கார் ஷேரிங்... பைக் ஷேரிங்...இது பசுமைப் பயணம்



அலுவலகம் முடிந்து வீட்டுக்குச் செல்லும் பேருந்துக்காக பல மணி நேரம் பஸ் ஸ்டாண்டில் காத்திருப்பவரா நீங்கள்? அப்படிக் காத்திருக்கும்போது யாராவது காரிலோ, பைக்கிலோ லிஃப்ட் கொடுத்தால் பெட்ரோலுக்கு உண்டான தொகையைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருப்பவரா? தினம் தினம் உங்கள் ஆபீஸிலிருந்து உங்கள் வீட்டுக்குப் போகும் அதே ரூட்டில் அப்படி லிஃப்ட் கொடுப்பவரும் வந்தால் நன்றாக இருக்குமே!

‘என்னிடம் கார் அல்லது பைக் இருக்கிறது. தனியாகத்தான் ஆபீஸ் செல்கிறேன். நான் செல்லும் வழியில் யாராவது வந்தால் அவர்களைக் கூட்டிச் சென்று இறங்க வேண்டிய இடத்தில் விட்டுவிட  முடியும். பெட்ரோலுக்கான  தொகையை மட்டும் கொடுத்தால் போதும்’ என நினைப்பவர்கள் இங்கு நிறைய பேர் உண்டு.

இந்த இரண்டு தரப்பையும் இணைத்து பயணத்தை எளிதாக்கும் பிரத்யேகமான ‘ஆப்’கள் இப்போது சென்னையில் அறிமுகமாகிவிட்டன. ‘கிரீன்பூல்’ என்ற கார் ஷேரிங் ஆப் உருவான கதையை விவரிக்கிறார், இதன் நிறுவனரான ரவிக்குமார். ‘‘நான் ‘போலாரிஸ்’ நிறுவனத்தில் வேலைசெய்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்தால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். வெளிநாடுகளில் பலர் இணைந்து கார் பயணத்தைப் பகிர்ந்துகொள்ளும் ‘கார்பூலிங்’ முறை பிரபலம். ஒரு சிறு பயணம் மேற்கொள்வதற்காக, இங்கு அப்படி ‘கார்பூலிங்’ இருக்கிறதா என இணையத்தில் தேடினேன்.

சென்னையில் அப்படியொன்றும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆச்சரியமாக இருந்தது. சொந்த கார் வைத்திருப்பவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக  சிலருடன் கூட்டாகச் சேர்ந்து  பயணம் செய்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்தும் இருக்கிறேன். பெரும்பாலும் ஒரே ஆபீஸில் வேலை செய்பவர்களாக இருப்பார்கள். ஆனாலும் இதில் மனஸ்தாபங்கள் அதிகம். உதாரணமாக ஒரு காரின் சொந்தக்காரர் மாதக்கணக்கில் இன்னொருவரை தன்னுடன்  அழைத்துச் சென்றால் பாதி நாள் என் செலவு, மீதி நாள் உன் செலவு என்று பயணத்துக்கான செலவைப் பிரித்துக்கொள்வார்கள்.

இதில் சரியான கணக்கு வழக்கு இருக்காது. அதனால் நஷ்டமடையப் போவது இருவரில் யாரோ ஒருவர். இருவருக்குமே திருப்தி எழுந்தால்தான் இந்த முறை சக்சஸ் ஆகும். இதை மனதில் வைத்தே இந்த ‘ஆப்’பை உருவாக்கினேன்’’ என்கிறார் ரவிக்குமார். ‘‘கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஐபோன்களில் இதை தரவிறக்கம் செய்யலாம். இப்போது சுமார் 1600 பேர் பயன்படுத்துகிறார்கள். இவர்களில் பலர் ஐ.டி துறையில் பணியாற்றுபவர்கள். 

இதில் இணைய விரும்பினால் உங்களின் கார், நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் பற்றிய விவரங்களைப் பதிவு செய்யவேண்டும். காரணம், ஒரு ஐ.டி பார்க்கில்  நீங்கள் வேலை செய்வதாக இருந்தால், உங்களுடன் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை செய்வார்கள். அவர்களில் பலருக்கு கார் ஷேரிங் தேவைப்படும். அவர்களின் விவரங்கள் ‘ஆப்’ திரையில் முதன்மையாக வந்து விழும். இது  சுமுகமான, பிரச்னையில்லாத பயணத்துக்கு உதவும்’’ என்கிறார் அவர்.

ஒரு காரில் இரண்டு பேர் பயணித்தால், 10 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு பயணி அந்தக் கார் உரிமையாளருக்கு சுமார் 30 ரூபாய் என்கிற அளவில் கொடுக்க வேண்டி வரும். மிகக் குறைந்த கட்டணத்தில் மிக நிம்மதியான பயணம்! ‘‘நான்கு பேர் நான்கு தனித்தனி கார்களில் ஒரே இடத்திலிருந்து கிளம்பி ஒரே ஆபீஸ் போவார்கள். கார்பூலிங்கில் இணைந்தால், அந்த 4 பேரும் ஒரே காரில் போகலாம். பெட்ரோல் மிச்சம், சாலையில் மூன்று கார்கள் பயணிப்பது குறையும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 2 லட்சம் பேர் இதில் இணைந்தாலே போதும்... கார்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, டிராபிக் ஜாம், வாகன விபத்து போன்ற பல பிரச்னைகளுக்கு குட்பை சொல்லிவிட முடியும்’’ என தொலைநோக்குப் பார்வையோடு பேசுகிறார் ரவிக்குமார். சென்னையின் சந்துபொந்துகளில் எல்லாம் நுழைந்து சீறிப் பாயும் பைக்குகளில் பயணத்தை ஷேர் செய்துகொள்ளும் ‘வ்ரூம்ரைட்ஸ்’ (vroomrides) என்ற ‘ஆப்’பை கடந்த வாரம் சென்னையில் அறிமுகப்படுத்தியிருக்கும் பிரேமா ராமலிங்கமும் வெங்கடேசாவும் உற்சாகம் கொப்பளிக்கப் பேசுகிறார்கள்...

‘‘சென்னை போன்ற வாகன நெரிசல் மிக்க நகரத்தில் பின்சீட்டு காலியாக ஓடும் பைக்குகள்  அதிகம். இந்த பின்சீட்டை நிரப்பினாலே போதும்... விபத்து, புகை, போக்குவரத்துப் பிரச்னைகளை பாதி அளவு குறைத்துவிட முடியும். அதற்காகத்தான் எங்கள் ஆப். இதை கூகுள் ஸ்டோரில் தரவிறக்கம் செய்யலாம். இப்போதைக்கு ஆண்கள் ஓட்டும் பைக்குகளில் மற்ற ஆண்கள் செல்வதற்கான ஷேரிங் முறையைத்தான் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

விரைவில் பெண்கள், பெண்களை ஏற்றிச் செல்லும் ஆப் அறிமுகமாகும். ஒரு பைக் உரிமையாளர் இதில் பதிவுசெய்யும்போது வண்டியின் ஆர்.சி. புக், இன்சூரன்ஸ் போன்ற தகவல்களைத் தரவேண்டும். ‘வ்ரூம் ஆப்’ மூலம் பயணம் செய்பவர்கள் பைக்கின் பின்சீட்டில் ஏறும்போதே அவர்களும் தலையில் மாட்டிக்கொள்ள ஒரு எக்ஸ்ட்ரா ஹெல்மெட் இருக்கும். பைக் ஓட்டுபவர் வண்டியைத் தாறுமாறாக ஓட்டினால் அந்த இடத்திலேயே இறங்கிவிடலாம்.

அந்த பைக்காரர் பற்றிய கருத்தையும் ‘ஆப்’பில் தெரிவிக்கலாம். இது பைக் ஓட்டுபவர்களை எச்சரிக்கை செய்யும்’’ என்று சொல்லும் இவர்கள், மற்ற போக்குவரத்து வாகனங்களைவிட இந்த ஷேர் பைக் பயணத்தால் இருதரப்புக்குமே உள்ள லாபங்களைக் குறிப்பிடுகிறார்கள்... ‘‘பயணக் கட்டணத்தை தூரம் மற்றும் நேரத்தை வைத்துக் கணக்கிடுகிறோம். இதன்படி ஒருவர் 5 கிலோமீட்டர் தூரத்தை 15 நிமிடங்களில் கடக்கிறார் என்றால் ரூ.36.50  என்பதாக சார்ஜ் இருக்கும்.

ஐந்து கிலோமீட்டருக்கு வீட்டிலிருந்து நாம் போகும் இடத்துக்கே கொண்டுபோய் விடும் சவாரிக்கு இத்தனை மலிவான பயணம் நாட்டிலுள்ள எந்த வாகனத்துக்குமே இருக்காது’’ என்கிறார்கள் இவர்கள். ‘‘என் வீடு மேற்கு மாம்பலத்தில் இருக்கிறது. வீட்டிலிருந்து காரப்பாக்கத்தில் இருக்கும் என் அலுவலகம், சுமார் 22 கிலோமீட்டர் தூரம். இரண்டு வருடங்களாக தனியாகத்தான் வேலைக்குச் சென்று வருகிறேன். இப்போது பைக் ஷேரிங்கில் இணைந்திருக்கிறேன். தினசரி நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போடுவேன்.

இப்போது வீட்டிலிருந்து அலுவலகத்துக்குப் போகும் வழியில் இந்த ஆப் மூலம் ஒருவருக்கு லிஃப்ட் கொடுப்பதால்  பாதி செலவு குறைகிறது. ஏறும் நபர் பணத்தை நேரடியாகவோ அல்லது இ-கேஷ் மூலமாகவோ அல்லது ஆப் நிறுவனத்துக்கே சேர்க்கும்படியான ஆப்ஷன்கள் இருப்பதால் இந்த ஆப் உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம்தான்’’ என்கிறார் இதைப் பயன்படுத்துகின்ற ஆனந்த்.

- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்
ஏ.டி.தமிழ்வாணன்