ஷாம்லிக்கு நல்ல எதிர்காலம் இருக்கு!



விக்ரம்பிரபு

சென்னை தி.நகரின் போக் சாலையில் அனைவருக்கும் தெரிந்த லேண்ட்மார்க் ‘அன்னை இல்லம்’. அங்கிருந்து வந்த மூன்றாவது தலைமுறை மிஸ்டர் ஸ்மார்ட் விக்ரம்பிரபு. தாத்தா பெயரிலேயே அமைந்த ‘வீரசிவாஜி’ ரெடியாகி ரிலீஸுக்குக் காத்திருக்கிற நேரம்... சிறு தூறலாக எப்போதும் விழுவேன் என மேகம் போர்த்துக் கிடந்த ஒரு பகலில் இதமாக ஆரம்பித்தது உரையாடல். ‘‘சினிமா தவிர ரிலாக்ஸிங்னா... ‘சண்டே’தான். அன்னிக்கு செல்போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு குடும்பத்தோட நேரம் செலவழிக்கிறது பிடிக்கும்.

கூட்டுக்குடும்பம்ங்கறதால ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமல் பேசாமல் இருந்துடக் கூடாதுனு கவனமா இருக்கேன். தாத்தாவுக்கு அப்பாவோட டைம் செலவழிக்க வாய்ப்பு கிடைக்கல. அதனால எங்களோட நிறைய டைம் செலவழிச்சாங்க. அதே மாதிரி அப்பா, எங்களோட நேரம் செலவிடலை. பேரக் குழந்தைகளோட பேசி மகிழறாங்க. எனக்கும் அதே நிலை நடந்துடக் கூடாதுங்கறதுக்காக சண்டே ஹாலிடே எடுத்துக்கறேன். அன்னிக்கு முழுவதும் தியேட்டர், அவுட்டிங்னு ஃபேமிலியோட  இருக்கறது எனக்குப் பிடிச்ச விஷயம்.’’

‘‘ ‘வீரசிவாஜி’ சரித்திரப் படமா? தாத்தாவைப் பற்றியதா?’’
‘‘ரெண்டுமே இல்லை. பொழுதுபோக்கும் ஆக்‌ஷனும் கலந்த அழகான படம். இதுவரை பத்து படங்கள் முடிச்சிட்டேன். கதைக்காக பெரிதாக மெனக்கெடாமல் ரொம்ப ஜாலியா பண்ணின படம் ‘வெள்ளக்கார துரை’. அதுக்குப் பிறகு ஆக்‌ஷன் ப்ளஸ் என்டர்டெயின்மென்ட் கலவையில் படம் பண்ண விரும்பினேன். அப்படி அமைஞ்சதுதான் ‘வீரசிவாஜி’. ‘கும்கி’ கேமராமேன் சுகுமார் அண்ணன் மூலம், இந்தப் படத்தோட இயக்குநர் கணேஷ்விநாயக் அறிமுகமானார். படத்தோட டைட்டிலைக் கேட்டதும் அப்பாகிட்டேயும், பெரியப்பாகிட்டேயும் பேசினேன். ‘அதனால என்ன..? அதுக்கான வொர்த் இருந்தா தாராளமா பண்ணுப்பா’னு க்ரீன் சிக்னல் கொடுத்தாங்க.

என்னோட பிரதர் இமான், எனக்கே எனக்குனு ஸ்பெஷலா பாடல்கள் போட்டுக் கொடுத்திருக்கார். ஐந்து படங்கள் அவரோட வொர்க் பண்ணியிருக்கேன். இதுக்கு முன்னாடி என் படங்களோட மியூசிக் வொர்க் நடக்கும்போது என்னை அவர் கூப்பிட்டு பேசினதில்ல. ‘படம் நல்லா வந்திருக்கு பிரதர்’னு இப்ப இமான் பாராட்டினதில் படத்தோட வெற்றி தெரிஞ்சது!’’

‘‘ஷாம்லி..?’’
‘‘படத்தோட தயாரிப்பாளரும், இயக்குநரும்தான் ஷாம்லியை செலக்ட் பண்ணினாங்க. ஷாம்லி, எல்லாருக்குமே நல்லா தெரிஞ்சவங்க. பொறந்ததில் இருந்தே நடிச்சிட்டிருக்காங்க. தமிழ்ல அவங்க ஹீரோயினா அறிமுகமாகிற முதல் படம் என்னோடதுங்கறதுல ஒரு சந்தோஷம். முதல் நாள் ஷூட்டிங் அப்பவே கேமராபத்தி எந்தவித பயமும் இல்லாம ஈஸியா நடிச்சுக் கொடுத்தாங்க. இந்தப் படத்துக்குப் பிறகு நல்ல ஸ்கிரிப்ட்கள் தேர்ந்தெடுத்து நடிச்சாலே போதும், அவங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.’’

‘‘பாண்டிச்சேரி அனுபவம் எப்படி?’’
‘‘இது பாண்டிச்சேரியில் நடக்கற கதைங்கறதால அங்கேயே போய் ஷூட் பண்ணிட்டு வந்திருக்கோம். அப்புறம் ஒரு பாடல் காட்சிக்காக ஜார்ஜியா பக்கம் ‘திபிலிஸி’க்கு போயிட்டு வந்திருக்கோம். ‘பயங்கர குளிரான நாடு’னு சொன்னாங்க. ஆனா, அங்கே போன முதல் ரெண்டு நாட்கள்லேயும் செம ஹாட். ஃபாரீன் வந்ததும் வெயிலான்னு ஃபீலானேன். ஆனா, மூணாவது நாள்ல இருந்து வெடவெடக்கும் குளிர்லதான் நடிச்சோம்.’’

‘‘அடுத்து..?’’
‘‘ ‘சுந்தரபாண்டியன்’ எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ‘முடிசூடா மன்னன்’ பண்றேன். திருச்சியில் நடக்கற கதை அது. இந்தப் படத்துக்காக லுக் விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கேன். டப்பிங் ஆரம்பிச்சிட்டோம். அதை அடுத்து ‘நெருப்புடா’ பண்றேன். ‘ரோமியோ ஜூலியட்’ லக்‌ஷ்மணோட அசிஸ்டென்ட் அசோக்குமார் இயக்குறார். என்னோட ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமா ‘நெருப்புடா’ ரெடியாகுது. 20 நாட்கள் ஷூட்டிங் முடிச்சிட்டு வந்திட்டோம். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். என்னை ‘அரிமா நம்பி’யில் அழகா காட்டின ஆர்.டி.ராஜசேகர் இதிலும் ஒளிப்பதிவு பண்றது இன்னும் ஹேப்பி!’’

‘‘தொடர்ந்து ஆக்‌ஷன்ல கவனம் செலுத்துறீங்களே?’’
‘‘ ‘சின்னதம்பி’யில அப்பா, ‘அதெல்லாம் தானா வந்தது’னு ஒரு டயலாக் சொல்லுவாங்க. அந்த மாதிரி ஆக்‌ஷன் தானா அமையுது. ஒரு டான்ஸையோ, ஃபைட்டையோ ஸ்கிரிப்டை மீறி என்னிக்கும் திணிச்சு பண்ணினதில்ல. ஸ்கிரிப்ட் பார்த்துதான் செலக்ட் பண்றேன்.  ‘வீரசிவாஜி’யில் நல்லா டான்ஸ் ஆடியிருக்கேன். தினேஷ் மாஸ்டர் என் ஹைட்டுக்கு ஏத்த மாதிரி மூவ்மென்ட்ஸ் வச்சு என்னை இம்ப்ரூவ் பண்ணியிருக்கார்.’’

‘‘200 படங்கள் பண்ணியிருக்கார் பிரபு. அவர்கிட்ட பிடிச்சது எது? பிடிக்காதது எது?’’
‘‘இன்னிக்கு இருக்கற ஆர்ட்டிஸ்ட்கள் அவ்வளவு படங்கள் பண்ண முடியுமாங்கறதே சந்தேகம்தான். ஒரு வருஷத்துக்கு 12 படங்கள் கூட பண்ணியிருக்கார். அப்போ தியேட்டர் மட்டும் இருந்துச்சு. சினிமாவுக்கு ஆரோக்கியமான ஒரு சூழல் இருந்துச்சு. இப்போ போன்லேயே படம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. தாத்தா, அப்பா காலங்கள் தமிழ் சினிமாவின் பொற்காலம்.

நூறு நாட்கள் கொண்டாடின படங்கள் சாதாரணமாகவே இருக்கும். ஆனா, இன்னிக்கு மூணு நாள் ஓடினாலே ஹிட்னு சொல்றாங்க. இதையெல்லாம் மனசில் வச்சுதான் படம் பண்றோம். அப்பாகிட்ட பிடிச்சது... அவங்க ரொம்ப நல்லவங்க. அன்புங்கறது சொல்லி வர்றதில்ல. ஈஸியாவே அவங்களுக்கு வரும். எல்லாரையும் ஒரே மாதிரி ட்ரீட் பண்ணுவாங்க. அப்பாகிட்ட பிடிக்காததுன்னு எதுவும் பெருசா இல்லை.’’

- மை.பாரதிராஜா