இது எங்கள் கீதம்!



‘திரையரங்குகளில் காட்சி ஆரம்பிப்பதற்குமுன் தேசிய கீதத்தை கண்டிப்பாக இசைக்க வேண்டும்’ என்பது உச்ச நீதிமன்றத்தின் சமீப உத்தரவு! இதற்கெல்லாம் காத்திருக்காமல் பல ஆண்டுகளாக தேசிய கீதத்தை தன்னார்வமாகப் போட்டு வரும் தியேட்டர்கள் சென்னையில் இருக்கின்றனவா? ஒற்றை சாட்சியாக உயர்ந்து நிற்கிறது  சென்னை, வடபழனியில் உள்ள ‘ஏவி.எம். ராஜேஸ்வரி’ தியேட்டர்.

‘‘2008ம் வருஷத்தில் இருந்தே ஒவ்வொரு ஷோவுக்கும் முன்னாடி தேசிய கீதம் போடுற வழக்கத்தைக் கொண்டு வந்துட்டோம்’’ என நெகிழ்ச்சியில் ஆரம்பிக்கிறார்  ஏவி.எம்.கே.சண்முகம், தியேட்டரின் உரிமையாளர். ‘‘நான் தாய்லாந்து போயிருந்தபோது  நண்பரோடு தியேட்டருக்குப் போனேன். போய் உள்ள உட்கார்ந்ததும் தேசிய கீதம் போட்டாங்க. அங்கிருந்த எல்லோரும் எழுந்து நின்று அவங்க தேசிய கீதத்துக்கு அவ்வளவு மரியாதை செய்தாங்க.

அந்த நேரத்துல எல்லோர் மனசுலயும் தேசப்பற்று ஆழமா நின்னதை கவனிச்சேன். இதை என் தியேட்டர்ல கொண்டு வரணும்னு நெனச்சேன். முதல்ல, ‘தேசிய கீதம் ஸ்டேண்ட் அப்’னு வாசகம் வரும். அப்புறம், தேசியக் கொடியை திரையில் போட்டு, அப்படியே பாடலும் ஒலிக்கும். ஆரம்பத்தில் இதைப் பார்த்ததும்  நிறைய பேர் ஆச்சர்யப்பட்டாங்க. அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா அது பழக்கத்துக்கு வந்துவிட்டது.

அலட்சியமா உட்கார்ந்திருந்தவங்ககூட படிப்படியா எழுந்து நின்னாங்க. அதப் பாக்க எனக்கு சந்தோஷமா இருந்தது. எதையும் இங்க ஒரே நாள்ல கொண்டு வரமுடியாது. சிலர் ‘ஜெய ஹே’னு கடைசி வரிகள் வரும்போது கூடவே உரக்க கத்தி சொல்றதையும் பார்த்திருக்கேன். அப்பல்லாம் இன்னும் சந்தோஷமா இருக்கும்’’ என்கிற சண்முகத்திடம், ‘‘இதற்காக விமர்சனங்கள் வந்ததா?’’ என்றோம்.

‘‘என் நண்பர்கள் சிலர் ‘சினிமா தியேட்டர்ல இதெல்லாம் எதுக்குப்பா?’னு விமர்சனம் பண்ணியிருக்காங்க. ஆனா, அவங்க சொன்ன எதையும் நான் காது கொடுத்துக் கேட்கலை. ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பேர் கிட்ட படம் பார்க்கிறாங்க. நான் பார்த்தவரைக்கும் யாரும் மரியாதை செலுத்தாமல் இருந்ததில்லை. சென்னை மாதிரி மாநகரத்துல தினமும் ஒரு இரண்டாயிரம் பேர்கிட்டயாவது தேசப்பற்றை வளர்க்க முடியுதேங்கிற சந்தோஷம் எனக்கு மிஞ்சி நிக்குது. அதுபோதும்!’’ எனப் பெருமைப்படுகிறார் ஏவி.எம்.கே.சண்முகம். வெல்டன் சகோ!

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்