பிரசாதம்



அம்மன் வீதியுலா நடந்துகொண்டிருந்தது. எப்போதும் சிம்பிளாக நடந்து முடியும் ஊர்வலம், இந்த வருடம் திருவிழா போல் நடந்தது. அந்தப் பகுதியின் பெருந்தலைகள் சிலர் பொறுப்பேற்று நடத்தினர். எப்போதும் சரியாக கவனிக்கப்படாத அம்மன், இப்போது மட்டும் அப்பகுதி கவுன்சிலரின் தயவால் கவனிக்கப்பட்டாள்.

நேரிடையாக அவரே ஈடுபடாமல் சில முக்கியமான, அவருக்கு இணக்கமான பெருந்தலைகள் மூலம் அந்த சிறிய அம்மன் கோயிலைப் புதுப்பித்து, அலங்காரம் செய்து, திருவிழாவைப் போல சிறப்பாக வீதியுலாவையும் நடத்தினார். ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் கொண்டு வந்த பூஜைத் தட்டுகளை வாங்கி அர்ச்சகரிடம் கொடுத்து, பூஜை செய்தபின் அவற்றை வாங்கித் தர இரண்டு பேர். சிறிய அந்த அலங்கார ரதத்தின் பின் ஒரு நாலு பேர் இப்படியும் அப்படியும் கண்காணித்த வண்ணம் இருந்தனர்.

ஆரத்தி முடித்து வீட்டினுள் பூஜைத்தட்டை வைத்து, உடைத்த தேங்காயில் வைக்கப்பட்ட பூவை எடுத்துப் பார்த்த பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி. உள்ளே தங்க மகாலட்சுமி டாலர்! தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் துணை அதிகாரியின் முன் நின்ற நால்வர் கூறியது... ‘‘அந்த ஊர்வலத்தில் யாருக்கும் பணம்  கொடுக்கல சார். நமக்கு வந்த தகவல் தப்பு சார். நாங்க உன்னிப்பா கவனிச்சிட்டு வந்தோம். எதுவும் நடக்கவில்லை. கடைசிவரை கண்காணிச்சிட்டு, வரும்போது அம்மனை கும்பிட்டு விட்டு வந்தோம். இந்தாங்க குங்குமப் பிரசாதம்!’’

-ஆ.லோகநாதன்