என்னை மாதிரி தெரியாத ராஜ்நாயக்!



‘காஷ்மோரா’ கார்த்தி பேட்டி

“இது எனக்கு ஸ்பெஷல் தீபாவளி. நான் சினிமாவுக்கு வந்து பத்து வருஷத்துக்கு மேல ஆகுது. ஆனா இந்த தீபாவளிக்குத்தான் முதல் தடவையா என் படம் வருது. என்னோட முந்தைய படங்களை விட அதிகமான பட்ஜெட், செம கிரியேட்டிவ்வான செட் வொர்க்குகள், அசத்தும் நயன்தாரா, பிரமிக்க வைக்கிற கிராஃபிக்ஸ் வேலைகள்னு எல்லாருக்கும் பிடிச்ச ஒரு படமா வந்திருக்கு. ‘காஷ்மோரா’ங்கற வித்தியாசமான பெயருக்கு ஏத்த மாதிரி விதவிதமான கெட்டப்களில் நடிச்சிருக்கேன். இதுல நீங்க நார்மல் கார்த்தியை பார்க்கவே முடியாதுங்க! ” - சிரிப்பில் கலர்ஃபுல் மத்தாப்பு கொளுத்துகிறார் கார்த்தி.

“ ‘மெட்ராஸ்’ படத்துக்கு அப்புறம் கொஞ்சம் டைம் எடுத்து வேற வேற கதைகள் கேட்க ஆரம்பிச்சேன். ‘குட்டிப்புலி’ முத்தையா, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ கோகுல் ரெண்டு பேர் சொன்ன கதைகளும் பிடிச்சது. அப்போ பேய் பட சீஸன் இருந்தது. கோகுல் சொன்ன சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் அருமையா இருந்தாலும், அதோட ஸ்கேல் பெரிசா இருந்துச்சு. அதனால ‘கொம்ப’னை உடனடியா தொடங்கிட்டோம்.

இடையில கோகுல் அந்தக் கதையை வொர்க் பண்ணினதுக்குப் பிறகு, புதுசா ஒரு கேரக்டரைக் கொண்டு வந்தார். இப்படி ஒவ்வொரு ஸ்டேஜ் டெவலப்மென்ட்லேயும் புதுசு புதுசா கேரக்டர்களை சேர்த்துக்கிட்டே இருந்தார். கூடவே அதுல காமெடி, ஆக்‌ஷன்னு எல்லாம் இருந்தது. ‘நம்ம ஊருக்கு இப்படி ஒரு படம் வந்து ரொம்ப வருஷமாச்சு’னு உடனே தொடங்கின படம்தான், ‘காஷ்மோரா’. பட்ஜெட் பிரமாண்டமா இருக்குமேன்னு யோசிச்சேன். ‘நானும் வந்து உதவுறேன்’னு ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ பிரபுவும் வந்தார். ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு சவாலா எடுத்து பண்ணியிருக்கோம்.”

“ ‘காஷ்மோரா’க்கு என்ன அர்த்தம்? நீங்க பிளாக்மேஜிக்மேனா?”
“ ‘காஷ்மோரா’னா ‘பூதவித்தை’னு ஒரு அர்த்தம் இருக்கறதா சொல்றாங்க. ‘காஷ்மோரா’ங்கறது ஒரு கேரக்டரோட பெயர். அந்த கேரக்டருக்கான விஷயங்களை இயக்குநரே ரொம்பவே ஆராய்ச்சி பண்ணி வடிவமைச்சிருக்கார். அதனால அவர் கேட்டதை அப்படியே செய்தேன். ரெண்டாவது கேரக்டரான ராஜ்நாயக், பீரியட் பகுதியில் வரும். மொத்தமே 30 நிமிஷம்தான் பீரியட் பகுதி. ஆனாலும் அந்த அரை மணி நேரத்திலும் பிரமாண்ட போர், படைகள், அரண்மனை, அந்தப்புரம்னு  விஷுவல் ட்ரீட் காத்திருக்கு!’’

‘‘இளவரசி நயன்தாரா லுக் அசத்துதே?’’
‘‘அவங்களோட முதல் தடவையா வொர்க் பண்றேன். அவங்க வர்ற பகுதிதான் படத்தோட ஹைலைட். ஆனா, 15 நாட்கள்தான் ரெண்டு பேரும் ஒண்ணா வொர்க் பண்ணியிருப்போம். ஸ்ரீதிவ்யா, ஜர்னலிஸ்ட்டா நடிச்சிருக்காங்க. அவங்களை கிராமத்துப் பொண்ணாவே பார்த்திருக்கோம். ஆனா, இதுல அவங்க செம மாடர்ன் காஸ்ட்யூம்ல இருப்பாங்க. டெல்லி காஸ்ட்யூம் டிசைனர் கைவண்ணத்தில் ஸ்டைலீஷான ஸ்ரீதிவ்யா ஆகிட்டாங்க.!’’

‘‘என்ன சொல்றார் சந்தோஷ் நாராயணன்?’’
‘‘ ‘இந்த மாதிரி பீரியட் ஃபிலிம்லதான் கிராண்டியரான விஷயங்கள், வித்தியாசமான இசைக்கருவிகளை பயன்படுத்துற வாய்ப்பு கிடைக்கும்’னு சொன்னார். சிம்பொனி மாதிரி மியூசிக் பண்ணப்போறேன்னு ஆஸ்திரேலியாவுக்கு போயிட்டு வந்திருக்கிறார்.’’

‘‘ஷூட்டிங் ஸ்பாட் வந்தால் நயன்தாரா எங்கேன்னு விவேக் தேடிக்கிட்டிருப்பாராமே?’’
“முதல் தடவையா அவரோட நடிச்சிருக்கேன். ‘தோழா’வுக்கு முன்னாடியே அவர் ‘காஷ்மோரா’வில் கமிட் ஆனார். ஆனா அதுதான் முதல்ல ரிலீஸ் ஆச்சு. அவர் என் அப்பாவா நடிச்சிருக்கார். சின்ன வயசுல இருந்து அவரை நல்லாத் தெரியும்னாலும் இப்போதான் அவரோட பழகுறேன். அவர்கிட்ட பேசினாலே நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கலாம்.’’

‘‘அண்ணன் சூர்யாவோட ‘24’ சீனாவோட சில்க் ரோட் ஃபெஸ்டிவல்ல தேர்வு ஆச்சே?’’
‘‘உலக சினிமா விழா என்றாலே சீரியஸான படங்கள்தான் பங்கேற்கும் என்ற நிலைமை மாறியிருக்கு. பாலிவுட் படங்கள் மாதிரி இந்திய மொழிப் படங்கள் எல்லாத்தையும் உலகம் முழுக்க விரும்பிப் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. ‘24’ படத்தோட கிராஃபிக்ஸ் எல்லாமே இங்கிலீஷ் பட தரத்துக்கு இருக்கும். ஒரு ஃபேன்டஸி ஃபிலிம் அங்கே தேர்வு ஆகியிருக்கு. நமக்கான அங்கீகாரம் இப்போ அதிகரிக்கறது சந்தோஷமா இருக்கு!’’

‘‘விதவிதமான கெட்டப், லுக்... அனுபவங்கள் எப்படி?’’
‘‘படத்துல 2 கேரக்டர். ஒரு கேரக்டர் என்னை மாதிரி தெரியக்கூடாதுனு சொல்லிட்டேன். அதுக்காகத்தான் ரொம்பவே போராடினாங்க. மொட்டை தலை, தாடியோடு ஒரு ஸ்கெட்ச் வரைஞ்சு வச்சிருந்தாங்க. அதை என் முகத்துக்கு ஏற்ப எப்படி மாத்தலாம்னு யோசிக்கிறப்பதான் கண்ணுக்கு பக்கத்துல பெரிய டாட்டூ மாதிரி சின்னச் சின்ன விஷயங்கள் கொண்டு வந்தாங்க. இதைவிட கஷ்டமான ஒரு விஷயம் மேக்கப். மூணு, நாலு மணி நேரம்தான் நிக்கும். அதுக்குள்ள நடிச்சு முடிச்சிடணும்.

பீரியட் பகுதியில் வரும் ராஜ்நாயக் கேரக்டர் போனதுமே சிவாஜி சார் ஞாபகம் வந்திடும். ஸோ, அவரோட சாயல் வராம இருக்க முயற்சி பண்ணினோம். இன்னொரு கேரக்டர் காஷ்மோராவுக்கு வேற ஒரு லுக், டிசைன் பிடிச்சோம். எதையெல்லாம் ஷூட் பண்ண நினைச்சோமோ அதையெல்லாம் தனியா ஸ்டோரி போர்ட் ரெடி பண்ணி செய்திருக்கோம்.’’

‘‘மணிரத்னம்கிட்ட அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணியிருக்கீங்க. இப்போ அவரோட டைரக்‌ஷன்ல ஹீரோவா நடிக்கிறீங்க. என்ன சொல்றார் சார்?’’
‘‘இப்போ அவர்கிட்ட திட்டு வாங்காம வொர்க் பண்ண முடியுது. அசிஸ்டென்டா இருக்கும்போது நாம சொல்ற ஐடியா வீக்கா இருக்கும்னு நமக்கே தெரியும். ஆனாலும் எதாவது ஒரு ஐடியா சொல்லியாகணும்னு சார்கிட்ட பேசுவோம். இப்போ அப்படியில்ல. எதாவது ஒரு சின்ன ஐடியா சொன்னாலும், ‘சூப்பர்’னு சார் பாராட்டுறார். அதுவே சந்தோஷம்.

மணி சார்னாலே ரொம்ப க்யூட்டான லவ் ஸ்டோரி இருக்கும். ‘காற்று வெளியிடை’ 60 பர்சன்ட் ஷூட்டிங் ஓவர். இதுல நான் வித்தியாசமான ஒரு கேரக்டர் பண்றேன். நார்மலா அந்தக் கேரக்டரை வேற எந்த இயக்குநரும் யோசிக்க மாட்டாங்க. ‘எனக்கு கார்த்தி வேண்டாம். எப்பவும் பார்க்கற கார்த்தியா தெரியக்கூடாது. இதுல வேற லுக் வேணும்’னு சொல்லிட்டார். சொன்னது மாதிரியே வேற லுக் கொண்டு வந்திட்டார்.’’

“ ‘ஆயிரத்தில் ஒருவனு’க்குப் பிறகு பீரியட் ஃபிலிம்ல நடிக்கிறீங்க போல...”
“இல்லீங்க. ‘ஆயிரத்தில் ஒருவன்’ பீரியட் படம்னாலும் நான் வந்த போர்ஷன்ஸ் எதுவும் பீரியட் கிடையாது. அதுலேயே அந்தப் பகுதியில் நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். அந்த ஆசை ‘காஷ்மோரா’வில்தான் நிறைவேறியிருக்கு. பொதுவா சரித்திரக் கதைகளைத் தொடும்போது, சீரியஸ்னெஸ் இருக்கணும்னு காமெடியைத் தவிர்ப்பாங்க.

ஆனா, கோகுல் காமெடியிலும் ஸ்பெஷலிஸ்ட் என்பதால, அட்டகாசமான ஹ்யூமர் சேர்த்திருக்கார். ஒவ்வொரு டெக்னீஷியனும் சலிச்சுக்காம வேலை பார்த்திருக்காங்க. ஓம்பிரகாஷின் கேமரா, ராஜீவனின் செட்ஸ்னு எல்லாருமே பெஸ்ட் கொடுத்திருக்காங்க. கதையோட நம்பகத்தன்மையை கொண்டு வர்றதுக்காக ரெண்டு வருஷம் செதுக்கி வொர்க் பண்ணின கோகுலின் உழைப்பு ஒவ்வொரு ஃபிரேம்லேயும் ஃபெஸ்டிவல் கிராண்டியரா தெரியும்.!’’

- மை.பாரதிராஜா