அதிர்ச்சி
மாதவி தைரியமான பெண். நல்ல வேலை. கை நிறைய சம்பளம். அவளுக்கு ஒரு அழகான தங்கை இருக்கிறாள். மாதவியைப் பெண் பார்க்க மெட்ராஸில் இருந்து மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்தனர். பெண் பார்க்கும் படலம் முடிந்ததும் மாப்பிள்ளை வீட்டார் தனியாகப் போய் பேசினர். ‘‘பெண்ணோட தங்கச்சியை மாப்பிள்ளைக்கு ரொம்ப புடிச்சிருக்காம். அவளைக் கட்டிக் குடுக்கிறதா இருந்தா மேற்கொண்டு பேசலாம்’’ என்று மாப்பிள்ளையின் தந்தை வந்து சொல்ல, பெண் வீட்டார் அதிர்ந்தனர்.
 அதிர்ச்சி விலகுமுன் மணப்பெண் மாதவி ஒரு குண்டை பதிலுக்கு மாப்பிள்ளை வீட்டார் மேல் எறிந்தாள். ‘‘மாப்பிள்ளையோட தம்பியை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அவரை எனக்குக் கட்டி வைக்கறீங்களா?’’ ‘‘ஏம்மா... விதண்டாவாதம் பேசுறியா?’’ மாப்பிள்ளையின் அப்பா கோபமாகக் கேட்டார். ‘‘இல்லை சார்... உங்க பையனுக்கு என் தங்கச்சியைப் புடிச்சிருக்கும்போது, எனக்கு அவர் தம்பியைப் புடிச்சுப் போறது தப்பில்லையே?’’
‘‘அவனுக்கு சின்ன வயசும்மா.’’ ‘‘என் தங்கச்சிக்கும் சின்ன வயசுதான் சார்... இப்ப என்னைப் பார்க்க வந்திட்டு என் தங்கச்சியை புடிக்குதுன்னு சொல்லுறவர், நாளை வேற ஒருத்தியை நாடிப் போக மாட்டாருன்னு என்ன நிச்சயம்? உங்களுக்கு உறைக்கட்டும்னுதான் அப்படிப் பேசுனேன். உங்க மகனை நானோ, என் தங்கையோ கனவுலகூட கட்டிக்க மாட்டோம்... கிளம்புறீங்களா?’’ என்று வாசலைக் காட்டினாள் மாதவி.
-வி.சகிதா முருகன்
|