ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி

புதிய தொடர் ஆரம்பம் - 1

‘தயாராயிருங்கள் காம்ரேட். நாளையோ, நாளை மறுநாளோ புரட்சி வந்துவிடும். கவலைகள் மடியப் போகின்றன. இழிவுகளும் கேடுகளும் தங்கள் மூட்டைகளைக் கட்டிக்கொண்டு கிளம்பக் காத்திருக்கின்றன.  காலம் நம்மை நோக்கி வருகிறது. கவனமாயிருங்கள்’ என யாரோ சில பேர், லட்சிய விதைகளை நமக்குள் விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களால் தான், ஓரளவாவது உயிர்ப்போடு இருக்கும் இன்றைய வாழ்வை சூனியம் கவ்வாதிருக்கிறது.

சொந்த நலனை விட்டொழித்து தம்முடைய அந்திமக் காலம் வரை உழைக்கும் அந்த ஒரு சிலரே வரலாறுகளையும் உருவாக்குகிறார்கள். ஆனாலும், உலக வரலாறுகள் முழுக்க தவறாகவே எழுதப்படுகின்றன. தங்களை உருவாக்க உதவியவர்களை, உழைத்தவர்களை அது ஒருபோதும் உண்மையாகக் குறித்து வைப்பதில்லை. ஏழாம் வகுப்பு இறுதித் தேர்வு விடுமுறையில் எனக்கும் புரட்சி செய்து வரலாறாகும் எண்ணம் இருந்தது.

அப்போது தஞ்சாவூர் பூக்காரத் தெருவிலுள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தட்டி போர்டு எழுதுபவனாக நானிருந்தேன். தட்டி போர்டு எழுதுதல் என்றால் ஒன்றுமில்லை. கோயிலில் நிகழ்வுறும் விழாக்களைப் பற்றி குறிப்பெழுதி விளம்பரப்படுத்தும் வேலை. சதுரமாகவோ வட்டமாகவோ அல்லது நீள் சதுரமாகவோ தட்டியைத் தயாரித்து, வெள்ளைக் காகிதங்களை ஒட்டி, அதன்மேல் அவர்கள் தரும் குறிப்புகளை எழுதித் தர வேண்டும்.

இன்று லட்சார்ச்சனை விழா, விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை, தைப்பூசத் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் பால்காவடி, சந்தனக்காப்பு, பிரதோஷ சிறப்பு வழிபாடு என எதையாவது அந்தக் கோயில் குருக்களோ, ஈ.ஓ.வோ தரும் அறிவுரைப்படி எழுதித் தர வேண்டும். இதற்கென்றே கலர் மாத்திரைகள் என்னும் பெயரில் கலர் வில்லைகளை ஸ்டேஷனரிகளில் விற்பார்கள். ஒரு தட்டி எழுத குறைந்தது பத்து வில்லைகள் தேவைப்படும். அரக்கு கலர் வில்லைகளும் பச்சை நிற வில்லைகளும் கூடுதல் விலை.

அரக்கு வில்லைகளை இந்து மதத்தினரும், பச்சை நிற வில்லைகளை இஸ்லாமிய அன்பர்களும் வாங்கிப் பயன்படுத்துவார்கள். மத நம்பிக்கைகள்கூட வண்ணங்களால்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. எனக்கு அந்த வேலையைச் செய்வதில் அலாதி பிரியம் இருந்தது. ஓவியனாகும் வெறியில் அலைந்துகொண்டிருந்த காலம் அது. அந்த வேலையைத் திறம்படச் செய்வதற்காகவே எழுத்துருக்களை வெவ்வேறு வகையில் எழுதிப் பழகினேன்.

சுவர் விளம்பரங்களில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துருக்களை காப்பி செய்தோ, உள்வாங்கிக்கொண்டோ நானும் அதைப் போலவே எழுதிப் பார்ப்பேன். எழுதிப் பழகிய எழுத்துருக்களை தட்டி போர்டுகளில் செப்பமாகக் கொண்டு வர முயற்சி செய்வேன். பார்ப்பவர்களை வியக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே நீட்டியும் குறுக்கியும் எழுத்துருக்களை நான் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

சுப்ரமணிய சுவாமி கோயில் குருக்கள் கல்யாணராமன், என் அப்பாவின் அன்புக்குப் பாத்திரமானவர். அதன் காரணமாகவே அந்த வேலையை எனக்குக் கொடுத்தார்கள். அந்த வேலைக்குச் சொற்ப சம்பளமும் உண்டு. தவிர, பூஜை அன்று விசேஷ மரியாதையும், கூடுதல் பிரசாதமும் கிடைக்கும். படித்துக்கொண்டே வேலையும் செய்து வந்த என்னை அச்செயலுக்காகப் பலரும் பாராட்டுவார்கள். என்னை உற்சாகப்படுத்த அவர்கள் பாராட்டுவதை பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு, ‘போன வார பிரதோஷத்திற்கு கூட்டம் வந்ததே என்னால்தான்’ என்பது போல பிகு செய்வேன்.

பக்குவப்படாதபோது கிடைக்கிற பாராட்டு பரிகாசத்துக்குரியது என்று இப்போது புரிகிறது. அது என் பிரதான வேலை இல்லை என்றபோதும் அதை மிகச் சிரத்தையோடு செய்து வந்தேன். முதல் நாள் தெரிவித்தால், மறுநாளே தட்டியைத் தயாரித்துத் தருவேன். விழாக்காலங்களில் இன்னும் விரைவாக. ஒருமுறை அவசர கதியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. என்னையும் அவர்கள் அவசரப்படுத்த, ‘லட்சார்ச்சனை’ என்பதற்குப் பதில் ‘லட்சியார்ச்சனை’ என்று எழுதிவிட்டேன். கல்யாணராமனும் கவனிக்காமல் தட்டியை கோயில் முகப்பில் கட்டிவிட்டார். அவ்வளவுதான்... ஒரே களேபரமாகிவிட்டது.

பக்த கோடிகளின் இதயம் புண்ணாகும்படி எழுதிவிட்டதாகப் புகார் கிளம்பியது. உடனே, அவ்வேலையில் இருந்து என்னைத் தூக்கிவிட்டார்கள். அதைவிட ‘கம்யூனிஸ்ட்காரரின் பையன் என்பதால் வேண்டுமென்றே லட்சார்ச்சனையை லட்சியார்ச்சனை என்று எழுதிவிட்டதாக’ப் புரளி கிளப்பினார்கள். வேண்டு மென்றே நான் அப்படி எழுதவில்லை என்று சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. என் ஓவியக் கனவுகள் அந்த சம்பவத்திலிருந்து பாழ்படத் துவங்கின. ஆனாலும், நான் விடவில்லை.

ஓவியங்களை வரைய முறையாகப் பயில  எவ்வளவோ முயற்சி யெடுத்தேன். அன்று நவீன ஓவியத்தில் தேசிய விருது பெற்றிருந்த தும்பத்திக்கோட்டை ஓவியர் புகழேந்தியிடம் போய், ‘‘ஓவியம் கற்றுத் தர இயலுமா?’’ என்று கேட்டேன். ‘‘நீங்களாக வரைந்து உருவாகவேண்டியதுதான். ஓரளவு வரைந்து தேர்ச்சி பெற்றபின் அதற்கென்றிருக்கும் கவின் கலைக் கல்லூரியில் சேருங்கள்’’ என்றார்.

அந்த வார்த்தையைப் பின்பற்றி கொஞ்ச காலம் வரைந்து வந்தேன். சுவர் விளம்பரம் செய்துவந்த பலரையும் சந்தித்து என் ஆசையை வெளிப்படுத்தி, என்னையும் வேலையில் சேர்த்துக் கொள்ளக் கேட்டேன். பலரும் பலவித காரணங்களைச் சொல்லி திருப்பி அனுப்பினார்கள். நானாகச் சில ஓவியங்களைக் கிறுக்கினேன். என்றாலும், விவேகானந்தரை வ.உ.சியைப் போலவும் காரல் மார்க்ஸை ஏங்கல்ஸைப் போலவும்தான் வரைய முடிந்தது.

எப்படியாவது எம்.எஃப்.உசேனாகும் தீவிரத்திலிருந்த என் ஆர்வத்தைப் பொருட்படுத்தி, என்னைத் தம்பியாக்கிக் கொண்ட அண்ணன்கள்தான் வீரமணியும் நீலமேகமும். இரண்டு பேருமே கட்சி மாநாடுகளுக்கு சுவர் விளம்பரம் எழுதுபவர்கள். அந்தக் காலத்தில் புகழ்பெற்றிருந்த தரணி சிமென்ட் விளம்பரத்தை ஊர்தோறும் எழுதியவர்தான் நீலமேகம் அண்ணன். இரவு நேரங்களில்தான் அவர்கள் பணி தொடங்கும். வண்ணக் கலவைகளை வாளியில் கரைத்துக்கொண்டு தெருத் தெருவாக தோழர்கள் துணையோடு புரட்சிகர கருத்துக்களை எழுதுவார்கள்.

நானும் அவர்களுடன் வாளி தூக்கவோ தூரிகையைக் கழுவித் தரவோ கிளம்புவேன். ஆளும் அரசைக் கண்டித்து அவர்கள் எழுதும்போது காவல்துறையினர் வந்துவிடுவார்கள். ‘இப்படியெல்லாம் எழுதக்கூடாது. கைது செய்வோம்’ என்பார்கள். ‘சரி, எழுதவில்லை’ என்று சொல்லி போக்குக் காட்டிவிட்டு வேறொரு சுவரில் போய் காவல்துறையின் அடக்குமுறைக்கு சவால் விடும் வாசகங்களை எழுதுவார்கள். அப்படித் தெருத் தெருவாகச் சுற்றிய காலத்தில்தான் சுவரெழுத்து சுப்பையாவைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது.

தீவிர திராவிடக் கழகத் தொண்டரான சுவரெழுத்து சுப்பையா செய்துவிட்டுப் போயிருக்கும் காரியங்கள் போற்றுதலுக்குரியன. தனி ஒரு மனிதனாக தமிழகத் தெருக்கள் முழுக்க பகுத்தறிவுப் பிரசாரம் செய்திருக்கிறார். ‘கடவுளை மற, மனிதனை நினை’ என்ற வாசகம் நமக்குள் பதிய அவரே காரணம். ‘நெற்றியில் திருமண், நெஞ்சிலே களிமண்’ என்றும், ‘விஞ்ஞானி கண்டது விரைவு ராக்கெட், அஞ்ஞானி கண்டது விபூதி பாக்கெட்’ என்றும் அவரே சுயமாக முழக்கங்களை உருவாக்கினார். அவர் கலர் வில்லைகளைப் பயன்படுத்தவில்லை.

நெடுஞ்சாலைகளில் உருகும் தாரையே மண்ணெண்ணெயைக் கலந்து மையாக்கியிருக்கிறார். தூரிகையைத் தேடவில்லை. தன் கைவிரலில் துணியைக் கட்டிக்கொண்டு சுவர்களில் எழுத்துருக்களைக் கொண்டுவந்திருக்கிறார்! பெரியார் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்கிறார் என்றால் முதல் நாளே அந்த ஊருக்குப் போய் தெரு முழுக்க எழுதுவார்; ‘மெகாபோன்’ மூலம் விளம்பரப்படுத்தியும் இருக்கிறார். மக்கள் பெருமளவு கூட்டத்தில் கலந்துகொண்டால், ‘நேற்று சுப்பையா வந்தாரா?’ என்று பெரியாரே கேட்கும் அளவுக்கு அவரது பணி இருக்கும்.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்