விசாரணை
தொலைபேசி மணி ஒலித்துக் கொண்டிருந்தது. சமையலறையில் நின்றிருந்த சகுந்தலா ஓடிவந்து ரிசீவரை எடுத்தாள். எதிர்முனையில் சகுந்தலாவின் பால்ய கால தோழி சுதா. ‘‘ஹலோ... தெக்குக்கரையிலிருந்து சுதா பேசறேன். ஒண்ணுமில்லப்பா... உன்னோட பக்கத்து வீட்டுலயிருந்து ஒரு சம்மந்தம் வந்திருக்கு. கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி அக்கம் பக்கத்துல இருக்குற நாலு பேர்கிட்ட விசாரிக்கிறது நல்லது இல்லையா?’’ பவ்யமாய் கேட்டாள் சுதா.
 ‘‘ஆமா... ஆமா... நல்லா விசாரிக்கணும்!’’ என்றாள் சகுந்தலா. ‘‘மலர்மதி எப்படி பரவாயில்லையா? அதோட சுபாவம் எப்படி?’’ சுதாவின் கேள்விக்கு சற்றே தடுமாறினாள் சகுந்தலா. ‘‘நல்ல பொம்பளை, நல்ல சுபாவம், யார்கிட்டயும் சண்டைக்குப் போக மாட்டா, மத்தவங்ககிட்ட ரொம்ப நல்லா பழகுவா, நீங்க தாராளமா அந்த வீட்டுல சம்மந்தம் வெச்சுக்கலாம்!’’
‘‘ரொம்ப தேங்க்ஸ். அடுத்த வாரம் அங்க வர்றேன். நேர்ல பார்ப்போம். இப்ப போனை வெச்சிடுறேன்!’’ சுதா தொலைபேசியின் ரிசீவரைத் துண்டித்துவிட்டு அருகிலிருந்த மகள் தினியாவிடம் சொன்னாள். ‘‘மாப்பிள்ளையோட அம்மா மலர்மதி சுத்த தங்கமாம்டி, உனக்கு அவங்ககிட்ட சண்டை போடுற சான்ஸே இல்லைடி. நீ தைரியமா மலர்மதியோட மகனைக் கல்யாணம் பண்ணிக்கலாம்!’’ அம்மா கிண்டலடிக்க மணப்பெண் தினியா மனதில் சந்தோஷ மின்னல் அடித்தது.
-ஐரேனிபுரம் பால்ராசய்யா
|