சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா?



சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம்! - சமூக வலைத்தளங்களில் இந்த கோஷம் கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இந்த ஆவேச தேசபக்திக்கு இரண்டு காரணங்கள். காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் கொன்றதற்குப் பின்னணியாக இருந்தது, ‘ஜெய்ஷ் இ மொகமது’ அமைப்பின் தலைவன் மசூத் அசார். தடை செய்யப்பட்ட அமைப்பாக இதனை அறிவிக்க ஐ.நா.வில் இந்தியா எடுத்த முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டது.

அணுசக்தி பொருட்களை சப்ளை செய்யும் நாடுகள் குழுவில் இணைய இந்தியா முயற்சித்தது. அமெரிக்கா, ரஷ்யா என பல நாடுகளின் ஏகோபித்த ஆதரவு இருந்தும், சீனா தடுத்ததால் இந்தியா அதில் இணைய முடியவில்லை. ‘இப்படி எப்போதும் நம் முதுகிலும் முகத்திலும் குத்திக்கொண்டே இருக்கும் ஒரு எதிரியின் பொருட்களை நாம் வாங்க வேண்டுமா? சீனப் பொருட்களை வாங்க நாம் கொடுக்கும் பணம், மறைமுகமாக நம் நாட்டை சிதைக்கும் தீவிரவாதிகளின் கைகளுக்குப் போகிறது’ என்பதே இந்தப் புறக்கணிப்புக்கு அடிப்படைக் காரணம்.

வலதுசாரி சிந்தனையுள்ள சில இந்துத்வா தலைவர்கள் இந்தப் பிரசாரத்தை ஆரம்பித்து வைக்க, மிடில் கிளாஸ் மத்தியில் இது பரபரப்பாகப் பரவியது. பல நகரங்களில் வர்த்தக அமைப்புகள் ‘சீனப் பொருட்களை வாங்கி விற்க மாட்டோம்’ என தீர்மானம் போட்டன. உலக நாடுகளே உற்று கவனிக்கும் அளவுக்கு இது தீவிரமானது.

தீபாவளி நேரத்தில் சீனப் பட்டாசுகளும் எலெக்ட்ரானிக் பொருட்களும் பெருமளவு விற்கும். இந்த ஆண்டு இவற்றின் விற்பனை சரிந்துள்ளது. இதுவே இந்தப் பிரசாரத்தின் வெற்றி. ஆனால் சீன அரசு பத்திரிகைகள், ‘இந்த பிரசாரத்தைத் தாண்டியும் அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்நாப்டீல் தளங்களில் மூன்றே நாட்களில் 5 லட்சம் ஜியோமி போன்கள் விற்றன’ என எழுத வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.

இந்தியாவில் ‘சைனா மேக்’ அயிட்டங்கள் இல்லாத வீடுகளைப் பார்க்க முடியாது. குழந்தைகள் விளையாடும் பொம்மையிலிருந்து பிளாஸ்டிக் அயிட்டங்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் என எல்லா இடங்களிலும் சீனா ஊடுருவியுள்ளது. நுகர்வோர் மின்னணு பொருட்கள், லேப்டாப், சோலார் மின்சக்தி கருவிகள், பிளாஸ்டிக் பொருட்கள், உரங்கள், தொழில் துறைக்குத் தேவையான இயந்திரங்கள் என பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

சீனப்பொருட்களை வாங்கும் எல்லோரையும் ‘தேசபக்தி இல்லாதவர்கள்’ என முத்திரை குத்திவிட முடியாது. ஏன் வாங்குகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். பல வண்ணங்களில் வானில் வர்ணஜாலம் காட்டும் சீன ராக்கெட் பட்டாசு வெறும் 50 ரூபாய். அதில் இந்தியத் தயாரிப்பு 200 ரூபாய்  விலை. கடந்த 2012ம் ஆண்டு ரிசர்வ் வங்கிக் குழு ஒன்று, சீன இறக்குமதிப் பொருட்களை ஆய்வு செய்தது.

‘சீனாவிலிருந்து வந்த பொருட்களில், மூன்றில் ஒரு பங்கு பொருட்களின் விலை, அதே தரமுள்ள இந்தியத் தயாரிப்புகளைவிட மலிவு விலையில் இருந்தன’ என்றது அந்த ஆய்வு அறிக்கை. சீனாவிலிருந்து கப்பல்களில் ஏற்றி வரும் செலவு, மொத்த வியாபாரி வைக்கும் லாபம் என எல்லாவற்றையும் மீறி சீனத் தயாரிப்புகள் இந்தியப் பொருட்களை விட பல மடங்கு விலை குறைவாக இருக்கக் காரணம் என்ன? இதை சரிசெய்யாமல் புறக்கணிப்புகளில் எந்த அர்த்தமும் இல்லை.

பட்டாசு, பொம்மைகள், எலெக்ட்ரானிக் அயிட்டங்களை மக்கள் வாங்காமல் விடுவதால் காங்சூ மற்றும் யிவு என்ற இரு நகரங்களிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும் சிறு வியாபாரிகளைத் தாண்டி சீனாவில் பெரிய பாதிப்பு இருக்காது. பி.ஜே.பி ஆளும் ஹரியானா மாநில விளையாட்டு அமைச்சர் அனில் விஜ், ‘சீனப் பொருட்களை புறக்கணிப்போம்’ என ட்விட்டரில் எழுதுகிறார். ஹரியானா மாநில அரசு, ஸ்மார்ட் சிட்டி அமைப்பது உள்ளிட்ட ரியல் எஸ்டேட் மேம்பாட்டுக்கு சமீபத்தில்தான் சீனாவின் ‘வாண்டா’ நிறுவனத்துடன் 67 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. புறக்கணிப்பை மக்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா?

குஜராத் மாநில வர்த்தகக் கூட்டமைப்பு, ‘சீனப் பொருட்களை வாங்கி விற்க மாட்டோம்’ என சொல்கிறது. ஆனால் குஜராத் மாநில பி.ஜே.பி அரசு, துறைமுக நகரங்கள் மேம்படுத்தலுக்கு சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடுகிறது. பிரிட்டிஷ் காலத்தில் இந்தியா பிரிட்டனுக்கு பருத்தியை ஏற்றுமதி செய்தது. அங்கிருந்து ஆடைகளை இறக்குமதி செய்தது. இப்போது சீனாவுக்கு இரும்புத்தாது ஏற்றுமதி ஆகிறது.

அங்கிருந்து இரும்பை இறக்குமதி செய்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துருப்பிடிக்காத இரும்புத்தூணை நிறுவும் வல்லமை பெற்றிருந்த இந்தியர்கள் இன்னும் இரும்பு இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? சீன இரும்பு வராவிட்டால், கடன் வாங்கி வீடு கட்டும் மிடில் கிளாஸில் ஆரம்பித்து எல்லோரும் காஸ்ட்லி இரும்பை வாங்க வேண்டும்.

இந்தியாவின் மருந்து உற்பத்தித் தொழிற்சாலைகள், சீனாவிலிருந்து வரும் கச்சாப் பொருட்களையே 90 சதவீதம் நம்பியுள்ளன. இவை வராவிட்டால், பல உயிர்காக்கும் மருந்துகளின் விலை தாறுமாறாக எகிறிவிடும். நாம் எந்த வல்லரசின் உதவி இல்லாமலும் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களையே செய்யும் வல்லமை பெற்றுவிட்டோம். ராக்கெட் செய்கிறவர்களால் சாதாரண இரும்பை உருவாக்க முடியாதா என்ன? இதற்கான வழிகளை உருவாக்குவதில்தான் ‘தேசபக்தி’ இருக்கிறது, புறக்கணிப்பில் அல்ல!

சில புள்ளிவிவரங்கள்!

* கடந்த 2011-12ல் இந்தியாவின் மொத்த இறக்குமதியில் பத்தில் ஒரு பங்கு சீனாவிலிருந்து வந்தது. 2015-16ல் ஆறில் ஒரு பங்கு சீனாவிலிருந்து வந்தது.
* இந்தியாவில் சீனாவின் முதலீடும் தாறுமாறாக அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டைவிட 2015ம் ஆண்டில் 6 மடங்கு முதலீடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் சீனா இந்தியாவில் 5800 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
* கடந்த ஆண்டு மட்டும் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு 4 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
* ஒரு நாட்டிலிருந்து இறக்குமதி அதிகமாகச் செய்துவிட்டு, ஏற்றுமதியைக் குறைவாகச் செய்தால் ‘வர்த்தகப் பற்றாக்குறை’ உள்ளதாகக் குறிப்பிடுவார்கள். இந்தியா சீனாலிருந்து இறக்குமதி செய்யும் மதிப்பைவிட ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பு 7 மடங்கு குறைவு. உலகிலேயே மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில்தான் உள்ளது.
* சீனாவிலிருந்து நாம் வாங்குவது அதிகரிக்க, சீனா நம்மிடமிருந்து வாங்குவது குறைந்துள்ளது. 2011-12ல் சீனாவுக்கு 86 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி ஆகின. 2015-16ல் இது 58 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

- அகஸ்டஸ்