பாரம்பரிய தீபாவளி சுவை



பக்க விளைவுகள் இல்லாத பாரம்பரிய இனிப்பின் சுவையைத் தேடி பயணம் செய்பவர்கள், கடைசியாக கருப்பட்டியின் அருகில் வந்து நிற்பார்கள். நொறுக்குத் தீனிப் பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்கள், வெள்ளரியில் தங்களுக்கான விடை இருப்பதைப் புரிந்துகொள்வார்கள். ஆனால் இவற்றின் மகத்துவத்தை குழந்தைகள் புரிந்துகொள்வதில்லை என்ற ஆதங்கம் பலருக்கு உண்டு. அவர்களுக்குப் பிடித்தமான சுவையில் இவற்றைக் கொடுப்பதே தீர்வு. இந்த தீபாவளிக்கு இவற்றிலிருந்தே வகை வகையான ஸ்வீட்களை செய்து காட்டுகிறார், திருநெல்வேலி ‘செஃப்’ ராஜ்குமார்.

வெள்ளரி அல்வா

தேவையானவை:

மக்காச்சோள மாவு - 1 கிலோ,
சர்க்கரை - 1 கிலோ,
வெள்ளரி விதை - 300 கிராம்,
பச்சை கலர் பவுடர் - சிறிதளவு,
நெய்- சிறிதளவு

செய்முறை:

மக்காச்சோள மாவில் சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு கெட்டி பதத்திற்கு நன்றாகக் கரைத்துக்கொள்ளவும். கனமான பாத்திரத்தில் பிசைந்த மாவை மிதமாக சூடாக்கவும். லேசாக சூடானதும் சர்க்கரையை அதில் சேர்க்கவும். இதைக் கெட்டியாக விடாமல் வேகமாக கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும். கொதிக்க விடக்கூடாது. கொதித்து விட்டால் கெட்டியாகிவிடும். அதனால் தேவையான அளவுக்குத் தண்ணீர் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

அல்வா பதத்திற்கு வந்த பிறகு மீதியிருக்கும் சர்க்கரையையும் சேர்க்க வேண்டும். பேஸ்ட் போல திரண்டு வரும்போது காய்ந்த வெள்ளரி விதைகளைப் பரவலாகத் தூவ வேண்டும். இறுதியாக கலர் பொடியை சிறிது தூவி கலக்கியபின் இறக்கிவிட வேண்டும். சுவையான வெள்ளரி அல்வா ரெடி!

கருப்பட்டி கேழ்வரகு பணியாரம்

தேவையானவை:

இட்லி அரிசி - 200 கிராம்,
கேழ்வரகு - 200 கிராம்,
உளுந்து  - 50 கிராம்,
வெந்தயம் -1 டீஸ்பூன், க
ருப்பட்டி - 500 கிராம்,
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு,
உப்பு - சிறிதளவு,
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

இட்லி அரிசி, கேழ்வரகு, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் நன்றாகக் கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறியதும், கெட்டியாக மாவு போல் அரைத்து சிறிது உப்பு சேர்த்து புளிக்க வைக்க வேண்டும். கருப்பட்டியை தூளாக்கி, தண்ணீர் சேர்த்து சில நிமிடங்களில் கரைந்ததும் வடிகட்டி மாவில் ஊற்ற வேண்டும். அத்துடன் ஏலக்காய்த்தூள் சேர்க்க வேண்டும். பின்னர் அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து ஒவ்வொரு குழியிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் மாவை ஊற்றி வேக வைக்க வேண்டும். தேவைப்பட்டால், மாவுடன் தேங்காய்த் துருவல், நறுக்கிய முந்திரித் துண்டுகளைச் சேர்க்கலாம். இனிப்புச் சுவையுடன் இருப்பதால் குழந்தைகள் விரும்பிச்சாப்பிடுவார்கள்.

கருப்பட்டி நெய்யப்பம்

தேவையானவை:

பச்சரிசி - 500 கிராம்,
பொடித்த வெல்லம் - 100 கிராம்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
வாழைப்பழம்  - ஒன்று,
கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் - தலா அரை கப்

செய்முறை:

பச்சரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, உதிரும் பதத்திற்கு அரைக்கவும். மாவுடன் வெல்லம், ஏலக்காய்த் தூள், மசித்த வாழைப்பழம், கோதுமை மாவு சேர்த்து சில நிமிடங்கள் அரைக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். தேங்காய் எண்ணெய், நெய்யை ஒன்றாகச் சேர்க்கவும். இந்தக் கலவையை பணியாரச் சட்டியின் குழிகளில் விட்டு, சூடானதும், மாவை ஊற்றி அப்பமாக சுட்டு எடுக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைக்க வேண்டும்.

கருப்பட்டி ஜாமூன்

தேவையானவை:

பிரெட் - 12 துண்டு,
கருப்பட்டி - 500 கிராம்,
பால் - அரை லிட்டர்,
கண்டென்ஸ்டு மில்க் - 100 கிராம்,
நறுக்கிய பாதாம், முந்திரி - சிறிதளவு,
நெய் - தேவையான அளவு

செய்முறை:

ஓரங்களை நீக்கி பிரெட் துண்டுகளை உதிரியாக எடுத்துப் பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த பிரெட் மாவில் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கோதுமை மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும். இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, வாணலியில் நெய்யை ஊற்றி மிதமான சூட்டில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

தனியாக ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியைச் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி, அதில் ஏலக்காய்த்தூளை தூவவும். பொரித்து வைத்துள்ள உருண்டைகளை அதில் சேர்த்து, இறுதியாக நறுக்கி வைத்த பாதாம் மற்றும் முந்திரியை மேலே தூவவும். கருப்பட்டி பாகில் இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு எடுத்துச் சாப்பிட்டால் மிருதுவாக, சுவையாக இருக்கும்.

- திலீபன் புகழ் 
படங்கள்: பரமகுமார்