நியூஸ் வே



* காஷ்மீரில் தொடரும் பதற்றம் அங்கு ஆப்பிள் விவசாயிகளை பெரும் கவலையில் தள்ளியிருக்கிறது. ஆண்டுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆப்பிள் வியாபாரம் இங்கு நடக்கிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் டெல்லியிலிருந்து வியாபாரிகள், காஷ்மீரில் இருக்கும் ஏழு ஆப்பிள் மார்க்கெட்களுக்கு வருவார்கள். விலை பேசி, ஆப்பிள் இங்கிருந்து லாரிகளில் செல்லத் தொடங்கும். ஆனால் கலவரங்கள், ஊரடங்கு உத்தரவுகளால் ஆப்பிளை பறிக்கவும் முடியவில்லை; லாரிகளில் வந்ததும் ஆங்காங்கே வழிகளில் இன்று அழுகத் தொடங்கிவிட்டன. டெல்லி வியாபாரிகள் வரவும் அஞ்சுகிறார்கள். ‘‘இது காஷ்மீரின் பெரும்பாலான விவசாயிகளை நெருக்கடியில் தள்ளுவதோடு, ஆப்பிள் விலையையும் கணிசமாக உயர்த்திவிடும்’’ என கவலை தெரிவிக்கிறார்கள் காஷ்மீர் ஆப்பிள் வியாபாரிகள்.

* காஷ்மீரில் தொடரும் பதற்றம் அங்கு ஆப்பிள் விவசாயிகளை பெரும் கவலையில் தள்ளியிருக்கிறது. ஆண்டுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆப்பிள் வியாபாரம் இங்கு நடக்கிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் டெல்லியிலிருந்து வியாபாரிகள், காஷ்மீரில் இருக்கும் ஏழு ஆப்பிள் மார்க்கெட்களுக்கு வருவார்கள். விலை பேசி, ஆப்பிள் இங்கிருந்து லாரிகளில் செல்லத் தொடங்கும். ஆனால் கலவரங்கள், ஊரடங்கு உத்தரவுகளால் ஆப்பிளை பறிக்கவும் முடியவில்லை; லாரிகளில் வந்ததும் ஆங்காங்கே வழிகளில் இன்று அழுகத் தொடங்கிவிட்டன. டெல்லி வியாபாரிகள் வரவும் அஞ்சுகிறார்கள். ‘‘இது காஷ்மீரின் பெரும்பாலான விவசாயிகளை நெருக்கடியில் தள்ளுவதோடு, ஆப்பிள் விலையையும் கணிசமாக உயர்த்திவிடும்’’ என கவலை தெரிவிக்கிறார்கள் காஷ்மீர் ஆப்பிள் வியாபாரிகள்.

* இந்தியாவில் குற்றச்செயல்கள் அதிகம் நடக்கும் நகரங்களில் டெல்லி, மும்பையை விஞ்சிவிட்டது கேரளத்திலுள்ள கொல்லம்! சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குற்றப் பதிவு அறிக்கை, கடந்த ஆண்டு கொல்லத்தில் மட்டும் 13,257 குற்றங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது மொத்த இந்தியாவின் குற்றப்பதிவில் இரண்டு சதவீதம்! பாலியல் துன்புறுத்தல் குற்றத்தில் 15.5 சதவீதம் நிகழ்ந்து, இந்தியாவில் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது கொல்லம்! ஏற்கனவே, கடந்த 2012ல் ‘யாகூ’ நிறுவனம் எடுத்த சர்வே, ‘இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத இருபது நகரங்களில் கொல்லமும் ஒன்று’ என தெரிவித்திருந்தது.

* ரியோ ஒலிம்பிக்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் ஏமாற்றிவிட்டார். ஆனால் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி, கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் அவர் வாங்கிய வெண்கலப் பதக்கம் வெள்ளியாக உயர்ந்தது. அந்தப் போட்டியில் வெள்ளி வென்ற ரஷ்ய வீரர் பெஸிக் குடுகோவ் ஊக்க மருந்து பயன்படுத்தி இருந்தது சமீபத்தில் தெரிய வந்தது. வென்ற வீரர்களின் சிறுநீர் சாம்பிள்களை 10 ஆண்டுகள் பாதுகாத்து வைத்து மீண்டும் மீண்டும் சோதனைகளுக்கு உட்படுத்துவது ஒலிம்பிக் நடைமுறை. வெள்ளி வென்ற பெஸிக் அடுத்த ஆண்டே ஒரு கார் விபத்தில் இறந்து விட்டார். ஆனாலும், ‘‘அந்தப் பதக்கத்தை அவரது குடும்பமே வைத்துக்கொள்ளட்டும். பெஸிக் நான் மதிக்கும் மகத்தான வீரர். அவரின் குடும்பத்தை வேதனைப்படுத்தி அந்தப் பதக்கத்தை நான் வாங்க விரும்பவில்லை’’ என பெருந்தன்மை காட்டியிருக்கிறார் யோகேஷ்வர்.

* உலகின் பல லொகேஷன்களை ‘360 டிகிரி’  கோணத்தில் காட்டும் கூகுள் மேப்ஸ் திட்டத்தில் வெற்றியடைந்த கூகுள் நிறுவனத்தால், இன்னமும் உலகின் பல மூலை முடுக்குகளை சரியாகக் காட்ட இயலவில்லை.  மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளைப் பற்றிய தகவல்களை சேகரிக்க ஆடுகளை பயன்படுத்தலாம் என முடிவு செய்துள்ளது கூகுள். முதற்கட்டமாக இங்கிலாந்தின் ஆளில்லா தீவுகளில் ஆடுகளின் மீது, சோலார் பேனல்களுடன் இணைக்கப்பட்ட கேமராக்களைப் பொருத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க இருக்கிறது. மேலும் இந்தத் திட்டத்தை அன்டார்க்டிகாவில் உள்ள தீவுகளிலும் நடைமுறைப்படுத்த இருக்கிறது. சோதனை முயற்சியில் ‘18 தீவுகள்’ குறித்த தகவல்களை ஆடுகள்  பதிவு செய்துள்ளதாக  கூடுதல் செய்திகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

* பாராட்டு விழாக்கள், கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு அடுத்த ஒலிம்பிக் போட்டிகளுக்காக இப்போதே பயிற்சிக்குத் தயாராகிறார், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர். ஆனால் மாநில முதல்வர் மாணிக் சர்க்கார், ‘‘ஒலிம்பிக்கிற்கு இன்னும் நேரம் இருக்கிறது. படிப்பும் முக்கியம். அதை முதலில் முடித்துக்கொள்ளுங்கள்’’ என அட்வைஸ் செய்திருக்கிறார். தீபா இப்போது எம்.ஏ. பொலிடிக்கல் சயின்ஸ் படிக்கிறார்.

* நமது பூமி கடந்த வாரம் முதல் புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைத்திருப்பதாக புவிசார் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சகாப்தத்தை ‘ஆந்த்ரோபோசின்’ (anthropocene) எனும் பெயரில் அழைக்கிறார்கள். மனிதனின் நடவடிக்கைகளால் புவியின் சமநிலை சீர்குலைந்து போயிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அணுக்கழிவு, பிளாஸ்டிக் குப்பைகள், ஏன்... கோழிகளிலிருந்து வெளியேறும் கழிவுகளைக் கூட இந்த சகாப்தத்துக்கு முக்கியமான காரணமாகக் கூறுகிறார்கள். கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பு, கடல்நீர் மட்ட  உயர்வு, சில உயிரினங்களின் அழிவு, மற்றும் காடு அழிப்பு போன்றவை இந்த சகாப்தம் உருவாகக் காரணமாக இருந்ததாகச் சொல்கிறார்கள். இதற்கு முந்தைய சகாப்தமான  ‘ஹோலோசின்’ சுமார் 11 ஆயிரம் வருடங்கள் பூமியை ஒரு சமநிலையில் வைத்திருந்தது. ‘ஆந்த்ரோபோசின்’தான் மனிதனின் கடைசி சகாப்தமாக இருக்குமோ?

* இந்தியக் கல்வி முறையில் பத்தாம் வகுப்பு மற்றும் +2 கூட படிக்காத மும்பையைச் சேர்ந்த ‘மாளவிகா ஜோஷி’க்கு கடந்த வாரம் அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘எம்.ஐ.டி’ கல்வி மையத்தில் உதவித்தொகையுடன்  ‘பி.எஸ்சி’ படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 7ம் வகுப்பு வரையே பள்ளியில் படித்த மாளவிகாவால் தொடர்ந்து படிக்க முடியாத குடும்ப சூழ்நிலை. இதுமாதிரி பாதியில் படிப்பைவிட்ட குழந்தைகள், வீட்டில் முடங்குவதோ அல்லது வேலைக்குச் செல்வதோதான் பொதுவாக நம் சமூகத்தில் நடக்கும்.

ஆனால் வீட்டிலேயே தன் ‘கம்ப்யூட்டர் புரோகிராமிங்’ கல்வியை சுயமாக வளர்த்துக்கொண்ட மாளவிகா, உலகளாவிய ‘புரோகிராமிங்’ சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று தடவை பரிசை வென்றதோடு, எம்.ஐ.டியில் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்பையும் பெற்றுவிட்டார். வீட்டிலிருந்தே படிக்கும் ‘ஹோம் ஸ்கூலிங்’ சிஸ்டம் இங்கு படித்த, மேல்தட்டு வர்க்கத்தினரிடையே வளர்ந்து வந்தாலும், ஏழ்மையான சூழ்நிலையிலிருந்து வந்த மாளவிகாவின் இந்த  வெற்றி, படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு ஒரு நம்பிக்கையை வழங்கியிருக்கிறது.

* ஓய்வு முடிவை விலக்கி மீண்டும் அர்ஜென்டினா கால்பந்து அணிக்குத் திரும்பியிருக்கிறார் மெஸ்ஸி! ‘‘அந்த நேரத்தில் எல்லாமே நொறுங்கிக் கீழே விழுந்ததுபோல் உணர்ந்தேன். நாங்கள் எப்படிப்பட்ட அணி, எல்லாருமே வெற்றியை நோக்கி முனைப்புடனே செயல்பட்டோம். எங்களிடம் தேசிய அணிக்கு வெற்றியை ஈட்டித் தர வேண்டும் என்ற கனவு இருந்தது. எல்லாமே ஏமாற்றமாக முடிந்துவிட்டது’’ என வருத்தம் பொங்கியவர், ‘‘சில காலம் கழித்து யோசித்துப் பார்த்தேன். இப்படிப்பட்ட தருணங்கள் நடக்கத்தான் செய்யும் என்பது புரிந்தது’’ என்கிறார் புத்துணர்வுடன்!

* உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு வரப்போகும் தேர்தலுக்கு இப்போதே வரிந்து கட்டுகின்றன கட்சிகள். இதில் பாரதிய ஜனதாவுக்கும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் பெரும் போட்டி. ‘‘இதற்காக பாரதிய ஜனதா எந்த எல்லைக்கும் போகும். காஷ்மீர் பிரச்னை மற்றும் தீவிரவாதத்தைக் காரணம் காட்டி பாகிஸ்தான் மீது போர் தொடுக்கவும் தயங்க மாட்டார்கள்’’ என பிரசாரக் கூட்டங்களில் கொளுத்திப் போடுகிறார் மாயாவதி.