இனி ஏ.டி.எம் வழியாக கடன் வாங்கலாம்!



பணம் இல்லாத பர்ஸ்கூட இருக்கும். ஆனால் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இல்லாத இளசுகளின் பர்ஸைப் பார்க்கவே முடியாது. மின்பணமாக பாக்கெட்டில் இருக்கும் இந்த ஏ.டி.எம் கார்டுகள் நம் வாழ்க்கையோடு பிணைந்துவிட்டன. வங்கிக்கணக்கில் பணம் இருந்தால், எந்த நேரத்திலும் எங்கும் டெபிட் கார்டு நமக்கு பணம் எடுத்துத் தரும். மாதச் சம்பளம் அதற்குள்தான் வந்து சேர்கிறது. ஷாப்பிங் முதற்கொண்டு பலவிதமான பணப் பரிவர்த்தனைகளை இந்த கார்டுகள் வழியாகத்தான் செய்கிறோம்.

இன்றைக்கு ஏ.டி.எம் மையம் என்பது ஒரு வங்கியைப் போல் செயல்படுகிறது. பணம் போடலாம்; எடுக்கலாம்; பாஸ்புக் அப்டேட் செய்யலாம். நம் கணக்கில் செக்/ டிராஃப்ட் போடலாம். ஆனால் வங்கிக்கு இருக்கின்ற பாதுகாப்பு வசதிகள் ஏ.டி.எம் மையத்துக்கு இருக்கிறதா? ஏ.டி.எம் மையங்களில் நடக்கின்ற கொள்ளைகள், ஏ.டி.எம் இயந்திரமே திருடுபோகும் சம்பவங்கள், பாதுகாப்பின்மையை அம்பலப்படுத்துகின்றன. ஆனால் எதிர்காலம் மாறப் போகிறது!

‘‘இந்தியாவில் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் வசதிகள் இன்னும் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையவில்லை. இந்தக் குறையை ஏ.டி.எம் மையங்களால் மட்டும்தான் தீர்க்க முடியும். கல்வி அறிவில்லாத கிராமத்து, ஏழை, நடுத்தர மக்களுக்கு ஏ.டி.எம் மையங்களால்தான் எளிதான நிதிச் சேவையை அளிக்கமுடியும்’’ என்கிறார், என்.சி.ஆர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இந்திய மற்றும் தென்னாசிய கிளையின் மேலாண்மை இயக்குனர் நவ்ரோஸ் தஸ்தூர். இந்தியாவில் பெருமளவில் ஏ.டி.எம் இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனம் இது. இந்தியாவில் ஏ.டி.எம் இயந்திரங்களின் எதிர்காலம், பாதுகாப்பு, பிரச்னைகளைக் குறித்து அவரிடம் பேசினோம்.

‘‘ஒரு வங்கி அதிகாரி செய்யும் பணிகளில் 85 சதவீத வேலையை சில ஏ.டி.எம் இயந்திரங்களால் செய்யமுடியும். இன்று ஒரு ஏ.டி.எம் இயந்திரம் என்பது வெறுமனே பணம் கொடுப்பது, பணம் பெறுவது, பாஸ்புக் அச்சிட்டுக் கொடுப்பது என்று மட்டுமே இருக்கிறது. இனி டெபாசிட், கடன் கொடுப்பது போன்ற பல்வேறு சேவைகளையும் ஏ.டி.எம் இயந்திரத்தால் வழங்க முடியும். உதாரணமாக எங்களது தயாரிப்பான ‘கல்பனா’ ஏ.டி.எம், பலவிதங்களில் மற்றவற்றிலிருந்து வித்தியாசப்படுகிறது.

இது ஆண்ட்ராய்டு, டச் கீ போர்டு, ஆன்ட்டி ஸ்கிம்மிங் சாஃப்ட்வேர், ஹை செக்யூரிட்டி, 4 கேமராக்கள் போன்ற வசதிகளைக் கொண்டது. குறைந்த அளவு மின்சாரத்தில்கூட இயங்கக்கூடியது. ஏ.டி.எம் திருடர்கள் அண்மைக்காலமாக ‘ஸ்கிம்மர்’ எனும் ஒரு சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி ஏ.டி.எம் மையங்களில் நாம் சொருகும் கார்டை டூப்ளிகேட் செய்து வருகின்றனர். ஸ்கிம்மிங் திருடர்கள் நாம் தட்டும் பின் நம்பரை கூரையில் பதித்துவைத்த ஒரு சிறிய கேமரா மூலம் படம்பிடித்து தெரிந்துகொள்வார்கள்.

இந்த கல்பனாவில் 4 கேமராக்கள் இருப்பதால், திருடர்கள் இதில் கட்டாயம் மாட்டிக்கொள்வார்கள். அப்படி மாட்டும்போது கல்பனா இயந்திரம் செயல்படுவதை தானாகவே நிறுத்திவிடும். இதனால் அடுத்த நுகர்வோரும் பாதிக்கப்படமாட்டார்’’ என்று சொல்லும் தஸ்தூர், நமக்கு எதிராக நின்றுகொண்டு பேசும் ஒரு பெண்ணைப் போலவே பல்வேறு செயல்களை செய்யக்கூடிய இன்டராக்டிவ் அல்லது வி.டி.எம் (Video Teller Machine) பற்றியும் நமக்கு விளக்கினார்.

‘‘வீடியோ சாட்டிங்தான் இதன் சிறப்பு. பொதுவாக ஒரு சாதாரண ஏ.டி.எம்மில் பல தடவை நாம் டைப் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இதில் கார்டைக் காண்பித்தாலே அதில் உள்ள ஸ்கேனர் உங்களை அடையாளம் கண்டுகொண்டு ‘என்ன வேண்டும்’ என்று கேட்கும். நாம் கேட்கும் கேள்விகளுக்கு வி.டி.எம் திரையில் ஒரு நபர் தோன்றி பதில் சொல்வார். உதாரணமாக ‘5000 ரூபாய் பணம் வேண்டும்’, ‘பர்சனல் லோன் வேண்டும்’, ‘எவ்வளவு வட்டி’, ‘எத்தனை மாதத்துக்குள் கட்டவேண்டும்’, ‘பேரர் செக் வேண்டும்’, ‘மும்பையில் அக்கவுன்ட் வைத்திருக்கும் ஒருவருக்கு பணம் செலுத்தவேண்டும்’ என்று எதையும் பேசலாம்.

‘கடன் வேண்டும்’ என்றால், அது தொடர்பான டாக்குமென்ட்கள் இருக்கின்றனவா போன்ற கேள்விகளைக் கேட்பதோடு, அந்த டாக்குமென்ட்களை ஸ்கேன் செய்யும் வசதியும் இதில் இருக்கிறது. பல்வேறு சேவைகளை வழங்கக்கூடிய சாஃப்ட்வேர்கள்  பொருத்தப்பட்டிருக்கும் நவீனமான இயந்திரம் இது’’ என்கிற தஸ்தூர் மேலும் தொடர்ந்தார்...

‘‘பயோமெட்ரிக் அடையாளங்களை வைத்து இயங்கும் இயந்திரம்,  சிறிய அளவிலான மைக்ரோ ஏ.டி.எம் இயந்திரங்கள், பணம் கொடுக்கும், பாஸ் புக் அச்சடிக்கும் இயந்திரங்கள் ஒருபக்கம் இருந்தாலும், எதிர்காலத்தில் பணம் டெபாசிட் செய்வது, லோன் தருவது, பேமென்ட் போன்ற எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய ஏ.டி.எம் மையங்கள் இந்தியாவில் பெருகும். இந்தியாவில் விரைவில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வங்கிகள் வரப் போவதாகச் சொல்கிறார்கள்.

இந்த வங்கிகளும், ஏற்கனவே இருக்கும் வங்கிகளும் தங்கள் கிளைகளில் நெரிசலைக் குறைத்து நிதிச் சேவையில் முன்னணியில் இருக்கவேண்டுமென்றால் ஏ.டி.எம் இயந்திரங்களை நவீனப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இப்போதே சில வங்கிகள்  பர்சனல் லோன் போன்ற விஷயங்களை ஏ.டி.எம் இயந்திரங்கள் மூலமாக வழங்க ஆரம்பித்துவிட்டன’’ என்று முடித்தார் தஸ்தூர். கடனைத் திருப்பிக் கட்டாதவர்கள் வீட்டுக்கு வாட்டசாட்டமாய் சில ஆட்களை அனுப்பும் வேலையையும் ஏ.டி.எம்.கள் செய்யாமல் இருந்தால் சரி!

எதிர்கால ஏ.டி.எம்.கள்!

என்.சி.ஆர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சீனியர் செயல் அதிகாரியான சாந்தகுமார், ஏ.டி.எம்கள் பற்றி சொன்ன சில சுவாரசியமான தகவல்கள்...

* ஒரு ஏ.டி.எம்மில் பணம் இருக்கும் ‘சேஃப்’ எனும் பெட்டகம் பொதுவாக உறுதியான ஸ்டீல் கொண்டு செய்யப்படும். ஒரு பெட்டகத்தை ஒரு திருடன் உடைக்க எவ்வளவு மணி நேரமாகும் என்பதைக் கணக்கிட்டே பெட்டகங்களின் தரம் இருக்கும். உதாரணமாக சில நிறுவனங்கள் இந்த பெட்டகத்தை ஸ்டீல், கான்க்ரீட், ஸ்டீல் என்று மூன்று அடுக்குகளாக செய்யும்.
* இந்தியாவில் சுமார் 92 சதவீத நிதிப் பரிமாற்றங்கள் நேரடியான பணப் பரிமாற்றங்களாகத்தான் இன்னமும் இருக்கிறது. ‘கேஷ்லஸ்’ சமூகமாக நாம் உடனே மாறாவிட்டாலும் ‘லெஸ் கேஷ்’ என்பதை மற்ற வளரும் நாடுகள் மாதிரி கொண்டு வரலாம். இதற்கு ஏ.டி.எம்.கள்தான் சரியான வழிமுறையாக இருக்கும்.
* ஏ.டி.எம் அறைகளில் நாம் பணம் எடுக்கும்போது மற்ற நபர்கள் உள் அறையில் இல்லாத மாதிரி பார்த்துக்கொண்டாலே போதும்... திருட்டை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
* நெட்வொர்க் இல்லை, மின்சாரம் இல்லை என்பன போன்ற காரணங்களால் பல ஏ.டி.எம். மையங்கள் முடங்கிப் போய் இருப்பதைப் பார்க்கலாம். குறைந்த மின்சக்தி, க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில் பரிமாற்றம் எனும் புதிய முறைகள் வரப்போவதால், எதிர்காலத்தில் முடக்கம் எனும் பேச்சுக்கே இடமில்லாமல் போகலாம்.
* இந்தியாவில் என்.சி.ஆர் உட்பட ஏழு, எட்டு நிறுவனங்கள் ஏ.டி.எம் இயந்திரங்களைத் தயாரித்து வருகின்றன. ஏ.டி.எம் இந்தியாவில் அறிமுகமான காலம் முதல் கடந்த 20 வருடங்களில் எந்த மாற்றமும் ஏற்படவேயில்லை. ஆனால் இது விரைவில் மாறக்கூடும்.
* வாடிக்கையாளருக்கு அதிகாரிகள் மூலம் செய்கின்ற ஒரு சேவைக்கு 60 முதல் 70 ரூபாய் வங்கிக்கு செலவு ஆகுமென்றால், அதே சேவையை ஏ.டி.எம்கள் மூலம் செய்தால் வெறும் 20 ரூபாய்தான் ஆகும்.
* சென்னையில் சில வங்கிகள் ‘10 செகண்ட் பர்சனல்’ லோன்களை நவீன ஏ.டி.எம்கள் மூலம் வழங்க ஆரம்பித்துவிட்டன. வாடிக்கையாளர்கள் ஏற்கனவே வங்கியில் பணம் பரிவர்த்தனை செய்ததற்கான வரலாறு இருந்தால் போதும், அந்த வங்கியில் இருக்கும் நவீன ஏ.டி.எம்கள் இந்த 10 செகண்ட் லோன்களைக் கொடுத்து விடுகின்றன. பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்