பாக ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டியில் இப்படி ஒரு மோசமான தோல்வியோடு சிந்து வெளியேற, ‘‘இந்தப் பொண்ணுக்காக ஏன் நேரத்தை வேஸ்ட் செய்கிறாய்?’’ என கோச் கோபிசந்த்திடம் பலரும் கேட்டார்கள். ‘‘எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என் உள்ளுணர்வு சொல்கிறது, சிந்துவுக்கு இம்முறை பதக்கம் நிச்சயம். 60 நாள் பொறுத்திருங்கள்’’ என்பதுதான் கோபியின் பதில்.

இதோ வெள்ளி மங்கையாக திரும்பி வந்திருக்கிறார் சிந்து. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண், மிக இளம் வயதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியர் என சாதனைகளோடு குவியும் பரிசுகளும் அவரைத் திணறச் செய்கின்றன. கடுமையான போட்டியில் தங்கப் பதக்க வாய்ப்பைத் தவறவிட்டு சிந்து குழம்பி நின்றபோது, ‘‘மேட்ச்சில் தோற்றதாக நினைக்காதே. நீ பதக்கம் வென்றிருக்கிறாய் என்பதை ஞாபகம் வைத்துக்கொள். உன் பல வருட உழைப்பின் பலன் இது’’ என்று பாசிட்டிவ் பக்கத்தைக் காட்டிய கோபிசந்த், இந்திய பேட்மின்டன் பிரம்மா. 

கடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற சாய்னா நெஹ்வால், இப்போது பி.வி.சிந்து, இந்த ஒலிம்பிக்கில் கால் இறுதிவரை முன்னேறி பல முன்னணி வீரர்களை வீழ்த்திய காந்த் கிடாம்பி என எல்லோரும் இவரது உருவாக்கமே! ‘பேட்மின்டன்’ என்றால் சீனா என்றிருந்த நிலை மாறி, இன்று சிந்துவுக்கும் காந்துக்கும் சீன ஷூ தயாரிப்பு நிறுவனமான ‘லி-நிங்’ ஸ்பான்சர் செய்யக் காரணம் இவரே! இந்த ஒலிம்பிக்கில் பெண்கள் பேட்மின்டனில் சீனாவுக்கு பதக்கம் கிடைக்கவில்லை. சிந்துவை வென்று தங்கம் வாங்கிய ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் இவரிடம் வந்து ஆசி பெற்றார் என்றால் கோபியின் ஆளுமை விளங்கும்!

கோபிசந்த், முன்னாள் பேட்மின்டன் சாம்பியன். அவர் விளையாடிய காலத்தில் இந்தியாவில் எந்த வசதிகளும் இல்லை. ‘‘வேகமா அடிச்சா இறகுப்பந்து கிழிஞ்சிடும், மெதுவா அடி’’ என்று கோச்சிங் கொடுப்பார்கள். சர்வதேசப் போட்டிகளுக்குப் போனபோது, இந்தியா இரண்டு தலைமுறை பின்தங்கி இருப்பதை உணர்ந்தார். ஆல் இங்கிலாண்ட் ஓப்பன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் வென்றபிறகு ஏற்பட்ட காயம், இவரது எதிர்காலத்தை முடக்கியது. விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை, பிசியோதெரபி என எல்லா விஷயங்களிலும் நாம் பின்தங்கி இருப்பதை உணர்ந்து கவலைப்பட்டார்.

‘எனக்கு நேர்ந்த துயரம் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு ஏற்படக்கூடாது. எல்லா வசதிகளையும் சர்வதேசத் தரத்தில் தர வேண்டும்’ என்ற அவரது கனவின் விளைவே, கோபிசந்த் பேட்மின்டன் அகாடமி. ஐதராபாத்தில் இதை அமைக்க நினைத்தபோது, அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஐந்து ஏக்கர் நிலம் கொடுத்தார். ஒரு தொழிலதிபர் 5 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தார். இப்படி பலரின் உதவியால் உருவான இந்த மையத்தில், உலகத்தரமான பேட்மின்டன் பயிற்சி கிடைக்கிறது. கோபிசந்த் தனிப்பட்ட கவனம் எடுத்து செதுக்குகிறார்.

சிந்துவின் வெற்றியைப் பார்த்து இனி பலரும் கொசு பேட்டில் கூட பயிற்சி எடுக்கக்கூடும். ஆனால் சிந்துவின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் உழைப்பை கவனிக்க வேண்டும். ‘‘8 வயதிலிருந்து அவர் பயிற்சி எடுக்கிறார். தினமும் அதிகாலை நான்கரை மணிக்கு வரச் சொல்வேன். ஒரே ஒருநாள்கூட ‘நாளைக்கு நான் பத்து நிமிஷம் லேட்டா வரலாமா’ என்று கேட்டதில்லை. அர்ப்பணிப்பு! அவருக்கு தோழிகள் அதிகம். எவரிடமும் ஐந்து நிமிடங்களில் ஃபிரண்ட் ஆகிவிடுவார். புன்சிரிப்பே அவரின் அடையாளம். ஆனால் களத்தில் இறங்கிவிட்டால் ஆக்ரோஷமாக ஆடுவார். கடைசி நிமிடம் வரை போராடுவார். இதுதான் அவரை பதக்கம் வாங்க வைத்திருக்
கிறது. இன்னும் அவர் போகவேண்டிய உயரங்கள் நிறைய உண்டு. அவர் இந்தியாவின் பெருமை’’ என்கிறார் கோபிசந்த். நீங்களும்தான்!

- அகஸ்டஸ்