தமிழ்நாட்டு நீதிமான்கள்



கோமல் அன்பரசன்

எஸ்.சுப்ரமணிய அய்யர் அப்போது அப்படித்தான்! ஏன், இப்போதும் கூட அப்படித்தான்! சென்னைக்கு வெளியே உள்ள கீழமை நீதிமன்றங்களில் வாதாடும் வழக்கறிஞர்கள் என்றால், உயர் நீதிமன்ற வக்கீல்களுக்கு இளக்காரம்! அத்தகைய எண்ணத்தை முதன்முதலாக உடைத்து, சென்னையில் புகழ் குவித்திருந்த வழக்கறிஞர்களை  கண்களில் விரல் விடாமலேயே கலங்கடித்தார் ஒருவர்.

நீதித்துறை முழுக்க வெள்ளையர்கள் கொடி உயரப் பறந்துகொண்டிருந்த நேரத்தில், அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் அவர்தான்! சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்த முதல் இந்தியரும் அவரே! சென்னை பல்கலைக்கழகம் சட்டப்புலமைக்காக முதன்முதலில் வழங்கிய ‘டாக்டர்’ பட்டத்தைப் பெற்றவரும் அவர்தான்!

அதே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவியேற்ற முதல் இந்தியரும் அவரே! சட்டத்தைத் தாண்டி, நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய குழுவில் ஒருவர் என தேசபக்தியிலும் சிறந்திருந்தவர்தான்  சர். எஸ்.சுப்ரமணிய அய்யர். அனைவருக்கும் ‘செல்லமாக’ மணி அய்யர்.

மணி அய்யரின் பூர்வீகம் மதுரை. ராமநாதபுரம் ராஜாவின் நம்பிக்கைக்குரிய முகவர் சூறாவளி சுப்பையரின் மகனாக 1842 அக்டோபர் முதல் தேதி பிறந்தார் சுப்ரமணியன். 2 வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்த அவர், பள்ளிக்கல்வி வரை மதுரையில் படித்து முடித்தார். பிள்ளையை சென்னைக்குத் தனியாக அனுப்பி உயர்கல்வி படிக்க வைக்க பெற்ற தாய் பயந்தார்.

அதனால் ராமநாதபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றலாகி வந்தார். அப்போது அவருக்குள் வக்கீலாகும் ஆசை கனன்று கொண்டிருந்தது. வக்கீல் பணியாற்ற அன்றைக்கு இருந்த  ‘பிளீடர்’  தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். ஆனாலும் வழக்கறிஞராக அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.

1862ல்  சென்னை உயர் நீதிமன்றம் உருவானது.  அப்போது செயல்பாட்டுக்கு வந்த குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் மூலம் (சிஆர்.பி.சி) சட்டப்படிப்புக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்பட்டது. அப்போதெல்லாம் சட்டக்கல்விக்கு என்று தனி கல்லூரி இல்லை. சென்னை  மாநிலக் கல்லூரியில்தான் சட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்பட்டது. இந்தப் பின்னணியில், வக்கீலாகும் லட்சியத்தோடு இருந்த சுப்ரமணியன், வேலை பார்த்துக்கொண்டே மெட்ரிகுலேஷன், அக்கால பட்டப்படிப்பான ஃபெலோ ஆஃப் ஆர்ட்ஸ் (எஃப்.ஏ) மற்றும் பி.எல். ஆகியவற்றைத் தனி படிப்பாகவே படித்தார்.

1868ல் இதையெல்லாம் முடித்த சுப்ரமணியனுக்கு தாசில்தார் வேலை காத்திருந்தது. அவரது லட்சியம் அதுவா என்ன? அரசு வேலையிலிருந்து விலகி, வழக்கறிஞர் ஆவதற்கான பணியைத் தொடங்கினார். அப்போதைய விதிமுறைப்படி, வக்கீல் தொழிலைத் தொடங்கும் முன்பு யாராவது வழக்கறிஞரிடம் ஓராண்டு காலம் பழகுநராக வேலை பார்க்க வேண்டும். அதன்பிறகே வக்கீலாகப் பதிவு செய்யமுடியும். இதற்காக வெள்ளைக்கார பாரிஸ்டர் ஜே.சி.மில் என்பவரிடம் சேர்ந்தார்.

1869ல் பதிவு பெற்று, சொந்த ஊரான மதுரைக்குச் சென்று தொழில் தொடங்கினார். 28 வயதில் கனவுக்கு உருவம் கொடுத்து, கறுப்பு அங்கியைக் கம்பீரமாக அணிந்து களமிறங்கிய அவர் தனது அசாத்திய திறமையால் அடுத்த சில ஆண்டுகளிலேயே புகழ் குவித்தார். ‘திருவாங்கூர் ட்ரெஷரிடிபால்கேஷன் கேஸ்’ என்ற பரபரப்பான நிதி முறைகேடு வழக்கில் அய்யருக்குக் கிடைத்த வெற்றி, தென்பாண்டிச்சீமை முழுக்க அவர் பெயரைப் பரப்பியது.

ராமநாதபுரம் ராஜா தொடர்புடைய வழக்கு,மீனாட்சி அம்மன் கோயில் நிதி மோசடி வழக்கு  போன்றவற்றில் அடுத்தடுத்து வென்றதன் மூலம் மதுரை மாநகரின் அசைக்க முடியாத சக்திகளில் ஒருவராக உயர்ந்தார். மதுரையில் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டார். மதுரை மாநகராட்சியின் ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டது. (அப்போதெல்லாம் இப்படி ஒருவருக்கே பல பதவிகள் வழங்கப்படுவது வழக்கம்!) நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன. சட்டத்தொழிலின் மீதிருந்த ஆர்வத்தாலும், திட்டமிட்ட உழைப்பாலும் உயர்ந்துகொண்டே போன சுப்ரமணிய அய்யருக்கு நிகழ்ந்த சோகம் அவர் வாழ்வைப் புரட்டிப் போட்டது. இளம் வயதிலேயே மனைவி அகால மரணமடைந்தார். இதனால்  அவர்  மனதளவில் பாதிக்கப்பட்டார். உறவுகள் இன்னொரு திருமணம் செய்துகொள்ளச் சொன்னார்கள். அன்றைய சூழலில் அது வெகு இயல்பானது. இருந்தாலும் அவருக்கு இரண்டாவது திருமணத்தில் விருப்பமில்லை.

துயரத்தை மறக்க ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் காட்டினார்.  ஒரு கட்டத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு குடியேறினார். 1885 முதல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக தொழில் நடத்த ஆரம்பித்தார். கீழமை நீதிமன்றங்களில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு உயர் நீதிமன்றத்தில் வெகு வேகமாக பெயர் வாங்கினார்.

‘மதுரையில் இருந்து வந்து இங்கே என்ன செய்யப் போகிறார்?’ என்று அலட்சியமாகப் பார்த்தவர்களை, தன் வாதத் திறனால் வாய் பிளக்க வைத்தார். அன்றைக்கு முன்னணியில் இருந்த வி.பாஷ்யம் அய்யங்கார், வெள்ளைக்கார பாரிஸ்டர் எர்ட்லி நார்ட்டன் போன்றவர்களோடு போட்டி போடும் அளவுக்கு உயர்ந்தார். இங்கே உள்ள சட்டங்கள் மட்டுமின்றி இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளிநாட்டு சட்டங்களையும் தெரிந்து வைத்திருந்ததால் உயர் நீதிமன்றத்தை மலைக்க வைத்தார்.

கூடவே சென்னையிலே பிறந்து வளர்ந்த வக்கீல்களுக்குத் தெரியாத அடித்தட்டு பிரச்னைகளையும், அவை தொடர்பான சட்ட நுணுக்கங்களையும் அறிந்திருந்தது அவருக்கு கூடுதல் பலமானது. சுப்ரமணிய அய்யர் என்ற பெயர் மெல்ல மறைந்து எல்லோரும் ‘மணி அய்யர்‘ என அன்போடு அழைக்குமளவுக்கு உயர்ந்தார். அதுவரை வெள்ளைக்காரர்கள் மட்டுமே வகித்து வந்த மெட்ராஸ் மாகாண அரசு  வழக்கறிஞர் பதவிக்கு 1888ல் முதன்முதலாக இந்தியரான மணி அய்யர் நியமிக்கப்பட்டார்.

அப்போது அவர் கையாண்ட வழக்குகள் ஏராளம். அவற்றில் பல பரபரப்புக்குப் பஞ்சமில்லாதவை. தஞ்சாவூர் நாகேஸ்வர அய்யர் ஃபோர்ஜரி வழக்கு, அர்பத்னாட் வங்கி திவால் வழக்கு, திருப்பதி கோயில் மஹந்து வழக்கு போன்றவை மணி அய்யரை உச்சத்திற்குக் கொண்டுபோயின. வழக்கறிஞர் தொழிலுக்கு அப்பால் தேசபக்தியும் சமூக அக்கறையும் கொண்ட மனிதராகவும் திகழ்ந்தார். மெட்ராஸ் மாகாண சட்ட மேலவையின் கௌரவ உறுப்பினர் பொறுப்பு கிடைத்தபோது, வெறுமனே அலங்காரப் பதவியாக அதை இவர் கருதவில்லை. ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தினார்.

நில உரிமையாளர்கள் குத்தகைதாரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது, ஆலய சொத்துகள்  அபகரிக்கப்படுவது போன்ற சமூகப் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்தார். அடையாறில் அமைந்திருக்கும் பிரம்ம ஞான சபை எனப்படும் ‘தியாசஃபிகல் சொசைட்டி’யின் தீவிர செயற்பாட்டாளராக இருந்தார். அதனை நிர்வகித்த குழுவின் 7 பேரில் ஒருவராகத் திகழ்ந்தார். அதன் தலைவராக இருந்த ஆல்காட் என்பவர் அய்யரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுத்ததில்லை.

(ஆல்காட் குப்பம், ஆல்காட் உயர்நிலைப்பள்ளி போன்றவை இவரின் பெயரால் இன்றும் சென்னை பெசன்ட் நகரில் இருக்கின்றன).  இந்தியர்களின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டபோது, அதனை உருவாக்கிய 17 பேரில் சுப்ரமணிய அய்யரும் ஒருவர். 7 ஆண்டுகள் அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்த  அவருக்கு 1895ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பதவியும் தேடி வந்தது. முதல் இந்திய நீதிபதியான முத்துசுவாமி அய்யர் ஓய்வு பெற்ற பிறகு அந்த இடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டார். 

அனைவரும் வியக்கும் வகையில் அதிரடியான தீர்ப்புகளை வழங்கினார். அக்காலத்தில் மிகச் சிக்கலான வழக்காக பேசப்பட்ட ‘வல்லூர் ஜமீன் வழக்கில்’ மிகச் சிறப்பாகத் தீர்ப்பளித்தார். கீழமை நீதிமன்றத்தில் ஜமீன் விவகாரங்களைக் கையாண்டது அவருக்கு சென்னையில் கை கொடுத்தது. விக்கிரமசிங்கபுரம் கொலை வழக்கில், ‘கொல்லப்பட்ட மகனின் சொத்துகளுக்கு, கொலைக்கு காரணகர்த்தாவான தாய் உரிமை கோர முடியாது’ என்று தீர்ப்பு வழங்கினார்.

விதவைப்பெண் தொடர்பான இன்னொரு வழக்கில் புரட்சிகரமான தீர்ப்பினை அளித்தார். அதாவது, மறைந்த கணவரின் சொத்துகளில் இருந்து கிடைத்த வருமானத்தை வைத்து, அவரது விதவை மனைவி புதிய சொத்துகளை வாங்கினார். அந்தச் சொத்துகள் முழுதுமாக விதவைப் பெண்ணுக்கே சேரும் என்று சொன்னார். இப்படி பல வழக்குகளில்  அற்புதமான தீர்ப்புகளை வழங்கினார்.

12 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றிய மணி அய்யர், மூன்று முறை தற்காலிக தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்திருக்கிறார். அந்தப் பொறுப்பினை ஏற்ற முதல் இந்தியர் என்ற பெயரும் அவருக்குக் கிடைத்தது. 1907ல் அவருக்கு கண் பார்வையில் சிறிது கோளாறு ஏற்பட்டது. அதனால் பதவிக்காலம் எஞ்சியிருந்தபோதும் நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அரசாங்கத்திற்கு அவரை விட மனமில்லை. ஆனால், ‘உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவர், மிக முக்கியமான உயர் நீதிபதி பதவியில் இருப்பது முறையாகாது’ என்று திட்டவட்டமாகக் கூறி பதவி விலகினார்.

வக்கீலாக இருந்தபோது காங்கிரஸ் கட்சியில் ஈடுபாட்டுடன் செயல்பட்ட மணி அய்யர், நீதிபதியான பிறகு அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தார். பதவி விலகியபிறகு, முன்பை விட தீவிரமாக அரசியலில் செயல்பட்டார். சென்னையில் காங்கிரஸ் மாநாடு நடத்தினார். அன்னி பெசன்ட் அம்மையார் தொடங்கிய ‘ஹோம் ரூல்’ இயக்கத்தின் கௌரவத் தலைவராக இருந்தார். பெசன்ட் உடன் சேர்ந்து இந்திய இளைஞர் சங்கத்தை (ஒய்.எம்.சி.ஏ) உருவாக்கினார்.

70 வயதை நெருங்கியபோதும் சோர்விலாது நாட்டுக்குப் பாடுபட்டதால், ‘கிராண்ட் ஓல்டு மேன் ஆஃப் சவுத் இண்டியா’ என்றொரு பெயரும் இவருக்குக் கிடைத்தது. ஆங்கிலேய அரசாங்கத்தால் அன்னி பெசன்ட் கைது செய்யப்பட்டபோது, அவரது இயக்கத்தை வழிநடத்தினார். அப்போது இந்தியாவுக்கு விடுதலை தரும் விவகாரத்தில் தலையிடுமாறு அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனுக்கு மணி அய்யர்  கடிதம் எழுதினார்.  வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அக்கடிதத்தால் பிரிட்டிஷ் அரசு அதிர்ந்து போனது.

அவரை ‘ராஜத் துரோகி’ என குற்றம்சாட்டினர். கோபமடைந்து, அவர்கள் கொடுத்திருந்த பட்டங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, இன்னும் வேகமாக தேச விடுதலைக்கான பணிகளைச் செய்தார். இதனால் பல நெருக்கடிகளைச் சந்தித்தார். இன்னொரு பக்கம் சொத்துக்காக உறவுகள் நெருக்கின. போதாக்குறைக்கு உடல்நலமும் கெட்டது.

கடைசி காலத்தில் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, பிரம்ம ஞான சபையிலேயே  துறவுக்கோலம் பூண்டு வாழ்ந்தார். 1924 டிசம்பர் 5ம் தேதி உலகை விட்டு மறைந்தாலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையின் பல நிலைகளில் செல்வாக்கு மிக்க மனிதராகத் திகழ்ந்த அவர் பெயர் நீதித்துறை உள்ளவரையிலும் நிலைத்திருக்கும்!

(சரித்திரம் தொடரும்...)

ஓவியம்: குணசேகர்


சாட்டர்டே கிளப்!

நீண்டிருக்கும் பால்கனிகள், சிலைகள் கொண்ட ஜன்னல்கள் என  வித்தியாசமான வடிவமைப்புடன் சென்னை கடற்கரைச் சாலையில் இருந்த சுப்ரமணிய அய்யரின் வீடு (பீச் ஹவுஸ்), வக்கீல்கள் மத்தியில் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 11 மணிக்கு இங்கே கூடும் வழக்கறிஞர்கள், முக்கியமான வழக்குகளைப் பற்றி விவாதிப்பார்கள். இதற்கு ‘சாட்டர்டே கிளப்’ என்று பெயர் வைத்திருந்தார்கள். அப்படி நடந்த ஒரு சந்திப்பில்தான் ‘தி மெட்ராஸ் லா ஜர்னல்’ தொடங்குவதற்கான யோசனை எழுந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வீடு, இன்றைக்கு ராணி மேரிக் கல்லூரியின் ஒரு பகுதியாக இருக்கிறது.

முதல் துணைவேந்தர்

நீதிபதியாகப் பணியாற்றியபோதே 1904ம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் சுப்ரமணிய அய்யர் சில காலம் பணியாற்றினார். அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் அவர்தான். அதற்கு முன்பாக பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் பணியாற்றினார். பல்கலைக்கழகத்துடன் பல ஆண்டுகள் தொடர்பில் இருந்த அவர், கல்வியை எளிமையாக்கி எல்லா தரப்பினரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். கல்விச் சீர்திருத்தம் குறித்த அவரது பட்டமளிப்பு விழா உரை ஒன்று பிரபலமானது. மணி அய்யரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது சிலை, சென்னை பல்கலைக்கழக செனட் இல்லம் முன்பு வைக்கப்பட்டுள்ளது.