மாவீரன் கிட்டு விமர்சனம்



கீழ்சாதியில் பிறப்ெபடுத்து, மாநிலத்திலேயே பரீட்சையில் முதலாவதாகத் தேறுகிறான் கிட்டு. இடையில் உயர்சாதியில் ஒருவர் கொலையுற, அந்தப் பழி கிட்டுவின் மேல் விழுகிறது. பிற்பாடு அந்த இளைஞன் ‘இந்த உலகத்தில் தான் யார்?’ எனப் புரிந்து எதிர்கொள்வதே ‘மாவீரன் கிட்டு’.

சமரசமே இல்லாமல், துல்லிய நோக்கம், தெளிவான பார்வை, சாதி புரையோடிய சமூகத்தின் மீதான கோபம் என எடுத்து வைத்த வகையில் இயக்குநர் சுசீந்திரனுக்கு கை குலுக்கல். வணிக நோக்கமில்லாமல், தீர்வுக்கு முயன்ற அவரது சமூக அக்கறைக்கும் சல்யூட்! சாதாரண வாழ்க்கை வாழ்கிற மாணவனாக விஷ்ணு விஷால், கிட்டு கேரக்டருக்கு செம ஃபிட்! அந்த மொத்த கிராமத்தின் அழகும், குடிசை வீடுகளின் எளிமையும், மனிதர்களின் வாஞ்சையும் நெஞ்சை அள்ளுகிறது.

அத்தனை பேரையும் துள்ளலும், துடிப்பும், நெகிழ்வும், பதமுமாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். நிச்சயம் விஷ்ணு விஷால் அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கிறார். ஹீரோவின் இருப்பிடத்தைக் காட்டாமல், கேரக்டருக்கு மட்டுமே கதவு திறந்துவிட்டிருப்பது அழகு. கொஞ்சமே கொஞ்சமாக ஸ்ரீதிவ்யாவின் செய்கைகளில் மனம் கவர்வது படு இயல்பு.

பார்த்திபனுக்கு முன்னுரிமையை கதை அளித்திருந்தாலும், தானும் பங்கெடுத்து கதையை மெருகேற்றி இருப்பது விஷ்ணுவுக்கு கௌரவமே! படத்தின் பெரிய ஆச்சர்யம் பார்த்திபன். கிண்டல், இரட்டை அர்த்தம், கேலி, கலாய் என எல்லாவற்றையும் மூட்டை கட்டி பரணில் எறிந்துவிட்டு நடித்திருக்கிறார் பார்த்திபன். அற்புத நேர்த்தி, முன்னுதாரணம் அற்ற நடிப்பு என எந்த வகையிலும் சேர்த்துக் கொள்ளலாம்.

இத்தனை நாள் அனுபவம் அவருக்குக் கை கொடுக்க, மனிதர் பிரமாண்டமாக எழுந்து நிற்கிறார். வெள்ளை வேட்டியும், கறுப்புச் சட்டையுமாக ஒரு தேவகுமாரனாக நடிப்பில் வெளுத்தெடுப்பது நீட் அண்ட் பிரைட்! நடை, உடை, கடைக்கண் பார்வை... என திவ்யாவிடம் கிராமத்துப் பெண் வசீகரம்.

‘உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்’ என விஷ்ணுவிடம் தஞ்சம் பெறும்போது பெண்ணுக்கு நடிப்பும் வொண்டர்ஃபுல். எந்நேரமும் சாதித் திமிரில் அலையும் ஹரிஷ் உத்தமன் பார்வையில் மிரட்டும் இடங்களில் எல்லாம் செம! சூரி இருந்த இடமே தெரியாமல், ஒரு சீரியஸ் ரோலில் வந்து போவது கூட ஆச்சர்யம்தான். சாதியை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு கொடுக்கிற சவுக்கடி சத்தம் படம் முழுவதும் ேகட்கிறது.

‘‘அதிகாரத்தில் இருப்பவரை நாங்கள் தவறு சொல்லவில்லை. அதிகாரமே தவறுன்னு சொல்கிறோம்...’’ இப்படியான துணிச்சலான அசல் வசனங்களுக்கு சொந்தக்காரர் ஆகிறார் யுகபாரதி. படம் முழுக்கவும் எடுத்த சாட்டையைக் கீழேயே வைக்கவில்லை அவர். நறுக் நறுக் வசனங்களால் தோள்களுக்குத் தினவு ஏற்றுவதில் யுகபாரதி முன்னிலை. இதிலும் இமான் ப்ளஸ் யுகபாரதி காம்பினேஷன் ‘இளந்தாரி’யில் செம ஒர்க் அவுட்.

கிராமத்து இருளில், விளக்கில், மலையில் பயணிக்கும் கேமரா மூலம் ஒவ்வொரு காட்சிக்கும் ஓவிய நேர்த்தி கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.சூர்யா. காதலைத் தவிர்த்தும் இன்னும் பல பிரச்னைகளை முன்னிறுத்தியிருக்கலாம். அந்த இன்ஸ்பெக்டர் ஹரிஷ் உத்தமனின் எப்போதும் கனன்றும் கோபத்திற்கு காரணம்தான் என்ன? மாவீரன் கிட்டு படமல்ல... பாடம்!

- குங்குமம் விமர்சனக்குழு