குங்குமம் ஜங்ஷன்



நிகழ்ச்சி மகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், விராட் கோஹ்லி, முரளி விஜய், பார்த்திவ் படேல், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஆஷிஷ் நெஹ்ரா, முகமது கைஃப், பாலிவுட் ஸ்டார் அனுஷ்கா சர்மா என பலரும் ஜொலிஜொலிக்க கலர்ஃபுல் காக்டெயிலுடன் நடந்திருக்கிறது ‘யுவராஜ் சிங்- ஹசல் கீச்’ திருமணம். சீக்கிய முறைப்படி சண்டிகரிலும், இந்து முறைப்படி கோவாவிலும் நடந்த இந்த திருமணத்துக்கு வந்திருந்த பலரும் பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தனர். ‘யுவராஜ் சிங்கின் தந்தை திருமணத்தில் கலந்துகொள்ள மாட்டார்’ என செய்திகள் கிளம்பின.

ஆனால் அவர் அசத்தலாக ஆஜர் ஆகி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார். ‘மொகாலி டெஸ்ட் போட்டியில் வீரர்கள் பிஸியாக இருப்பார்கள். தனது திருமணத்திற்கு வருவார்களோ, மாட்டார்களோ!’ என நினைத்திருந்தார் யுவராஜ். ஆனால் போட்டியின் நான்காவது நாளிலேயே இந்தியா ஜெயித்துவிட, வெற்றி உற்சாகத்தோடு யுவராஜின் நண்பர்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர். விழாவில் விராட் கோஹ்லி தனது காதலி அனுஷ்கா சர்மாவோடு ஆடிய குத்தாட்டம்தான் செம வைரல் ஆகி இன்னும் பரபரக்கிறது.

டெக் டிக்

ஹெல்மெட் உலகின் புதிய அவதாரம்தான் இந்த ‘சோலார் ஹெல்மெட்’. இதன் மேற்பகுதியில் சோலார் பேனல் உண்டு. சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தைச் சேகரித்து உள்ளே பொருத்தப்பட்டுள்ள பேட்டரியில் சேகரித்துக்கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில் இரண்டு விசிறிகள் உள்ளன. வெயில் இல்லாத நேரத்தில் காற்றாலையாக இருந்து இவை மின்சாரத்தை உருவாக்கி சேகரித்துக்கொள்ளும்.

1500 mhv அளவு கொண்ட பேட்டரியை 40 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடுகிறது இந்த ஹெல்மெட். உயிர்க்கவசமாக மட்டுமல்லாமல் மொபைல் மற்றும் லேப்டாப் பேட்டரிகளை சார்ஜ் செய்யவும் இதைப்  பயன்படுத்திக் கொள்ளலாம். ஆன்லைனில் மட்டுமே கிடைக்கின்றது. இதன் விலை ரூ.5,000/-

சிற்றிதழ் Talk

வானில் உள்ள நட்சத்திரங்கள் வெறும் ஒளி அல்ல; அவை கண்ணுக்குத் தெரியாத சிரிப்பு. அதை நீ உணர வேண்டும். ஆயிரக்கணக்கான ரோஜா வளர்க்கத் தெரிந்த மனிதனுக்கு ஒரு ரோஜாவினைக்கூட புரிந்துகொள்ள முடிந்ததில்லை!
- அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (‘அம்ருதா’ இதழில்)

புத்தகம் அறிமுகம்

சாதியை அழித்தொழித்தல்
- பி.ஆர்.அம்பேத்கர்

தமிழில்: ப்ரேமா ரேவதி (காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில்-629001. விலை: ரூ.295/- தொடர்புக்கு: 96777 78862) அம்பேத்கரின் மிக முக்கியமான புத்தகம். ஆனால் திட்டமிட்டு ஆதிக்க சாதியினரால் புறக்கணிக்கப்பட்ட புத்தகமும் கூட. இந்து மதத்தின் புரையோடிய  அதனால் அமைப்பை, அதன் பொல்லாங்கை தெள்ளத் தெளிவாக முன்னெடுத்து வைக்கிறது. சாதிய அமைப்புக்குத்  துணை நின்றவர்களை நேர் நின்று கேள்வி கேட்கிறது. இந்தப் புத்தகம் மனிதத்தின் சாரம் என்றால் மிகையில்லை.

அம்பேத்கரின் வீச்சும், பரப்பும் ஆழமும் பூரணமாக வெளிப்படுகிற நூல். உண்மை போல் எழுதுவது வேறு, பொய்யையே உண்மையாக எழுதுவது இன்னொரு விதம். ஆனால் அம்பேத்கரின் பேராற்றல், பெரும் துணிவு,  அறிவார்ந்த விவாதத்துக்குமுன் எந்தப் பொய்யும் நிற்க முடியவில்லை. கவனமான வாசகனுக்கு எந்நேரமும் அம்பேத்கர் ெவளிச்சம் தருகிறார். ‘சாதியை அழித்தொழிக்க முடியுமா!’ என்ற ஒற்றை வரி கேள்விக்கு ஆழ்ந்த பொருள் அடங்கிய விவாதங்கள்.

இவர் போல் வேறு ஒருவரில்லை என்பது புரட்டிப் பார்க்கும் ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது. இணைக்கப்பட்டுள்ள அருந்ததி ராயின் ‘டாக்டரும் புனிதரும்’ கட்டுரை, புத்தகத்தை மேலும் புரிந்துகொள்ள உதவி செய்கிறது. ப்ரேமா ரேவதியின் மொழிபெயர்ப்பில் ‘என்ன மாதிரியான ஒரு புத்தகத்தை தமிழுக்கு மாற்றுகிறோம்’ என்கிற அக்கறை தெரிகிறது. எப்போதும் கைவசம் இருக்க வேண்டிய மகத்தான புத்தகம்.

யூ டியூப் லைட்

‘பிங்க்’ ரிலீஸுக்குப் பிறகு டாப்ஸியின் ஃப்யூச்சர் பாலிவுட்டில் ரொம்பவே டாப். அங்கே கைவசம் 3 படங்கள். எல்லாமே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் என்பதால் பொண்ணு செம ஹேப்பி. அடுத்த வருடம் ரிலீஸாகிற, ‘நாம் ஷபானா’வுக்காக அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிவிட்டார் டாப்ஸி. விஜயசாந்தி போல ஆக்‌ஷன் குயினாக நடிப்பதால் கராத்தே, குங்ஃபூ என கலக்கப் போகிறார் டாப்ஸி.

‘நாம் ஷபானா’வுக்கான கராத்தே பிராக்டீஸை 3 நிமிட வீடியோ கிளிப்பாக்கி ஃபேஸ்புக்கில் தட்டிவிட, ஒன்றரை லட்சம் பார்வையாளர்கள், 13 ஆயிரம் லைக்ஸ் என டாப்ஸிக்கு உற்சாகம் கொடுத்துள்ளனர் அவரது ரசிக கண்மணிகள். கூடவே ‘கேர்ள் இன் ஆக்‌ஷன்’, ‘வெரி நைஸ் ஸ்வீட்டி’ என செல்ல கொஞ்சல் கமென்ட்களும் களை கட்டுகின்றன.

சர்வே

காஸ்ட்லியான பாதாம் பருப்பில் மட்டுமல்ல... சாதாரணமாக, மலிவான விலையில் கிடைக்கக் கூடிய நிலக்கடலைப் பருப்பில்கூட பலவித நன்மைகள் இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. ‘நட்ஸ்’ என்று  மாடர்னாக அழைக்கப்படும்  கொட்டைப் பருப்புகளில் நல்ல கொழுப்பு, புரோட்டீன், வைட்டமின் மற்றும் மினரல்கள் அதிகமாக இருக்கின்றன.

‘ஒரு மனிதன் தினமும் 20 கிராம் நட்ஸ் வகைகளை எடுத்துக்கொண்டால் சுமார் 30 சதவீத இதயநோய்கள் வராமல் தற்காத்துக் கொள்ளலாம். 15 சதவீத புற்றுநோயைத் தடுக்கலாம். ஒருவரின் வாழ்நாளை சுமார் 22 சதவீதம் அதிகமாக்க முடியும்’ என்று பூஸ்ட் கொடுக்கிறார்கள் வல்லுநர்கள்.