நேர்மை
‘‘அப்பா! இன்னிக்கு ‘ராமசாமி எஞ்சினியரிங் கம்பெனி’க்கான ‘இன்டர்வியூ’வுக்கு போகப் போறேன். அந்த ராமசாமி உங்ககூட காலேஜ்ல படிச்ச நண்பர்தானே அப்பா? ஒரு ரெகமண்டேஷன் லெட்டர் குடுங்கப்பா! நிச்சயம் வேலை குடுத்திடுவார்!’’ என்றான் செந்தில். ‘‘உனக்குத் திறமை இருந்தா நிச்சயம் வேலை கிடைக்கும். நம்பிக்கையா போ’’ என்றார் கோபத்துடன் மாணிக்கம்.
 ‘‘அப்பாவுக்கு பிடிக்காத விஷயத்தைப் பத்தி கேட்காதே, பொறப்படுடா’’ என்று அவனுடைய அம்மா ராஜம் விரட்டினாள். இன்டர்வியூக்காக ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். ராமசாமியே இன்டர்வியூவை நடத்தினார். செந்திலின் முறை வந்தது. கேட்ட கேள்விக்கெல்லாம் திறமையாக பதிலளித்தான்.
அவன் ரெஸ்யூமைப் பார்த்து ராமசாமி பரவசமாகி, அவன் அப்பாவைப் பற்றி விசாரித்தார். தங்கள் மலரும் நினைவுகளைச் சொன்னார். கடைசியாக ராமசாமி அவனிடம், ‘‘நீ மாணிக்கம் பிள்ளையா? ரொம்ப ரொம்ப நேர்மையான ஆளாச்சே அவர். உன்னையும் அப்படித்தான் வளர்த்து இருப்பார்’’ என்றபடி நட்பாகச் சிரித்தார்.
படபடப்புடன், ‘‘ஆமாம் சார்!’’ என்றபடியே, வேலை நிச்சயம் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையோடு வெளியேறினான் செந்தில். அவன் சென்றவுடன் மேனேஜர் வந்தார். ‘‘உங்க ஃபிரண்ட் பையனுக்கே வேலை குடுத்துடலாமா சார்?’’ என்று கேட்டார். ‘‘நம்ம பிசினசுக்கு அந்தாளு நேர்மையெல்லாம் சரிப்பட்டு வராதய்யா! அப்புறம் இழுத்து மூடிட்டுப் போக வேண்டியதுதான்’’ என்றார் ராமசாமி.
-பி.மாணிக்கவாசகம்
|