நியூஸ் வே



* முதல்முறையாக ஐ.நா. சபைக்கான அமெரிக்கத் தூதராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தப் பதவியைப் பிடிக்கும் நிக்கி ஹாலே, தற்போது தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னராக இருக்கிறார். நிக்கியின் பூர்வீகம் பஞ்சாப் மாநிலம். அக்கவுன்ட்டிங் துறையில் டிகிரி முடித்த நிக்கி, ஆரம்பத்தில் தன் தாயுடன் இணைந்து ஆடை நிறுவனத்தை நடத்தினார்.

பிறகு அரசியலில் குதித்து, அமெரிக்காவின் இளம் வயது கவர்னர் எனப் பெயரெடுத்தார். அதிபர் தேர்தலுக்கு முன் டிரம்ப் கருத்துகளுக்கு முரணாக இருந்தவர் நிக்கி என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘தெற்கு கரோலினா மாகாண மக்கள் நிக்கியால் சங்கடத்தோடு இருக்கின்றனர்’ என வசை பாடினார். அதே டிரம்ப் இப்போது நிக்கியை வாயாரப் புகழ்ந்து இந்தப் பதவியைக் கொடுத்திருப்பது ஆச்சர்யம்!

* கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாணவர்கள் சரியாகப் படித்தாலும், படிக்காவிட்டாலும் எட்டாம் வகுப்பு வரைக்கும் ‘ஆல் பாஸ்’தான். இதனால் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் தேர்வைப் பற்றிய கவலையின்றி மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இதற்கு ஆப்பு வைத்து பிஞ்சுகளின் மனசில் புளியைக் கரைக்க வந்திருக்கிறது சமீபத்திய அறிவிப்பு ஒன்று. ‘பத்தாம் வகுப்பு மற்றும் +2’வில் மாணவர்களின் தேர்ச்சியை கணிப்பதற்காக பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதைப் போலவே ‘ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும்’ என்று தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான என்.சி.இ.ஆர்.டி, அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. விரைவில் ‘8ம் வகுப்பு வரை ஆல் பாஸ்’ என்ற விதியில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஐந்தாம் வகுப்பு மாணவன் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை’ என்ற செய்தி வராமல் இருக்கின்ற வரை இது நல்லது.

* ‘ஜேக் அண்ட் ஜோன்ஸ்’ பிராண்டின் சட்டை விளம்பரத்தில் நடித்ததற்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார் இந்தி நடிகர் ரன்வீர் சிங். இந்த விளம்பரம், ரன்வீர் ஒரு பெண்ணை லிஃப்டிலிருந்து தூக்கிக் கொண்டு போவது போலவும், அதனை லிஃப்ட் ஆபரேட்டர் பார்ப்பது போலவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதன் பேனரில் எழுதப்பட்டிருந்த வாசகமான ‘Don’t hold back, Take your work home’ என்பதுதான் இப்போது பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது. இந்த வாசகத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவிக்க, அந்த வாசகத்தை அகற்றுவதாகத் தெரிவித்துள்ளார் ரன்வீர்.

* மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, சமீபத்தில் இந்தியா முழுவதும் இருக்கும் பெண் பத்திரிகையாளர்களை டெல்லியில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதில் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மத்திய அரசின் திட்டங்கள் குறித்துக் கேட்டறிந்ததுடன், பல சந்தேகங்களை எழுப்பி மேனகா காந்தியின் பதில்களையும் பெற்றனர்.

சிலர் ‘‘எங்களது மாநிலத்தில் மத்திய அரசின் சில திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு அப்படியே இருக்கின்றன’’ என்றும், இன்னும் சிலர் ‘‘எங்கள் மாநிலங்களில் இப்படியான திட்டங்களே அறிமுகமாகவில்லை’’ என்றும் குறைப்பட்டனர். ‘‘தமிழகத்தில் முக்கிய இடங்களில் பெண்களுக்கு கழிப்பறை வசதிகள் கூட இல்லை’’ என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. ‘‘இதுபற்றி உங்கள் பகுதி உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவித்தால் நிச்சயம் ஆவன செய்யப்படும்’’ என்று  மேனகா காந்தி தெரிவித்திருப்பது இதன் ஹைலைட்!

* ‘இது உண்மையில்லை’ என மத்திய அரசு கதறினாலும், மோடி பக்தர்கள் சும்மாயில்லை. ‘ரூபாய் நோட்டு செல்லாது’ என்ற அறிவிப்புக்கு அடுத்ததாக இதெல்லாம் வரப் போகின்றன என தினம் தினம் புதுப்புது வதந்திகள் பரப்புகிறார்கள். ‘பினாமி சொத்துகள்’ பற்றி மோடி பேசியதும் பரவிய வதந்தி இது. ‘E-Property Pass Book (EPPB)’ என்ற ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்யப் போகிறதாம். ‘2017 மார்ச் முதல் அனைத்து சொத்துகளின் விவரங்களையும் கம்ப்யூட்டரில் பதிவேற்றுவதால், இந்தியாவில் அடுத்த ஒரு வருடத்திற்கு யாரும் சொத்துகளை விற்கவோ, வாங்கவோ முடியாது.

சொத்தின் உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்று, தங்களது சொத்துப் பத்திரத்துடன் தங்களுடைய ஆதார் மற்றும் பேன் எண்களை EPPB என்ற மின்னணு சொத்து விபர புத்தகத்தில் இணைத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு 2018 மார்ச்சுக்குள் இணைக்கப்படாத சொத்துகள் யாவும் அரசுக்குச் சொந்தமாகி
விடும்’ என பரபரப்பு கிளப்புகிறார்கள்.

* காரில் தனியாக 32 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் பாருலதா காம்ளே. 43 வயதான பாரு, வெளிநாட்டு வாழ் இந்தியப் பெண். குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு வதோதராவிலும், நவ்சாரியிலும் பாராட்டு விழா நடந்தது. விரைவில் நவ்சாரியில் மருத்துவமனை ஒன்றை கட்டவிருக்கிறார் பாரு. இதற்கான நிதியை தனது சுற்றுப்பயணத்தின்போதே திரட்டிவிட்டார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன.

* மருத்துவ உலகின் ஆஸ்கர் விருதாகக் கருதப்படுவது, ‘பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்’ எனப்படும் ‘பி.எம்.ஜே’ விருது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுக்களின் சிறந்த உழைப்பிற்காகவும் சாதனைக்காகவும் வழங்கப்படுவது இது. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான இந்த விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. 10 பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுகளுக்கு 8 நாடுகளிலிருந்து சுமார் 1500 பரிந்துரைகள் வந்திருந்தன. இந்தக் கடும் போட்டியில் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை விருது வென்றிருக்கிறது.

தேவையற்ற பார்வையிழப்பை தடுக்க இவர்கள் உருவாக்கிய கட்டமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை பயிற்சித் திட்டத்திற்காக ‘சிறப்புமிக்க மருத்துவக்கல்வி’ பிரிவில் விருது வழங்கப்பட்டது. விருதை டாக்டர்கள் மாரி ஃப்ரட்ரிக் முத்தப்பாவும், டாக்டர் வெங்கடேஷும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

* மிக துணிச்சலாக செயல்பட்டு சர்வதேச அரங்கில் இந்தியப் பத்திரிகையாளர்களின் மதிப்பை உயர்த்தியிருக்கிறார் மாலினி சுப்ரமணியம். இவர் ‘ஸ்க்ரோல்.இன்’ என்ற ஆன்லைன் பத்திரிகையில் காத்திரமான புலனாய்வுக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். சட்டீஸ்கர் மாநிலத்தில், ‘காவல்துறைக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையில் நடக்கும் மோதல்களால் பழங்குடி மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள்’ என்பதை எந்தவித சமரசமும் செய்யாமல் எழுதியிருந்தார். துணிச்சல் மிகுந்த இந்த எழுத்துக்காக சமீபத்தில் ‘பிரஸ் ஃப்ரீடம்  அவார்ட்’ இவருக்குக் கிடைத்திருக்கிறது. மாலினிக்கு ஒரு சல்யூட்!