விஷால் காதலுக்கு சூரி போட்ட கெட்டப்ஸ்!



கத்தி சண்டை சுராஜ்

‘‘கராத்தே கத்துக்கணும்னு சொன்னீங்களே... இதோ மாஸ்டரை அழைச்சிட்டு வந்திருக்கேன்!’’ என்று தமன்னாவிடம் பவ்யமாக விஷால் சொல்ல, மாஸ்டரை ஆச்சரிய விழிகளால் லுக் விடுகிறார் தமன்னா. அவர் எதிரே சீன குங்ஃபூ மாஸ்டர் கெட்டப்பில் ஸ்டெப்ஸ் போட்டுக்கொண்டிருந்தார் சூரி. ‘தலைநகரம்’ நாய் சேகர், ‘மருதமலை’ சிரிப்பு போலீஸ் என வடிவேலுவுக்கு செம பீக் காமெடி ஹிட்ஸ் கொடுத்த சுராஜ், அடுத்து இயக்கி வரும் ‘கத்தி சண்டை’ படப்பிடிப்பில்தான் இந்த சுவாரசியம்.

‘‘வடிவேலு சாரோட ஒன்பது வருஷத்துக்குப் பிறகு வொர்க் பண்றேன். இதுல அவர் காமெடியனா ரீ-என்ட்ரி ஆகுறார். விஷாலுடன் நான் வொர்க் பண்ற முதல் படம். தமன்னாவுடன் விஷால்  முதல் தடவையா நடிக்கிறார். ஹிப்ஹாப் தமிழாவின் இசை. இப்படி நிறைய ஸ்பெஷல் இருக்கு...’’ - ரிமோட்டில் ஏசி குளிரை கொஞ்சம் அதிகரித்தபடி வரவேற்கிறார் சுராஜ்.

‘‘விஷால் அதிரடி ஆக்‌ஷன் பார்ட்டி... நீங்க காமெடி ஸ்பெஷலிஸ்ட்... இந்தப் படத்துக்கு அவர் எப்படி?’’
‘‘முன்னாடி ‘கதகளி’, ‘பாண்டியநாடு’னு கம்ப்ளீட் ஆக்‌ஷன்ல கலக்கினவர் விஷால். அவரை ஆக்‌ஷன் காமெடிக்குள் கொண்டு வந்தா செட் ஆவாரான்னு கொஞ்சம் யோசிச்சேன். பர்சனலா பழகின பிறகுதான், அவரோட ஹ்யூமர் சென்ஸ் எனக்குத் தெரிஞ்சது. அவர் நாலு வார்த்தை தொடர்ந்து பேசினா, அதுல மூணு வார்த்தையில காமெடி மிளிரும். ‘கத்தி சண்டை’யில அவர் எந்த வேலைக்கும் போகாத, பயங்கர கேடி. அவர் பொக்கிஷமா ஒரு உண்மையை மறைச்சு வச்சிருப்பார். அந்த உண்மைதான் படத்தின் கதை.

வடிவேலு சாரோட காமெடி, விஷாலுக்கு ரொம்ப பிடிக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டுல கூட கேரவனுக்குப் போகாமல், வடிவேலு சீன்கள் எல்லாத்தையும் மானிட்டர்ல பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சிட்டிருப்பார். ஆக்‌ஷனும், காமெடியும் சரிவிகிதத்துல கலந்து கதை சொன்னாலே, அது நிச்சயம் ஹிட் ஆகிடும். இதுவரை நான் சென்டிமென்ட் தொட்டதில்ல. முதல் தடவையா கொஞ்சம் சென்டிமென்ட்டையும் தூவியிருக்கேன்.’’

‘‘வடிவேலுவை எப்படி சம்மதிக்க வச்சீங்க?’’
‘‘சுந்தர்.சி சார்கிட்ட ‘வின்னர்’ல வேலை பார்த்த டைம்ல இருந்து வடிவேலு சாரை எனக்குத் தெரியும். ‘கிரி’ படத்துக்குப் பிறகு எங்க நட்பு இன்னும் அதிகமாச்சு. இந்தப் படத்தோட கதையை விஷால் சார்கிட்ட சொன்னேன். ‘ரெண்டாவது பாதியில வர்ற காமெடி கேரக்டருக்கு எனக்கு வடிவேலு அண்ணன்தான் மைண்ட்ல வந்தார். அவர் இந்தப் படத்துல இருந்தா நல்லா இருக்கும்’னு விஷால் விரும்பினார். நான்  எழுதி வடிவேலு சார் பேசின, ‘எதையுமே ப்ளான் பண்ணிப் பண்ணணும்...’, ‘தாய்ப் பாசத்துல நம்மள மிஞ்சினவனா இருக்கானே...’னு பல வசனங்கள் எவர்கிரீன் ஹிட்ஸ். எல்லாமே இப்பவும் மீம்ஸ்ல ஹாட் டயலாக். வடிவேலு சார் ஹீரோவா ஃபார்ம் ஆகிட்டார். அவரை மறுபடியும் காமெடியனா கேட்கவே சின்னதா எனக்குத் தயக்கம் இருந்துச்சு. ஆனாலும் அவர்கிட்ட கதையைச் சொன்னேன். என் மேல இருந்த நம்பிக்கையில காமெடியனா நடிக்க வந்திருக்கார். அவரோட நம்பிக்கையை காப்பாத்தி இருக்கேன்னு நம்பறேன்.’’

‘‘வடிவேலு-சூரி காம்பினேஷன் எப்படி வொர்க் அவுட் ஆச்சு?’’
‘‘படத்துல அவங்களுக்கு காம்பினேஷன் கிடையாது. முதல் பாதியில சூரி ஸ்கோர் பண்ணியிருக்கார். ரெண்டாவது பாதியில வடிவேலு சார். ‘இன்னொரு காமெடி கேரக்டரை சூரி பண்றார்’னு அவர்கிட்ட சொன்னேன். ‘யார் பண்ணினா என்னண்ணே? அவரும் நடிக்கட்டும். என் வேலையை நான் கரெக்ட்டா பண்ணிடுவேன்’னு வடிவேலு சார் சொன்னார். டாக்டர் பூத்திரி அவர். ரெட்டை ஜடை போட்டுட்டு விதவிதமான கெட்டப்பில் அசத்தியிருக்கார். விஷால் - தமன்னா காதலுக்கு உதவி செய்யறவர் சூரி.

‘பரதநாட்டியம் கத்துக்கப் போறேன். மாஸ்டர் வேணும்’னு தமன்னா விஷால்கிட்ட கேட்டால், அவர் சூரிக்கு பெண் கெட்டப் போட்டு பரதநாட்டிய மாஸ்டரா கொண்டு வருவார். இப்படி காதலுக்காக அவர் நிறைய கெட்டப் போட்டிருக்கார். ‘அண்ணே... இந்த கெட்டப்பில் நான் செமையா இருக்கேன்’னு ஒவ்வொரு கெட்டப் போடும்போதும் கண்ணாடி முன்னாடி ரொம்ப நேரம் நின்னு ரசிச்சு, செல்ஃபி எடுத்து சந்தோஷப்பட்டிருக்கார். ‘வடிவேலு அண்ணே இருந்தாலும் நானும் ஒரு ஓரமாவாச்சும் நடிக்கறேன்’னு சூரி சொல்லி நடிச்சிருக்கார்.’’

‘‘தமன்னா இப்போ எப்படி?’’
‘‘ரொம்ப சின்ஸியர் பொண்ணு தமன்னா. ‘படிக்காதவன்’ டைம்லேயே, ‘யூனிட்ல யார் பேசினாலும் தமிழ்லேயே பேசுங்க. அப்போதான் நான் ஸ்பீடா பிக்கப் பண்ணிக்க முடியும்’னு சொல்வாங்க. ‘பாகுபலி 2’, பிரபுதேவா படம்னு பிஸியா இருந்தாலும், நாங்க கேட்ட கால்ஷீட்டை கொடுத்தாங்க. ‘இன்னும் சரளமா தமிழ் பேச கத்துக்கலையா?’னு கேட்டேன். ‘கூடிய சீக்கிரம் பேசுவேன்’னு சொல்லியிருக்காங்க. மும்பையில் இருந்து இங்கே வந்து குஷ்பு சரளமா தமிழ்ல பேசுறாங்க. ஆனா அவங்களுக்குப் பிறகு வந்த மத்த ஹீரோயின்கள் அவங்கள மாதிரி தமிழ்ல பேசமாட்டேன்றாங்க. தமிழ் தெரிஞ்சா, எக்ஸ்பிரஷன்ஸை கரெக்ட்டா புரிஞ்சு நடிக்க முடியும். அந்த வகையில் தமன்னா பெஸ்ட்!’’

‘‘தொடர்ந்து காமெடி படங்களே இயக்குறீங்களே?’’
‘‘எனக்குத் தெரிஞ்சது காமெடி மட்டும்தான். காமெடி ஒரு சேஃப் கேம். நம்ம வீட்ல இருக்கற பெரியவங்க இப்போ தியேட்டருக்கு வர்றதில்ல. காமெடி சேனல்தான் அவங்க பொழுதுபோக்கு. பேய்ப் பட ட்ரெண்ட்னாலும், காமெடி பேய்ப் படங்கள்தான் ஹிட் ஆகுது. பத்து சதவிகிதம் பேர்தான் டெக்னீஷியன்கள் தெரிஞ்சு தியேட்டருக்குள்ள வர்றாங்க. மீதி எல்லாருமே, ‘படத்துல பெரிய ஆர்ட்டிஸ்ட் இருக்காங்களா? காமெடி பன்ச்சஸ் இருக்கா?’னு பாத்து வர்றவங்கதான். இங்கே டயலாக் காமெடிகள்தான் பெரிய அளவில் ரீச் ஆகும். இந்த மீம்ஸ் கல்ச்சர்ல நமக்கு இன்னும் அது ப்ளஸ்.

‘படிக்காதவன்’ படத்தோட வெற்றி விழா மதுரையில் நடந்தது. தனுஷ் கூட நானும் போயிருந்தேன். கூட்டத்தில தனுஷுக்கு செம வரவேற்பு, விசில்கள், கைதட்டல்கள், தோரணங்கள்னு அமர்க்களப்பட்டுச்சு. மேடையில ‘என்னை பார்த்தா பிடிக்காது. பாக்கப் பாக்கத்தான் பிடிக்கும்’னு தனுஷ் சொல்ல... அப்ளாஸ் வானளவு அதிர்ந்துச்சு. ‘அந்த டயலாக்கை எழுதினவர் இவர் தான்’னு தனுஷ் என்னைக் காட்டி சொன்னார். பத்து கைதட்டல் கூட வரல. காமெடியோட கலந்த பெரிய ஆர்ட்டிஸ்ட் படங்களுக்குத்தான் எப்பவும் வரவேற்பு கிடைக்கும்.’’

‘‘படத்துல வேற என்ன ஸ்பெஷல்?’’
‘‘ ‘ரோமியோ ஜூலியட்’ நந்தகோபால் சார்தான் தயாரிச்சிருக்கார். அவர் புரொடக்‌ஷன்ல இது பெரிய பட்ஜெட் படம். ‘சமர்’, ‘வணக்கம் சென்னை’, ‘மதகஜராஜா’ படங்களின் கேமராமேன் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். பெரிய நடிகர்களை வச்சு, அவங்க கொடுத்த கால்ஷீட்டுக்குள்ள ஒரு படத்தை முடிக்கறது பெரிய சவால். இந்தப் படம் 70 நாட்கள்ல முடிய ரிச்சர்ட்தான் காரணம். அப்படி ஒரு ஸ்பீட்மேன். ஹிப்ஹாப்பின் மியூசிக் பிரமாதமா வந்திருக்கு.

எப்பவுமே ஆக்‌ஷன் போர்ஷனுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பேன். கனல் கண்ணனோட ஸ்டன்ட் பேசப்படும். படத்துல ‘கணிதன்’ வில்லன் தருண், ஜெயப்பிரகாஷ், சின்னிஜெயந்த், ஆர்த்தி, ‘சுந்தரபாண்டியன்’ சௌந்தர்னு நிறைய நட்சத்திரங்கள் இருக்காங்க. படம் தீபாவளி ரிலீஸ் என்பதால், ஒரு கலர்ஃபுல்லான ஃபெஸ்டிவல் படமா பண்ணினதுல எனக்கு ரொம்ப திருப்தி.’’

- மை.பாரதிராஜா