அஜித்துக்கு மெகா கிஃப்ட்!



பார்வதி நாயர் செம பிளான்

நடிக்கும் படங்களில் பொங்கும் பாந்தம் காட்டும் பார்வதி நாயர், போட்டோஷூட் ஸ்டில்களில் மட்டும் கவர்ந்திழுக்கும் காந்தம். ‘‘எப்போ பேசலாம் பார்வதி?’’ வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பினால் பொறுப்போடு சிணுங்குகிறது செல்போன். எடுத்துப் பார்த்தால் ‘‘ஆன் தி வே டு கொச்சின்... லேண்ட் ஆனதும் பேசலாமா?’’ என கொஞ்சுகிறது பார்வதியின் வாய்ஸ் மெசேஜ். அவரின் தேன்மொழி கேட்கலாமா... இனி!

‘‘ ‘மாலை நேரத்து மயக்க’த்துக்குப் பிறகு தமிழ்ல பார்வதியைக் காணோமே?’’
‘‘மலையாளத்துல வரிசையா நாலு படம். இங்கே ‘எங்கிட்ட மோதாதே’, பார்த்திபனோட ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’னு ரெண்டு முடிச்சிட்டேன். காணோம்னு சொன்னதை வாபஸ் வாங்குங்க. இதுக்கு முன்னாடி தமிழ்ல கொஞ்சம் படங்கள் பண்ணி இருந்தாலும் பெரிய ஸ்கோப் கிடைச்சதில்ல. எனக்கே ஒரு புது அனுபவம் பார்த்திபன் படம்.

இப்பத்தான் என் கேரியர் மேல எனக்கு நம்பிக்கை வந்திருக்கு. வெளியிலதான் அவர் ஜாலி பர்சன். ஷூட்டிங் ஸ்பாட்டுல ஸ்டிரிக்ட். ஆரம்பத்துல கொஞ்சம் பயம் கூட இருந்தது. கொஞ்ச நாள்ல அவர் நினைச்ச மாதிரியே நடிச்சேன். அவர்கிட்ட நல்ல பெயர் வாங்கிட்டேன். அடுத்து ‘என்கிட்ட மோதாதே’யில திருநெல்வேலி பொண்ணா நடிக்கறேன். அபுதாபியில் பிறந்த பெங்களூரு பொண்ணு நான். மாடர்னா இருந்துட்டு கிராமத்துப் பொண்ணா நடிக்கறது சிரமம். ஆனாலும் நல்லா பண்ணியிருக்கேன். இது போக தெலுங்கு, மலையாளத்துல படங்கள் இருக்கு.’’

‘‘நீங்க நிஜத்துல எப்படி?’’
‘‘படங்கள்ல இதுவரை கிளாமர் பண்ணினதில்லை. எனக்கு நேட்டிவிட்டி கேரக்டர்கள்தான் அமையுது. என்னோட ரியல் லைஃப், ரொம்ப மாடர்ன். என்னை சுத்தி இருக்கறவங்க  விரும்பற மாதிரி கலகலன்னு இருப்பேன். எங்கிட்ட ஒரு குழந்தைத்தனமும், பெரிய பக்குவம் இல்லாத குணமும் இருக்கறதே என்னோட ப்ளஸ். எனக்குக் கொஞ்சம் கோபம் வந்தா கூட அதை சரியா வெளியே காட்டத் தெரியாது. அதனாலேயே என்னை நிறைய பேருக்குப் பிடிக்கும். ஒரு விஷயம்... என்னை சுத்தி எப்பவும் பாஸிட்டிவ் எனர்ஜி இருக்கறது மாதிரி பார்த்துக்குவேன்.’’

‘‘ ‘என்னை அறிந்தால்’ ஞாபகம் வந்ததுன்னா... அஜித்கிட்ட பேசணும்னு தோணுமா?’’
‘‘அஜித் சாரை பார்க்க, பேச நினைக்கறேன். ஆனா அதுக்கான சந்தர்ப்பம் கூடி வரல. அப்போ ஷூட்டிங்ல அஜித் சார் எனக்கே தெரியாமல் என்னை அழகா ஒரு படம் எடுத்து அதை பெரியதா ஃப்ரேம் பண்ணி வேற கொடுத்தார். அதுவும் ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட்டா கொடுத்தார். இப்படி ஒரு கிஃப்ட் எனக்கு யாரும் கொடுத்ததில்லை. இன்னிக்கு வரைக்கும் அதான் என் பெஸ்ட் போட்டோ. என் வீட்டுக் கதவைத் திறந்தால் அந்தப் படம்தான் முதல்ல கண்ல படும். வீட்டுக்கு வர்றவங்களுக்கெல்லாம் அந்தப் படம் பிடிக்கும். அஜித் சாருக்கு நானும் பெரிய கிஃப்ட் கொடுக்கறதா இருக்கேன். பெயின்டிங்ல அவரை அருமையா வரையற ஐடியா இருக்கு.’’

‘‘எப்படி இருக்கு உங்க பெயின்டிங் ஹாபி?’’
‘‘முன்னாடி நிறைய டைம் கிடைக்கும். இப்போ பாதி நேரம் ட்ராவல்தான். பெயின்டிங் பண்ணும்போது ஒரு அமைதியும் நிம்மதியும் வேணும். அப்பத்தான் அந்த பெயின்டிங் நல்லா வரும். இப்ப சின்ன வயசில கர்னாடிக் சங்கீதம் கத்துக்கிட்டது பயணங்கள்ல கை கொடுக்குது. மியூசிக் நிறைய கேட்க ஆரம்பிச்சிருக்கேன். பெயின்ட் பண்ண நேரமே இல்லைங்கறதுல கொஞ்சம் வருத்தம்தான்.’’

‘‘கேரள பொண்ணுங்கதான் இங்கே டாப் ஹீரோயின்கள். இந்த லிஸ்ட்டுல நீங்க எப்போ?’’
‘‘இப்பவே அவசரப்படக்கூடாது. ‘மித வேகம் மிக நன்று’னு சொல்வாங்க. அதான் என் வழி. இதுவரைக்கும் எனக்கு கிடைச்ச படங்கள் எல்லாமே தானா அமைஞ்சது. சாஃப்ட்வேர் படிச்சிட்டு இந்த கேரியர்ல வந்து நாலு வருஷம்தான் ஆகுது. இதுவே கடவுளோட ஆசீர்வாதம். இப்போ பெங்களூருவில் இருக்கேன். கேரளாவிலும் வீடு இருக்கு. அங்கேயும் போவேன். சென்னையிலும் வீடு வாங்கணும். ஆக நான் மூணு ஸ்டேட் பொண்ணு.’’

- மை.பாரதிராஜா