உறவெனும் திரைக்கதை



-ஈரோடு கதிர்

வாசிக்க வேண்டிய வரலாற்றின் வரிகள்

தங்கள் வாழ்வில் நெருக்கமானவராக அமையும் தோழிகளில் சிறந்த ஒருவராக தம் பாட்டியைக் கருதுவோரை நீங்கள் கண்டதுண்டா? நவநாகரிக உடை தீண்டிடாத, மொழிப் புலமை எட்டிடாத, தொழில்நுட்ப வளர்ச்சியில் தன்னை ஆட்படுத்திடாத, நிகழ்கால நிகழ்வுகளை அறிந்திடாத, உலகின் ஓட்டத்தை உணர்ந்திடாத, வாசனைத் திரவியங்கள் பாவிக்காத, வெற்றிலை-பாக்கு-புகையிலைக் கலப்பின் வாசனையோடு, சுருக்கம் விழுந்து, சதைகள் தளர்ந்து, முடி நரைத்து, பற்கள் உதிர்ந்து, பழமையின் வாசனை மணக்கும் உடையில் இருக்கும் பாட்டியைத் தோழியாகக் கருதும் பித்து உண்டா?

அதிகாலை வெளிச்சமும், அதனோடு மெல்லப் படரும் கதகதப்பும், உற்சாகத்தையும் மலர்ச்சியையும் உண்டாக்குபவை. அவை இருளிலிருந்து விடுபடும் கணத்தின் அடையாளமாய் நமக்கு உணர்த்தப்படுபவை. விடியல் ஒருவிதமென்றால், அந்தி மற்றோர் விதம். வாழ்வின் அன்றைய வரவுசெலவுக் கணக்கினை அலசும் அவகாசம் அது. அந்த அலசல்களுக்கு அமைதி தேவை.

வெம்மை தணிந்து, பொன் சிவப்பாய் மாறி மெல்லப் புரளும், ஒரு தினத்தின் முதுபொழுது சொல்லவொண்ணா அமைதியைத் தரக்கூடியது. அந்த அமைதிக்கு மனதை மெல்லக் கிளர்த்தும் வலிமையும், அமிழ்த்திப் பிழியும் திறமையும் உண்டு. விடியல் போலே ஓர் உயிரின் ஜனனமெனில், அந்தி போலே அதன் முதிர் பருவம்.

பழுத்த மனிதர்களின் பிரியமும் பாசமும், மலர்ந்து சிவந்து மெல்ல தன்னைக் கரைக்கத் துணிந்திடும் அந்தி நேர இதம் போன்றதுதான். காற்று வெளியெங்கும் அந்த மஞ்சள் ஒளி, நிறைந்த காதலோடு பிணைந்து கிடக்கும். தான் தழுவும் யாவற்றையும் அழகூட்டும். முதிர்பொழுதை ரசிக்கவும், முதிர்ந்தவர்கள் பிழிந்தளிக்கும் அன்பின் சாற்றினைப் பருகவும் வாய்த்தவர்கள், வாழ்வில் அலாதியான ருசியொன்றினைச் சுவைக்கக் கிடைத்தவர்கள்.

தாத்தா-பாட்டிகளின் அரவணைப்பில் வளர்ந்த பிள்ளைகளுக்கென்று பிரத்யேக நினைவுகளும், அனுபவங்களும், அடையாளங்களும் இருப்பதுண்டு. கூட்டுக் குடும்பமென்பதால் சிலரும், ஏதேனும் ஒரு காரணத்தால் பிள்ளைகளைவிட்டு பெற்றோர்கள் பிரிந்துபோனதால் சிலரும், பெற்றோரின் தொழில் மற்றும் பணிச்சூழல் நிமித்தமாகச் சிலரும் தாத்தா பாட்டிகளின் அரவணைப்புக்குள் வாழ்வதுண்டு. வகைக்கு ஏற்ப தாத்தா பாட்டிகளின் கவனிப்பை  பிள்ளைகள் உணரும், அனுபவிக்கும் வாய்ப்பு அமையும்.

தாத்தாக்களும் பாட்டிகளும் முதலில் ஏகபோகமாய் அளிப்பது சுதந்திரம். பாட்டிகளின் தலைமுறை, அம்மாக்களின் தலைமுறை, பிள்ளைகளின் தலைமுறை என ஒவ்வொன்றுமே தன்னியல்புகளில் மிக எளிதாக முரண்பட்டுப் போகின்றன. பேரப் பிள்ளைகளின் உலகம் தங்களுக்கு எவ்விதமும் அனுபவமில்லாத களம் என்பதே, அந்த சுதந்திரத்திற்கும், சிற்சில வற்புறுத்தல்களுக்கும் காரணமாய் இருக்கின்றன.

ஏழு வயது நகரத்துச் சிறுவன், தன் அம்மாவோடு கிராமத்திலிருக்கும் பாட்டி வீட்டை நோக்கிப் பயணப்படுகிறான். கிராமத்துப் பேருந்தில் சலசலத்துப் பேசும் அப்பகுதி மக்களை வெறுக்கிறான்; பயணமும் கசக்கிறது. பேருந்து நிறுத்தத்திலிருந்து பாட்டி வீட்டிற்கு மலைச்சரிவில் நடக்க மறுத்து முரண்டு பிடிக்கிறான். அம்மா அடித்து இழுத்துச் செல்கிறாள்.

அம்மாவும் அப்பாவும் வாழ்வில் பிரிந்திருக்கும் சூழலில், அம்மாவின் வேலைக்கு ஆபத்து நேர்கிறது. அவள் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வரையில் அவனை, வாய் பேசமுடியாத, காது மட்டும் கேட்கும் கூன் விழுந்த பாட்டி வீட்டில் விட்டுச் செல்லவே அழைத்து வந்திருக்கிறாள். கிராமத்தையும் குடிசை வீட்டையும் அறிந்திராத அவனுக்கு, அந்தக் குடிசையில் தொடரும் நாட்களை நினைக்கவும், கூன் விழுந்த ஊமைப் பாட்டியைப் பார்க்கவும் கோபம் வெகுண்டெழுகிறது. அவளோடு எவ்வகையிலும் உடன்பட மறுக்கிறான்.

எதிர்பாராத, அவனுக்குப் பொருந்தாத அந்தச் சூழல் அவளிடமிருந்து விலக்கியே வைக்கிறது. அவன் கோபப்படும்பொழுதெல்லாம் மன்னிப்புக் கேட்கும் விதமாய் தன் நெஞ்சில் கை வைத்துச் சுழற்றுகிறாள் பாட்டி. கொண்டு வந்த நொறுக்குத் தீனிகளும், விளையாட்டுச் சாமான்களின் பேட்டரியும் தீர்ந்து போய்விட, தவிக்கிறான் அவன். பேட்டரிகள் வாங்கித்தரச் சொல்கிறான். ஏழ்மை அதை அனுமதிக்கவில்லை.

கோபத்தில் சுவற்றில் கிறுக்குகிறான். கழிவுக்கான பீங்கான் பாத்திரத்தை உடைக்கிறான். அவள் காலணிகளை எடுத்து வீசுகிறான். அவனிடம் பேச விரும்பும் ஏழைச்சிறுவனோடு ஒட்ட மறுக்கிறான். மற்றொரு சிறுமியுடன் மட்டும் பேசுகிறான். உறங்கும் பாட்டியின் கொண்டை ஊசியைத் திருடி தொலைவில் இருக்கும் கடைக்குச் சென்று பேட்டரி கேட்கிறான். கடைக்காரர் அதே கொண்டை ஊசியால் தலையில் தட்டி விரட்டுகிறார்.

‘கென்டகி ஃப்ரைடு சிக்கன்’ வேண்டுமென அழுகிறான். பாட்டி கோழி வாங்கி வந்து சமைக்கிறாள். ஃப்ரைடு சிக்கன் இல்லை என்பதால் சாப்பிட மறுத்து அழுகையோடு உறங்கிப்போகிறான். இரவில் பசிக்க, அதைச் சாப்பிடுகிறான். பிடித்துப்போகிறது. பாட்டியோடு சந்தைக்குச் செல்கிறான். பழங்களை விற்று, பேரனுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருகிறாள். அவனுக்கு மிகப்பிடித்த கேக் வாங்கிக் கொண்டு பேருந்திற்கு வருகையில், தன் தோழியோடு பயணிக்க விரும்புபவன், பாட்டியின் பையைப் பெற மறுக்கிறான்.

பேருந்தில் அவன் மட்டும் சென்றுவிடுகிறான். எல்லாக் காசையும் பேரனுக்காக செலவிட்டுவிட்ட பாட்டி பேருந்துக்குக் காசில்லாததால் நடந்தே வருகிறாள். தன் மீது பாட்டி வைத்திருக்கும் அன்பு, பிரியம், கருணை, நேசம் ஆகியவற்றைக் காலம் உணர்த்துகிறது. அழைத்துச் செல்ல வருவதாக அம்மாவிடமிருந்து கடிதம் வருகிறது. பாட்டியிடம் அவளின் உடல்நலம், நலமின்மை குறித்து தனக்குக் கடிதம் எழுத எளிய முறையைப் பழக்குகிறான்.

பாட்டியைப் பிரிய மனமின்றி வருத்தத்தோடு அம்மாவுடன் பேருந்தில் ஏறுகிறான். பின்பக்கக் கண்ணாடி வழியே பாட்டியைப் பார்த்து நெஞ்சில் கை வைத்து சுழற்றி மன்னிப்புக் கோருகிறான். பாட்டி பிரிவையும், கூடுதல் முதுமையையும் சுமந்துகொண்டு தனிமையை நோக்கி தன் குடிசைக்குத் திரும்புகிறாள். 2002ம் ஆண்டு வெளியான ‘தி வே ஹோம்’ எனும் கொரியன் திரைப்படம் மிகக் குறைவான உரையாடல்களோடு முதிர்ந்த பாட்டிக்கும், தளிர் பேரனுக்குமான நிர்ப்பந்திக்கப்படும் உறவுக்குள் உன்னதத்தைக் காட்டும் தருணத்தை மிக அழகாகக் காட்சிப்படுத்துகிறது.

பிள்ளைகள் ஒரு கட்டத்தில் தங்களின் முந்தைய தலைமுறையாக இருக்கும் பெற்றோர்களைவிட சற்றுத் தொலைவான தலைமுறையாக இருக்கும் தாத்தா பாட்டிகளையே தங்களுக்கு அணுக்கமானவர்களாகத் தேர்ந்தெடுக்கின்றனர். மிக அதீதமான தலைமுறை இடைவெளிகூட அந்த ஈர்ப்பிற்குக் காரணமாய் இருக்கலாம். பேரக் குழந்தைகள் பலரும், குறிப்பிட்ட பருவம் வரை பாட்டிகளின் கதைகளிலேயே தங்களுக்கு வசமான ஓர் உலகத்தைச் சிருஷ்டிக்கிறார்கள். அந்தக் கதைகளில் நிகழ்காலமும், அதன் நெருக்கடிகளும் இருப்பதில்லை.

எந்தப் பாத்திரமும் இப்போது கடந்துபோகும் சக மனிதர்களை நினைவூட்டாமல், பிரத்யேகமான பழமைகளைக் கொண்டிருக்கும். பாத்திரங்கள் அமானுஷ்யமாகவோ, எட்டுக் கைகள் கொண்டதாகவோ, பருத்த பூதமாகவோ இருந்துவிடுவது பிள்ளைகளின் கற்பனைத் தேடலுக்கான பெரியதொரு திறப்பு. கடவுளையும், பேய்களையும், பூதங்களையும் அறிமுகப்படுத்தும் திரைக்கதையாளராகவும்...

சந்தைகளுக்கும், ஊர்களுக்கும், திருவிழாக்களுக்கும், நாடகங்களுக்கும், கூத்துகளுக்கும் அழைத்துச் சென்று வெவ்வேறு வர்ணங்களைக் காட்டும் தோழமையாகவும் அமைகிறார்கள் பாட்டிமார்கள். தம் காலத்து உணவினை தம் கை ருசியோடு சமைத்து அளிப்பதில் பாட்டிகளுக்கு எப்போதும் முதலிடமுண்டு. பாட்டிகளின் உலகம் எதனினும் நிதானமானது. வயது கூடக் கூட அனுபவத்தோடும், கற்றுக்கொண்டவைகளோடும், அதீத பிரியமும் தன்னை இணைத்துக்கொள்கிறது.

வாழ்க்கையின் மத்திம காலத்தில் பரபரப்போடு ஓடும் பெற்றோர்களின் உலகத்தைவிட, நிதானமாக இயங்கும் பாட்டி தாத்தாக்களின் உலகத்தில் அன்பிற்கு நிறைய இடமும், அவகாசமும் இயல்பாகவே அமைந்துவிடுகின்றன. பெற்றவர்களையும்விடக் கூடுதலாக, தம் பேரப் பிள்ளைகளிடம் அன்பு செலுத்தும் யுக்தி அவர்களுக்குக் கைவசப்பட்ட ஒன்று.

தங்கள் அனுபவங்களையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, பேரப்பிள்ளைகளிடம் முதிர்ந்தவர்களால் எளிதில் நுழையமுடிகிறது. அந்த நுழைவிற்காகத் தங்களை ஒரு குழந்தையாய் மாற்றி ஒப்புவித்துவிடுவதில் தாத்தா பாட்டிகளுக்கு இருக்கும் பெருந்தன்மை பெற்றோர்களுக்கு வாய்த்து விடுவதில்லை. ஒப்புவிப்பதில் வெற்றி பெறும் மூத்தோர், மிக எளிதாகத் தங்களுக்குள் குழந்தைமையை வளர்த்துக் கொள்ளவும் முடிகிறது.

தாத்தா, பாட்டிகளின் காலடியில் வளர்வது பிடித்தும், பிடிக்காமலும் அமையும் முரண்பாடு தவிர்க்கமுடியாதது. அது எவ்விதமாயினும், வயது முதிர்கையில் தாத்தா பாட்டிகளிடம் வளர்ந்த காலம் அழிக்கமுடியா பசுஞ்சித்திரமாய் மனதில் உறைந்தே இருப்பதுமுண்டு. முதிர்வின் அடையாளமாய் அவர்களின் தோலில் தோன்றும் சுருக்கத்தின் வரிகள் அனைத்தும் வாசிக்க வேண்டிய வரலாற்றின் வரிகளே. முதுமை அதன் இயல்புகளோடும் நிதர்சனங்களோடும், பிரியத்தோடும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றே. அந்த முதுமைக்குள் நாமும் ஒரு நாள் நுழைந்துதானே ஆக வேண்டும்!

(இடைவேளை...)

ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி