கண்ணீர்க் கதை சொல்லும் கூழாங்கற்கள்



ஜெட் வேகமெடுத்து விரையும் வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் உங்கள் கால்களுக்கு அடியில் நிரடும் கூழாங்கற்களையோ, வீட்டு ஜன்னலில் படிந்திருக்கும் புழுதியையோ ரசித்திருக்கிறீர்களா? ‘ஆம்’ என்றால் நிஸார் அலி பதர் உங்களைப் போன்ற ஒருவர்தான். ‘‘என் தேசத்தின் புழுதியையும் கற்களையும் அன்புடன் நேசிக்கிறேன்’’ என்று சொல்லும் இந்த சிரியா கலைஞர், வெறும் கூழாங்கற்களை வைத்தே தனது தாய்மண்ணின் சோகத்தை உலகத்துக்கு அறிவிக்கிறார். நிஸார் பற்றிய சொந்த விஷயங்கள் அதிகம் வெளியுலகிற்குத் தெரியாது. சிரியாவின் துறைமுக நகரமான லடாகியாவில் வசிக்கிறார் இந்த 51 வயது மனிதர்.

கூழாங்கற்களை இணைத்து கலைநயமான சிற்பங்களை உருவாக்குவது இவரது இயல்பு. கடற்கரை ஓரங்களில் கிடைக்கும்  உருண்டையான, சதுரமான, நீளமான, இன்னும் பல வடிவிலான கூழாங்கற்கள்தான் நிஸாரின்  கதைகளுக்கான  மூலதனம். குடும்ப உறவுகளையும், மனிதர்களுக்கு இடையிலான அன்பையும் சொல்லும் நிறைய சிற்பங்களை இளம் வயதில் உருவாக்கியிருக்கிறார்.

கடந்த ஐந்தரை ஆண்டுகளாகத் தொடரும் உள்நாட்டுப் போரில் சிரியா பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அகதியாக படகில் வந்து இறந்து கரை ஒதுங்கிய சிறுவன் ஐலன் குர்தியின் புகைப்படம் உலகையே கலங்க வைத்தது. அதன்பின்னும் அங்கு அமைதியை நிலைநாட்ட உலகம் எந்த முயற்சியையும் செய்யவில்லை. அரசாங்கம் உட்பட ஆறு குழுக்கள் தங்களுக்குள் நிகழ்த்தும் மோதலில் சுமார் 4 லட்சம் பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள்; சுமார் 1 கோடி மக்கள் அகதிகளாக வெளியேறி இருக்கிறார்கள்.

நிஸாரின் படைப்புகள் இந்தத் துயரத்தையே காட்சிப்படுத்துகின்றன. சிரியா மக்கள் சந்தோஷமாக வாழ்ந்த தருணங்கள், போரால்  அகதிகளாக ஊரைவிட்டு வெளியேறும் சிறு குடும்பம், குண்டுவீச்சில் கொத்தாக இறந்துவிட்ட மழலைகள், இறந்த மனிதனை தூக்கிச்செல்லும் சொந்தங்கள், மடியில் இறந்து கிடக்கும் மனிதனை அணைத்துக்கொண்டு அழும் இன்னொரு மனிதன், மனிதர்களைக் கட்டி இழுத்துச் செல்லும் இன்னொரு மனிதன், கொல்லும் காட்சிகள் என சிரியாவின் அத்தனை அவலங்களையும் கற்களால் பேசுகிறார் நிஸார்.

‘‘சிறுவயது முதலே நிறைய கற்களால் ஆன சிற்பங்களை உருவாக்கி வைத்திருக்கிறேன். எதையும் நான் எனக்காக விற்றதில்லை. மேலும் அனைத்தையும் என் தேசத்தின் நிலைக்காகவே சமர்ப்பிக்கிறேன். என் நாட்டில் பசியால் மக்கள் இறப்பதில்லை. துப்பாக்கி முனையில்தான் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் போகிறது. என்னைப் பாதித்த, நான் இழந்த எனது நாட்டின் சூழலையே இந்தக் கற்கள் பேசுகின்றன” எனும் நிஸாரின் வார்த்தைகளில் அவ்வளவு சோகம் இருக்கிறது.

‘‘இந்தக் கற்கள் மூலம் உலகத்துக்கு நான் சொல்ல விரும்பும் செய்தி, ‘மனிதம்’தான். இங்கு மனிதமும் செத்துக்கொண்டிருக்கிறது; மனிதர்களும் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை நிறுத்தும் வல்லமை படைத்தவர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்? எங்கள் மக்களின் துயர்களுக்கு முடிவில்லையா?’’ எனக் கேட்கிறார் அவர். கல்லாய் இருக்கும் மனங்களை இந்தக் கூழாங்கற்கள் கரைக்குமா?

- ஷாலினி நியூட்டன்