தனுஷின் ரெட்டை தீபாவளி பட்டாசு!



கொடி - துரை செந்தில்குமார்

‘‘ஒரு இயக்குநருக்கு அவரோட படம் தீபாவளி ரிலீஸா வர்றது உண்மையிலேயே பெரிய கிஃப்ட். அதுவும் முதன்முதலா தனுஷ் டபுள் ஆக்ட் பண்ணின படமா அமைஞ்சது என்னோட அதிர்ஷ்டம். வெற்றிமாறன் சாரோட தயாரிப்பு, சந்தோஷ் நாராயணன் மியூசிக், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன்னு கலர்ஃபுல் ஹீரோயின்கள் என ஒரு ஃபெஸ்டிவல் கொண்டாட்டத்திற்கான படமா ‘கொடி’ வந்திருப்பதில் எங்க எல்லாருக்குமே ரொம்ப திருப்தி...’’ - புன்னகையில் மகிழ்ச்சி மத்தாப்பு காட்டுகிறார், இயக்குநர் துரை செந்தில்குமார். பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்தவர். ‘எதிர் நீச்சல்’, ‘காக்கி சட்டை’ படங்களை அடுத்து இப்போது தனுஷிற்கு ‘கொடி’ பிடித்திருக்கிறார்.

‘‘அதென்ன ‘கொடி’... முழுக்க முழுக்க அரசியல் படமா?’’
‘‘அரசியல் படம்தான். ஆனா, அரசியலை நையாண்டி செய்யற படமில்லை. அழகான, நல்லதொரு அரசியல் இருக்கும். உலகில் போதை தரக்கூடிய விஷயங்கள்னு மது, மாது, சூதுனு சொல்லுவாங்க. ஆனா எல்லாத்தையும் விட மோசமானது, ‘புகழ்’ தரக்கூடிய போதை. அதைத் தேடி ஓடினா வாழ்க்கையில எதையெல்லாம் இழக்க வேண்டியிருக்கும்ங்கறதை ஆக்‌ஷன் கலந்து கமர்ஷியலா சொல்லியிருக்கேன். தாலிக்கொடி, தொப்புள் கொடி, அரசியல் கட்சிக் கொடி... இந்த மூணு கொடிகளையும் கடந்து வரும் இளைஞனைப் பற்றிய கதைங்கறதால, எல்லாத்துக்கும் பொருத்தமா ஒரு டைட்டில் தேடினோம். அப்படி அமைஞ்சதுதான் ‘கொடி’!’’

‘‘டபுள் ஆக்‌ஷன் தனுஷ்... வெற்றிமாறன் தயாரிப்பு... எப்படி அமைஞ்சது?’’
‘‘ஒன்லைன்ல சொல்றதா இருந்தா, எல்லாம் தானா அமைஞ்சதுதான். பாலுமகேந்திரா சார்கிட்ட நான் அசிஸ்டென்ட்டா இருந்ததிலிருந்து வெற்றிமாறன் சாரை தெரியும். அவரோட ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்கள்ல நான் வொர்க் பண்ணினேன். அதனால தனுஷ் சார் நட்பு கிடைச்சது. அவருக்காக ஒரு கதை ரெடி பண்ணிட்டு போனேன். ‘முதல்ல நீங்க ரெண்டு படங்கள் பண்ணுங்க.

உங்க மூணாவது படத்துல நான் நடிக்கறேன்’னு சொன்னார். திறமைசாலிகளை அடையாளம் கண்டுபிடிச்சு, கை தூக்கிவிடுவதில் கில்லாடி அவர். ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ படங்கள் அவரோட தயாரிப்பில் இயக்கினேன். அந்தப் படங்களின் வெற்றியால் ‘கொடி’யில் நடிக்க சம்மதிச்சார்.’’

‘‘எப்படி வந்திருக்கு படம்?’’
‘‘எங்ககிட்ட கேட்டால் ‘சூப்பரா வந்திருக்கு’னுதான் சொல்லுவோம். ஆனா, ஜனங்க சொல்றதுதான் சரியா இருக்கும். ‘கொடி’யில தனுஷ் சார், இரட்டையரா பிறந்த அண்ணன் - தம்பியா நடிச்சிருக்கார். அண்ணன், அரசியல்வாதி; தம்பி, கல்லூரியில் பேராசிரியர். அரசியல்வாதிக்கு த்ரிஷா ஜோடி. இன்னொருத்தருக்கு அனுபமா ஜோடி. ‘டபுள் ஆக்‌ஷன்ல நடிக்கணும்’ங்கறது தனுஷ் சாரோட ரொம்ப நாள் ஆசை. இந்தப் படத்துக்காக சார் ரொம்பவே மெனக்கெட்டிருக்கார். தொடர்ச்சியா 57 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார். அவரோட படங்கள்லேயே அதிக கால்ஷீட் கொடுத்து நடிச்ச படம் இதுவாகத்தான் இருக்கும்.

முழுக்க முழுக்க பொள்ளாச்சியில் ஷூட் பண்ணியிருக்கோம். ரெண்டு கேரக்டர்களுக்கும் இடையே நிறைய வித்தியாசம் காட்டியிருக்கார். வாய்ஸ் மாடுலேஷன், பாடி லாங்குவேஜ்னு ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பா கவனிச்சு வேறுபடுத்திக் காட்டியிருக்கார். படம் ரெடியாகி, சென்சாரும் ஆகிடுச்சு. தனுஷ் சார் படத்தைப் பார்த்துட்டு சந்தோஷப்பட்டார். ஸ்கிரிப்ட்ல உள்ளது மாதிரி எடுத்திருக்கேன்னு எனக்கும் மகிழ்ச்சி!’’

‘‘த்ரிஷாவும் அரசியல்வாதியா நடிச்சிருக்காங்களாமே?’’
‘‘ஆமாங்க. ‘இதுவரை நான் பண்ணாத கேரக்டர் இது’னு த்ரிஷாவே சொன்னாங்க. தனுஷ் சாரோட முதல் தடவையா அவங்க நடிச்சிருக்காங்க. அவங்களும் சீனியர் என்பதால, ஸ்பாட்ல தனுஷும் த்ரிஷாவும் போட்டி போட்டு நடிச்சிருக்காங்க. ‘பிரேமம்’ல அனுபமாவுக்கு டயலாக் குறைவு. ஆனாலும் அவங்க வந்த சீன்கள்ல எல்லாம் கண்களாலேயே பேசியிருப்பாங்க. அப்படி ஒரு எக்ஸ்ப்ரெஷன் ஆர்ட்டிஸ்ட்.

கோழி முட்டை விக்கிற பொண்ணா கலக்கியிருக்காங்க. படத்துல அவங்க வந்தபிறகு கதை வேகமா நகரும். இவங்க தவிர எஸ்.ஏ.சி. சார், சரண்யா பொன்வண்ணன், சிங்கமுத்து, காளி வெங்கட்னு படத்துல மொத்தமே ஆறேழு கேரக்டர்கள்தான். இவங்க ஒவ்வொருத்தரையும் சுத்தியே கதை நகரும். அனுபமாவே தமிழ்ல டப்பிங்கும் பேசியிருக்காங்க!’’

‘‘டபுள் ஆக்‌ஷன் கதையை முதல்முறையா கையில் எடுத்திருக்கீங்க?’’
‘‘ஆமாங்க. எனக்கு மட்டுமில்ல, தனுஷ் சாருக்கே இது புது அனுபவமா இருந்துச்சு. முதல்ல பத்து, பதினைஞ்சு நாட்கள் அரசியல்வாதியா நடிச்சு முடிச்சிடுவார். அடுத்து தம்பி கேரக்டர் நடிக்கும்போது அண்ணன் கேரக்டர் பேசின வசனங்கள், எக்ஸ்பிரஷன்ஸ் எல்லாத்தையும் ஞாபகத்துல வச்சு நடிக்க வேண்டியிருக்கும். அதையெல்லாம் அசால்ட்டா பண்ணியிருக்கார்.

அது மட்டுமில்ல... பொள்ளாச்சியில் எங்க ஷூட்டிங்ல கிடைச்ச பிரேக்ல தனுஷ் சார் 3 ஸ்கிரிப்ட் எழுதி முடிச்சிட்டார். இடையே கிடைச்ச கேப்ல பாடல்களும் எழுதுறார். அவரைப் பார்த்தாலே கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கு. இப்படி ஒரு கடின உழைப்பை வேற யார்கிட்டேயும் பார்த்ததில்ல!’’

‘‘தனுஷ் - அனிருத் சண்டையினாலதான் இசையமைப்பாளரை மாத்துனீங்களா?’’
‘‘அதெல்லாம் இல்லீங்க. அனிருத் கூட தனுஷ் சார் நிறைய வொர்க் பண்ணியிருக்கார். என்னுடைய முந்தைய படங்களுக்கும் அனிருத்தான் மியூசிக். நாங்க இந்தப் படத்தை தொடங்கின டைம்ல அனிருத் ஆறேழு படங்கள்ல பிஸி. ஸோ, புதுசா ஒரு காம்பினேஷன் பிடிப்போம்னு நினைச்சோம். சந்தோஷ் நாராயணன் பாடல்கள் அருமையா வந்திருக்கு. ஒரு பாடலை சின்னக்குயில் சித்ரா மேடம் பாடியிருக்காங்க.’’

‘‘தனுஷோட ஃபேவரிட் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இதுல மிஸ்ஸிங்?’’
‘‘ஆமாங்க. அவர் அப்போ வேற படங்கள்ல பிஸியா இருந்தார். வேல்ராஜ் சாரோட அசிஸ்டென்ட் வெங்கடேஷ்தான் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ‘வடகறி’, ‘மிருதன்’னு ஏற்கனவே படங்கள் பண்ணினவர். மறைந்த எடிட்டர் கிஷோரோட அசிஸ்டென்ட் பிரகாஷோட எடிட்டிங் பின்னி எடுத்திருக்கு.’’

‘‘எஸ்.ஏ.சந்திரசேகர் இதில் ஹீரோவுக்கு வில்லனா? அப்பாவா?’’
‘‘அது  சஸ்பென்ஸ். இந்தக் கதை ரெடியானதும் யாரை இதில் நடிக்க வைக்கலாம்னு யோசிச்சோம். ரியல் லைஃப்லேயும் தனுஷ் சார் மதிக்கற ஒருத்தரா இருந்தால்  இன்னும் சிறப்பா இருக்கும் என்பதால் எஸ்.ஏ.சி. சார்கிட்ட இந்தப் படத்தோட கதையைச் சொன்னேன். கதையை முழுவதும் கேட்டவர், ‘இது அரசியல் படமா இருக்கே.  நான் பண்ணினா சரியா வருமா?’னு கேட்டு, ‘நடிக்க மாட்டேன்’னு சொல்லிட்டார்.

அப்புறம் வீட்ல போய் இதை ஷோபா மேடம்கிட்ட சொல்லியிருக்கார். ‘ஏங்க, தனுஷ் படத்துல கண்டிப்பா  நீங்க நடிக்கணும்’னு மேடம் சொல்லிட்டாங்க. அதனால கமிட் ஆனார். எஸ்.ஏ.சி. சார் எத்தனையோ அரசியல் படங்கள் இயக்கினவர். அத்தனையும் செம ஹிட் ஆகியிருக்கு. அப்படிப்பட்டவர் எந்தத் தலையீடும் இல்லாமல் நடிச்சது ஆச்சரியமாகிடுச்சு.

இன்னொரு பிரமிப்பான விஷயம், டப்பிங் டைம்ல அவருக்கு உடல்நிலை சரியில்லை. வேற ஒருத்தரை வச்சு டப்பிங் முடிச்சிடலாம்னு நினைச்சோம். ஆனா, அவரே வந்து டப்பிங் பேசியிருக்கார். ‘தீபாவளிக்கு சரியான படமா வந்திருக்கு’னு சந்தோஷமா சொன்னார். அது நிஜம்தான்!’’

- மை.பாரதிராஜா