விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 5

தங்க நாற்கர சாலையின் மத்திய பகுதி. சாலையை இரண்டிரண்டாக துண்டித்தபடி இரண்டரை அடி நீளமும் ஒன்றரை அங்குல உயரமும் கொண்ட மேடை ரோட்டுக்கு சமமாக பயணித்துக் கொண்டிருந்தது. இந்த உறக்கமற்ற இடத்தில் விழுந்த இருளுக்குள்தான் ஆதி அமர்ந்திருந்தான். மைக்ரோ நொடி கூட அவனது இமைகள் மூடவில்லை. சிவப்பு நிற ஹோண்டா சிட்டி பக்கமே தன் கருவிழிகளை பதித்திருந்தான்.

பல்டி அடித்து அந்தக் கார் விழுந்ததையும் சட்டென்று பற்றி எரிய முற்பட்டதையும் காணக் காண ஆதியின் மனதில் இனம் புரியாத நிம்மதி ஏற்பட்டது. இனி தாராவும் கண்ணாடி அணிந்த இளைஞனும் பிழைக்க வழியே இல்லை என்பது உறுதியானதும் எழுந்தான். செவி அதிர்ந்தது.

இயர் போனை உதட்டருகில் கொண்டு வந்தான். ‘‘என்னாச்சு ஆதி?’’ காதை வருடிய மாஸ்டரின் குரல் அவன் முகத்தை மலர்த்தியது. ‘‘முடிந்தது மாஸ்டர். ரங்கம் ப்ளூப்ரின்டும் கிடைச்சுடுச்சு...’’ ‘‘ரெண்டு பேரும்..?’’ ‘‘எரியறாங்க...’’ ‘‘நல்லது ஆதி. இந்தக் கணம், நொடி, நாள், மாதம், வருடம்... எல்லாத்தையுமே நம்ம ரகசிய அமைப்புக்கு முக்கியமான தருணமா மாத்திட்ட.

அதுவும் பிரம்ம முகூர்த்தத்துல இந்த சம்பவத்தை நடத்தியிருக்க. நம்ம மூதாதையர்களோட பூரண ஆசி உன் மேல படிஞ்சிருக்கு. அதனாலதான் இந்த மகத்தான சாதனைய உன் வழியா அரங்கேற்றியிருக்காங்க. இனி நம்ம தலைமுறை இந்த நாளை விழாவா, பண்டிகையா கொண்டாடும்...’’

‘‘உங்க கருணையும் வழிகாட்டுதலும் இல்லைனா இது சாத்தியமாகி இருக்காது மாஸ்டர். எல்லா பெருமையும் உங்களைத்தான் போய்ச் சேரணும்...’’ கன்னங்களில் கோடாக வழிந்த பரவசத்தை துடைக்காமல் தழுதழுத்தான். ‘‘அப்ப சொன்னதை திரும்பவும் இப்ப சொல்றேன். நீதான் நான். நான்தான் நீ...’’ ‘‘தேங்க் யூ வெரி வெரி மச் மாஸ்டர்...’’ முழந்தாளிட்டு சாலையை முத்தமிட்டான்.

‘‘இனி அங்க இருக்காத...’’ ‘‘கிளம்பிட்டேன் மாஸ்டர்...’’ தொடர்பு துண்டிக்கும் வரை முட்டிபோட்ட நிலையிலேயே ஆதி இருந்தான். மனமும் புத்தியும் ஒரே புள்ளியில் குவிந்திருந்தது. மொட்டு விரிந்து தாமரை மலர்வதை உன்னிப்பாக கவனித்தான். உள்ளத்தில் விஸ்வரூபம் எடுத்த கார்க்கோடகரின் உருவத்தை வணங்கினான். எழுந்தான். சரிந்திருந்த பைக்கை நிமிர்த்தினான்.

ஸ்டார்ட்டரை அழுத்தினான். அதுவரை தான் அமர்ந்திருந்த மேடையின் மீது வண்டியுடன் ஏறினான். எதிர்த் திசைக்கு வந்தான். சென்னையை நோக்கி ஆக்சிலேட்டரை முறுக்கினான். இருளோடு இருளாக ஆதி கரைந்து மறையும் நொடிக்காகவே காத்திருந்தது போல் பறவை ஒன்று தரையில் இறங்கியது. கடிகார முள்ளைப்போல் மூன்று முறை காரை வலம் வந்துவிட்டு மேல்நோக்கி உயர்ந்தது.

அது கருடன் என்பதைத் தெரிந்திருந்தும், அதைப் பார்த்ததுமே கன்னத்தில் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருந்தும் கார் எரியும் தகிப்பை உள்வாங்கியபடி அந்த தங்க நாற்கர சாலை அமைதியாக இருந்தது. பல்லாவரத்தைக் கடந்து குரோம்பேட்டையை தொட்டதும் வைஷ்ணவா கல்லூரி பக்கம் தன் மாருதியை ஐஸ்வர்யா திருப்பினாள். கருக்கல் நேரம். அபார்ட்மென்ட் ஆட்கள் விழிப்பதற்குள் வந்த வேலையை முடித்தாக வேண்டும்.

ரயில்வே கேட் திறந்திருந்தது. சாலையில் நிரம்பியிருந்த கற்களும் குழிகளும் வேகத்தை மட்டுப்படுத்தின. தாராவின் விவரிப்பு வழியே தன் மனதில் பதிந்திருந்த இடத்தை கடக்கையில் ஒரு கணம் திரும்பினாள். புதர். கார்க்கோடகன் இறந்த இடம். மனம் அதிர்ந்தது. சட்டென்று தன் பார்வையை சாலையில் பதித்தாள். வைஷ்ணவா கல்லூரிக்கு எதிரில் தென் திசை நோக்கிச் சென்ற இரண்டாவது சாலையில் திரும்பி, டெட் எண்டில் இடதுபக்கம் ஸ்டியரிங்கை வளைத்து வலது, இடது என பயணித்து போலீஸ் பூத்தை அடைந்தாள்.

ராமர் கோயில் கோபுர உச்சி மஞ்சள் நிறத்தில் வரவேற்றது. கோயிலை ஒட்டி இடதுபுறம் திரும்பி வந்த முதல் ரைட்டில் மாருதியை நுழைத்தாள். ஸ்கூல் தெரு. அந்தப் பக்கம் கடைசி அபார்ட்மென்ட்டுக்கு முந்தைய அடுக்குமாடி. காரை விட்டு இறங்குவதற்கு முன் தன் ஐபோனை ஆராய்ந்தாள். இரண்டு சாவிகளின் புகைப்படம் திரையில் ஒளிர்ந்தது. போட்டோவின் உச்சியில் இரண்டு எண்கள் எழுதப்பட்டிருந்தன.

அதை மனதில் குறித்துக் கொண்டு தன் ஹேண்ட் பேக்கை திறந்து சாவிக் கொத்தை எடுத்தாள். உலகிலுள்ள எல்லா பூட்டுகளையும் திறக்கும் வகையில் அதிலிருந்த சாவிகள் உருவாக்கப்பட்டு ஒவ்வொன்றின் நெற்றியிலும் எண்கள் பொறிக்கப்பட்டிருந்தன. தனக்குத் தேவையான இரண்டை மட்டும் அதிலிருந்து பிரித்தாள். மீண்டும் ஐபோன் திரை காண்பித்த எண்ணையும் தன் கையில் இருக்கும் சாவிகளின் நம்பரையும் சரிபார்த்தாள்.

உள்ளங்கால் வியர்க்க காரை விட்டு இறங்கிய ஐஸ்வர்யா நேராக காயத்ரிக்கு பின்னால் இருந்த சீனிவாசா அப்பார்ட்மென்டை அடைந்தாள். முதல் மாடியில் இருந்த F/5க்கு முன்னால் நின்றபோது அவள் இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. பக்கத்தில் இருந்த இரு ஃப்ளாட்டும் மூடியிருந்தன. முதலில் க்ரில் கேட்டையும் பிறகு மரக்கதவையும் தன்னிடம் இருந்த சாவியால் திறந்து சட்டென்று உள்ளே நுழைந்தாள்.

தாராவை சந்திக்க அடிக்கடி வந்து போன இடம் என்பதால் இலக்கு துல்லியமாக மனதில் விரிந்திருந்தது. புத்தக அறையை விட்டுவிட்டு ஹாலை ஒட்டி இருந்த படுக்கையறைக்குள் நுழைந்து பால்கனி கதவைத் திறந்தாள். துளசி செடி காற்றில் அசைந்து கொண்டிருந்தது. பக்கத்து அப்பார்ட்மென்ட் விழிப்பதற்காக காத்திருந்தது. சட்டென்று குனிந்து துளசியை வேரோடு பிடுங்கினாள்.

செந்நிற தொட்டிக்குள் இருந்த மண்ணை தன் கையில் இருந்த சாவியால் கிளறினாள். நேரம் செல்லச் செல்ல பயம் படர ஆரம்பித்தது. கீழ்உதட்டை ஒரு விநாடி கடித்தவள் மூச்சை இழுத்துப் பிடித்தபடி தொட்டியைத் தூக்கிக் கவிழ்த்தாள். உள்ளுக்குள் இருந்த மண், மொசைக் தரையில் பரவியது. கைகளால் கிளறினாள். சுருட்டிய வடிவில் ரப்பர் பேண்டால் கட்டப்பட்ட பாலிதீன் கவர் தட்டுப்பட்டது. எடுத்து கவரை பிரித்தாள். பக்கத்து அடுக்குமாடி குடியிருப்பின் கொல்லையில் எரிந்த டியூப் லைட் வெளிச்சத்தில் பழுப்பேறிய வெள்ளைக் காகிதம் படபடத்தது.

எடுத்துப் பிரித்தாள். கேப்பிட்டல் லெட்டரில் ஆங்கில எழுத்துகள் சிவப்பு நிற மையினால் எழுதப்பட்டிருந்தன. ‘BUUBDL BU EBXO.’ கிரிப்டாலஜி! மூளையின் செல்கள் துரிதமாக வேலை செய்தன. ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் பிந்தைய எழுத்தை மனதுக்குள் எழுதத் தொடங்கினாள். ‘Bக்கு பின் C... Uக்கு பின் V...’ இப்படியே எழுதிவிட்டு வந்த வாக்கியத்தை படித்தாள். பொருள் இல்லாமல் பல்லிளித்தது.

உடனே ஒவ்வொரு எழுத்துக்கும் முந்தைய ஆங்கில எழுத்தை பதித்தாள். ‘Bக்கு முன் A... Uக்கு முன் T... 12’ எழுத்துக்கும் எழுதி முடித்ததும் படித்தாள். ‘ATTACK AT DAWN.’ எழுந்த துள்ளலை சிரமப்பட்டு அடக்கியபடி பழையபடி மரக்கதவையும் க்ரில்லையும் பூட்டிவிட்டு காரை அடைந்தாள். அருவியாக மூச்சு வெளியேறியதும் ஐபோனை எடுத்து வாட்ஸ் அப் மேசேஜ் அனுப்பினாள். ‘It’s ATTACK AT DAWN.’

உடனே அனுப்பிய எண்ணில் இருந்து ஆள்காட்டி விரலை உயர்த்திய சிம்பல் வந்தது. ‘குட்நைட்’ என டைப்பிவிட்டு மாருதியை ஸ்டார்ட் செய்யப் போனாள். டங் என ஐபோன் குரல் கொடுத்தது. எடுத்து வாட்ஸ் அப் மெசேஜை படித்தாள். ‘நோ. இட்ஸ் குட்மார்னிங். மும்பைல இருக்கேன். ‘இன்று’ மதியம் சென்னை வர்றேன் - வித் லவ் கிருஷ்’.

வாவ்... சத்தம் வராமல் விசிலடித்தபடி காரை இரண்டாவது கியருக்கு மாற்றினாள். உடலின் ஒவ்வொரு அங்குலத்திலும் சந்தோஷம் ஊற்றெடுத்தது. கிருஷ் சென்னைக்கு வர்றான்... அப்படீன்னா வேட்டை கடைசி கட்டத்தை நெருங்குது. யெஸ். நெருங்கிட்டோம். அர்ஜுனனோட வில்லை சுலபமா எடுத்துடலாம்... பொன்னிறத்தில் கடல் தகதகவென்று மின்னியதை ரசித்தபடியே கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த அந்த பங்களாவை ஆதி அடைந்தான். இரும்பு கேட்டுக்கு மேலிருந்த கேமரா முன்பு பைக்கை நிறுத்தியவன் ஹெல்மெட்டை கழற்றினான்.

தன் முகத்தை முழுமையாக கேமரா முன்பு காண்பித்தான். ஐந்து நொடிகளுக்குப் பின் கேட் திறந்தது. பைக்கை உட்புறமாகத் திருப்பியவன், 20 கி.மீ. வேகத்தை ஸ்பீடோமீட்டர் கடக்காதபடி பார்த்துக் கொண்டான். அரை கிலோ மீட்டர் தூரம் வரை தோட்டம். அதனுள் நெளிந்து சென்ற மண் சாலையில் பயணித்து, சந்தடியற்று இருந்த அந்த வெள்ளை நிற பங்களாவை அடைந்தான்.

போர்ட்டிகோவில் சாம்பல் நிற பி.எம்.டபிள்யூ நின்றிருந்தது. அமைப்புக்கு சொந்தமான இந்த இடத்துக்கு வெளி நபர் வர முடியாது. அழைப்புக்குப் பின் வருகின்ற உறுப்பினர்களும் இருசக்கர வாகனத்தில்தான் வர வேண்டும். அப்படியிருக்க விலையுயர்ந்த இந்தக் கார் எப்படி இங்கு வந்தது? முகத்தை ஸ்கேன் செய்யும் கேமரா, வாகனத்தையும்தானே கையோடு அலசுகிறது? அப்படியிருக்க பி.எம்.டபிள்யூவுக்கு எப்படி கதவு திறந்தது?

முடிச்சிட்ட புருவத்துடன் உள்ளே நுழைந்தான். ஜெர்கினுக்குள் நீல நிற தார்ப்பாய் பாதுகாப்பாக இருந்தது. ஒன்றரை கிலோ எடை கொண்ட செப்புத் தகட்டை பாதுகாப்புக்காக கையில் எடுக்க முற்பட்டான். ‘‘மேல வா ஆதி...’’ ஒலித்த குரல் அவனது ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஊடுருவியது. இது... இது... மாஸ்டர்... அவரா வந்திருக்கிறார்..? இதயம் படபடக்க... கால்கள் நடுங்க... பங்களாவினுள் இருந்த மரப்படிக்கட்டில் ஏறினான். ஒலியெழுப்பிய பூட்ஸ், அவன் தலையில் குட்டியது. புரிந்ததற்கு அறிகுறியாக பூட்ஸைக் கழற்றிவிட்டு குனிந்த தலையுடன் ஏறினான்.

ஒன்று... இரண்டு... மூன்று... இருபத்தோராவது படிக்கட்டு மாடியில் முடிந்தது. ‘‘வெல்கம் மை பாய்...’’ கட்டியணைத்த உருவத்தின் மார்பில் ஒன்றியவன் அப்படியே பொங்கினான். புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்கும். சாதாரண மனிதரின் நெஞ்சிலா, தான் ஒண்டியிருக்கிறோம்? இல்லை. மாஸ்டரின் அரவணைப்பில் இளைப்பாறுகிறோம். எந்த உறுப்பினருக்கும் கிடைக்காத நற்பலன் இது. இந்தக் கணத்திலேயே நம் உயிர் பிரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?

தரையில் சரிந்தவன் அவரை அப்படியே நமஸ்கரித்தான். ‘‘எழுந்திரு ஆதி...’’ தோளைத் தொட்டுத் தூக்கிய மனிதரை முதல் முறையாகப் பார்த்தான். அறுபது வயதிருக்கும். ஆறடிக்கும் அதிகமான உயரம். தலை லேசாக நரைத்திருந்தது. மீசை இல்லை. மழித்திருந்தார். கண்கள் தீர்க்கத்துடன் ஒளிர்ந்தன. எஃகு உடல். தசைகள் இறுகி இருந்தன. கை கட்டி அவர் முன்னால் நின்றான்.

விரியும் புன்னகையுடன் ஆதியின் கைகளை விலக்கிய மாஸ்டர், தோளோடு அவனை அணைத்தபடி உட்புறமாக இருந்த அறையை நோக்கி நடந்தார். மேய்ப்பனின் அரவணைப்பில் பாதுகாப்பை உணரும் ஆட்டுக்குட்டியைப் போல் ஆதி உணர்ந்தான். இருவரும் அந்த அறைக்குள் நுழைந்தார்கள். ‘‘ஜன்னல்களை மூடி ஸ்கிரீனை இழுத்து விடு...’’ செய்தான். அறை இருட்டானது. ‘‘கொடு...’’ ஜெர்கினைத் திறந்து நீல நிற தார்ப்பாயை எடுத்துக் கொடுத்தான். மாஸ்டர் அதை விரித்தார். எதிர்பார்த்தது போலவே அது வரைபடம்தான். ஆனால், ஸ்ரீரங்கம் கோயிலின் ப்ளூ பிரின்ட் அல்ல. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வரைபடம்.

(தொடரும்)

ஓவியம்: ஸ்யாம்