பெண் பெஹல்வான்!



‘ஒரு பெண்ணை சிசுக்கொலை செய்யாமல் விட்டால் அவள் எத்தனை உயரத்துக்குப் போய் சாதிப்பாள் என்பதற்கு சாக்‌ஷி மாலிக் உதாரணம்’ என ட்விட்டரில் உணர்ச்சிவசப்பட்டார் வீரேந்திர ஷேவக். இந்தியாவிலேயே ஹரியானா மாநிலத்தில்தான் பெண் சிசுக்கொலை அதிகம். அங்கு 1000 ஆண்களுக்கு 871 பெண்களே இருக்கிறார்கள். சாக்‌ஷி மாலிக்கின் சொந்த கிராமம் மொக்ரா காஸ். இங்கு இன்னும் மோசம்! 1000 ஆண்களுக்கு 822 பெண்கள். ஆனாலும் விளையாட்டு உணர்வு ரத்தத்தில் ஊறியிருந்தால் சாதிக்க முடியும் என்பதற்கு ஹரியானா மாநிலமே உதாரணம்.

ஹரியானாவில் ஊருக்கு ஊர் ‘அகாரா’க்கள் எனப்படும் குஸ்தி மைதானங்கள் இருக்கின்றன. தினம் தினம் இங்கு இளைஞர்கள் மல்யுத்தப் பயிற்சி செய்கிறார்கள். கற்றுத் தேர்ந்த மல்யுத்த வீரரை ‘பெஹல்வான்’ என்கிறார்கள். சாக்‌ஷியின் சொந்த ஊரில் வீட்டுக்கு ஒரு பெஹல்வான் இருக்கிறார். ஆனாலும் கிராமம் இன்னும் நவீனத்துக்குப் பழகாததால், பெண்கள் மல்யுத்தப் பயிற்சி பெற அனுமதி இல்லை. அதனால் சாக்‌ஷி மாலிக் அருகில் இருக்கும் ரோடக் நகருக்குச் சென்று பயிற்சி பெற்றார்.

மல்யுத்தம் மட்டும் என்றில்லை, குத்துச்சண்டை, ஹாக்கி என பல விளையாட்டுகளில் ஹரியானா வீரர்கள் ஒலிம்பிக் வரை சென்றிருக்கிறார்கள். கடந்த ஒலிம்பிக்கில் ஒன்று, இந்த முறை இரண்டு என ஹரியானாவின் பதக்கப் பங்கு இருக்கிறது. எந்த கிராமத்துக்குப் போனாலும் அதிகாலையிலும் மாலையிலும் விளையாட்டுப் பயிற்சி எடுக்கும் மாணவர்களை, இளைஞர்களைப் பார்க்கலாம். அங்கு மக்களிடம் இயல்பாக ஊறியிருக்கும் விளையாட்டு உணர்வை அரசு ஊக்குவிக்கிறது. இந்தியாவிலேயே ஸ்டேடியங்கள் ஹரியானா மாநிலத்தில்தான் அதிகம்.

சிறுநகரங்களிலும் தரமான ஸ்டேடியங்கள் இருக்கும். இல்லாத ஊர்களில் பள்ளி மைதானங்களில் யாரும் விளையாடலாம். பள்ளியில் சேரும் பருவத்திலிருந்து ஒவ்வொரு குழந்தையும் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு விளையாட்டில் பங்கு பெற வேண்டும். விளையாட்டு பீரியடை கடன் வாங்கி பாடம் நடத்தும் பிசினஸ் தனியார் பள்ளிகளில்கூட இல்லை. குறிப்பிடத்தக்க சாதனை புரிந்து மெடல் வென்றால், அரசு வேலை நிச்சயம்.

அதோடு ராணுவம், ரயில்வே என எல்லா இடங்களிலும் விளையாட்டு சாதனையால் வேலை பெற்றவர்கள் அநேகம் பேர். ‘படித்தாலும் வேலை கிடைக்கும்; விளையாடினாலும் வேலை கிடைக்கும்’ என்ற நம்பிக்கையை அரசு தரும்போது, மைதானங்களுக்கு இயல்பாக வந்துவிடுகிறார்கள். சாக்‌ஷியின் வெற்றி வேறொரு வகையில் முக்கியமானது. ரோடக்கைச் சுற்றிய எல்லா கிராம பஞ்சாயத்துத் தலைவர்களும் அவரை பெருமிதத்தோடு தங்கள் ஊர்களுக்கு வரவேற்கிறார்கள். இன்னும் பல பெண்கள் சமூகத்தடையைத் தாண்டி குஸ்தி மேடைக்கு வர, அவர் முன்னுதாரணமாகி இருக்கிறார்.

- அகஸ்டஸ்