துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனும் சனியும் தரும் யோகங்கள்
கிரகங்கள் தரும் யோகங்கள் - 68
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
பிரமாண்டங்கள் அனைத்தையும் ஆளும் கிரகமான சனியும், உலகின் அழகியலை ஒட்டுமொத்தமாக நிர்ணயிக்கும் சுக்கிரனும் இணையும் யோகம் பெற்ற இவர்கள், தங்களுக்கென்று ஓர் உலகை உருவாக்கிக்கொள்வார்கள். எந்த விஷயத்தைச் செய்தாலும் அதில் ஈடு இணையற்ற நிபுணத்துவத்தோடு விளங்குவார்கள். உலகளவிலான ஒரு விஷயத்தைச் செய்வதே இவர்களின் ஆசையாக இருக்கும்.
 அதில் பெரிதாகவும் சாதிப்பார்கள். தான் செய்யும் காரியங்களால் சமூகத்தில் ஏதேனும் ஒரு அலையை உருவாக்குவார்கள். சுக்கிரனின் வசீகரமும் ரசனையும் சேர்ந்து, சனியின் கடுமையான உழைப்போடு வெளி வரும்போது கப்பல் போல பிரமாண்டமாகத்தானே இருக்க முடியும்!
துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனும் சனியும் ஒரே இடத்தில் இணைந்திருந்தால் கிடைக்கும் பொதுவான பலன்கள் இவை. இப்போது நாம் துலாம் லக்னத்தை ஒன்றாம் இடமாகக் கொண்டு ஒவ்வொரு ராசிக்குள்ளும் இவ்விரு கிரகங்களும் இணைந்து நின்றால் என்ன பலன் என்று பார்ப்போமா?
துலாம் ராசியிலேயே - அதாவது ராசிக்கு முதல் இடமான லக்னத்திலேயே லக்னாதிபதியான சுக்கிரனும், சுகாதிபதியும் பூர்வ புண்ணியாதிபதியுமான சனி பகவானும் அமர்வது விசேஷம் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், இங்கு சனி உச்சமாகிறார். இவர்களுக்கு ஜமீன்தார் போல வாழ வேண்டு மென ஆசையுண்டு. சருமத்தில் ஒவ்வாமை பிரச்னை இருந்து கொண்டேயிருக்கும். தூக்கமின்மையும் கண்களைச் சுற்றிலும் வளையமும் வரும்.
 இவர்களை இந்த சேர்க்கை புத்தி சாதுர்யமும் தைரியமும் சுறுசுறுப்பும் கொடுத்து வழிநடத்தும். நுட்பமான புத்தியும், நிபுணத்துவமும் பெற்றுத் திகழ்வார்கள். நாடாளும் யோகமும், மக்களால் மதிக்கப்படுதலும் சர்வ சாதாரணமாக நடந்தேறும். கஷ்டப்படாத ஜீவனமும், சுகமான வாழ்க்கையும் வாழ்வார்கள். சொந்த உழைப்பில் வராத எதையுமே இவர்கள் விரும்ப மாட்டார்கள்.
விருச்சிக ராசியான இரண்டாம் இடத்தில் சுக்கிரனும் சனியும் இணைந்திருந்தால் கண்வலி மற்றும் கண்ணில் ஏதேனும் ஒரு தொந்தரவு இருந்தபடியே இருக்கும். அதனால் சிறு பிரச்னை என்றாலும் கூட உடனே கவனிக்க வேண்டும். பேச்சால் ஏதேனும் ஒரு பிரச்னை வந்தபடியிருக்கும். சிறுவயதில் படிப்பு தடைபட்டு, பிறகு உயர்படிப்பு நன்றாக அமையும்.
ஐந்து வயது வரை திக்கித் திக்கிப் பேசுவார்கள். பிறகு சரியாகும். காதில் ஏதேனும் இரைச்சல் இருந்தபடி இருக்கும். வீரியத்தைவிட காரியம்தான் பெரியது என்று நினைத்து காரியமாற்றும் திறமையும் உண்டு. தாவரவியல், வனவியல் கல்வியில் சேர்ந்து வித்தியாசமாக வருவதற்கு முயற்சிப்பார்கள். எட்டாம் வகுப்பை விட பன்னிரெண்டாம் வகுப்பில்தான் மிக நன்றாக படிப்பார்கள்.
சிலருக்கு மாறுகண் அமைப்பு உண்டு. பணத்தை செலவழிப்பதில் சிக்கனம் காட்டுவார்கள். பல்வேறு மொழி குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வார்கள். தனுசு ராசியான மூன்றாம் வீட்டில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்திருந்தால் இளைய சகோதரர்களால் பெரும் உதவிகள் கிட்டும். இவர்களைப் போல எடுத்த காரியத்தை முடிப்பதற்கு இன்னொருவர் பிறந்து வரவேண்டும்.
இவர்கள் நண்பர்களிடம் எல்லா விஷயத்தையும் சொல்லிக்கொண்டு திரியக் கூடாது. இவர்கள் மக்களின் செல்வாக்கு பெற்றிருப்பார்கள். திருமணம் செய்யும்போது சரியானபடி ஜாதகத்தைப் பார்க்க வேண்டும். இந்த இரண்டு கிரகங்களும் வலிமையோடு இருக்கிறதா என்று பார்த்துச் சேர்க்க வேண்டும். இல்லையெனில், குழந்தை பிறப்பில் மிகுந்த தாமதம் ஏற்பட்டுவிடும். இவர்கள் சொந்த ஊரிலிருந்து கொஞ்சம் தள்ளியிருந்தால் நல்லது.
மகர ராசியான நான்காம் வீட்டில் சனி ஆட்சி பெறுகிறார். வாழ்வின் கடைசி வரையில் தாய்மையின் பெருமைகளைப் பரப்புவார்கள். இந்த அமைப்பில் உள்ளவர்களை இவர்களின் தாயார் மிகமிக சிரமத்துக்கிடையில் படிக்க வைத்திருப்பார். தாயார் ஜீனியஸாக இருந்து இவர்களை வழிநடத்துவார்கள். இரவு நேரங்களில் பிரயாணப்படும்போது ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும். புத்தகங்கள் எழுதுவதில் மிகுந்த ஆவலோடு ஈடுபடுவார்கள். வீடு கட்டும்போது பத்திரங்களை மிகக் கவனமாகப் பார்க்க வேண்டும்.
தன் பெயரில் வீட்டை வைத்துக் கொள்ளக்கூடாது. இவர்கள் வீட்டில் பசு வளர்க்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். வாசனைத் திரவியங்களை வாங்கிக் குவிப்பார்கள். கும்ப ராசியான ஐந்தாம் வீட்டில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்தால் ஓரளவிற்கு நல்லதே. இது பூர்வ புண்ணிய ஸ்தானமாக இருக்கிறது. முதலில் பூர்வீகச் சொத்தில் பங்கு இல்லை என்பார்கள்.
பிறகு போராடி சொத்துக்களைப் பெறுவார்கள். இவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர்களாக இருப்பார்கள். சிலருக்கு தாமதமாக குழந்தை பிறக்கும். இல்லையெனில் பிறக்கும் குழந்தை சற்றே தாமதமாகப் பேசும். கவலை வேண்டாம். வாழ்வில் ஒரு கட்டத்தில் மற்றவர்களுக்கு மந்திர உபதேசம் செய்வார்கள். மூதாதையர்களின் ஆசைகளை நிறைவேற்றுவார்கள். முற்பிறவி குறித்த நம்பிக்கைகள் இவர்களிடம் அதிகமுண்டு. அதையெல்லாம் ஆராய்வார்கள்.
கனவுத் தொல்லைகளால் அவஸ்தைப்படுவார்கள். உறக்கமின்மையும் இருக்கும். அதனால் இவர்கள் உடல்நிலையின் பொருட்டு நன்கு தூங்குவது நல்லது. மீன ராசியான ஆறாம் இடத்தில் சுக்கிரன் உச்சமாகிறார். கூடவே சனியும் இணைந்திருக்கிறார். இவர்கள் கடன் வாங்கவே கூடாது. பூர்வீகச் சொத்துக்களால் தொந்தரவு வந்து நீங்கும். இவர்கள் அதை ஒரு அளவுக்கு மேல் எதிர்பார்க்க வேண்டாம்.
சைனஸ், எலும்புத் தேய்வு, அடிக்கடி ஏற்படும் தலைவலி என்று அவஸ்தைப்படுவார்கள். வேலை செய்யும் இடத்திலும் இவரை முடக்க நினைப்பார்கள். அதனால் வேலை செய்யும் இடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மேலே மேலே முன்னேறுவதில் மட்டும் கவனம் வைத்து விமர்சனங்களைப் புறந்தள்ள வேண்டும். சொத்து சுகங்கள் இருந்தாலும் அதை அனுபவிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கும். இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிப்பதற்கு முயன்றபடி இருப்பார்கள்.
மேஷ ராசியான ஏழாம் இடத்தில் இந்த இரு கிரகங்களும் அமர்ந்தால், ஒரு பிடிவாத குணம் இருந்து கொண்டேயிருக்கும். மற்றவர்களை இவர்கள் சிரமப்படுத்துவார்கள். இதனாலேயே வாழ்க்கைத்துணையோடு ஏதேனும் பிரச்னைகள் வந்தவண்ணம் இருக்கும். வாழ்க்கைத்துணைவர் சட்டென்று தூக்கி எறிந்து பேசுபவராக இருப்பார்.
தான் சொல்வதே சரியென்று நிலைநாட்டிக் கொண்டிருப்பார். இவர்கள் பெரும்பாலும் அந்நிய தேசத்திலிருந்தால் கொஞ்சம் பிரச்னைகள் குறையும். விட்ட குறை தொட்ட குறை போல 39லிருந்து 46 வயதுக்குள் புதிய நட்புகள் ஏற்படும். எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். வாழ்க்கைத்துணைவர் கலையுணர்வு மிக்கவராக இருப்பார். அதிலும் மரபார்ந்த இசை, நாட்டியம் என்றிருப்பார். இவர்களில் சிலருக்கு உயரமான இடங்களுக்குச் செல்லும்போது மனோபயம் ஏற்படுவதுண்டு.
ரிஷப ராசியான எட்டாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் அமரும்போது கொஞ்சம் நடுநிலையான பலன்கள் கிடைக்கின்றன. செல்வமும் செல்வாக்கும் பெருகியபடி இருக்கும். ஆனால், அதேநேரம் ஊதாரித்தனமாக செல்வத்தை வாரியிறைப்பார்கள். திரைமறைவு சந்தோஷங்களை அனுபவித்தபடி இருப்பார்கள். இவர்கள் தத்துவத்தில் ஞானமுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களில் சிலர் கோயில் ஓவியங்களை வரைவதில் நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். கடுங்கோபம் கொள்ளுதலை இவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்.
மிதுன ராசியான ஒன்பதாவது இடத்தில் இந்த சேர்க்கை அமைந்தால், எவ்வளவு சம்பாதித்தாலும் உருப்படியாக எதுவும் செய்து கொள்ளாதவர்களாக இருப்பார்கள். தந்தையே இவர்களுக்கு நண்பர். அவரே இவரின் வளர்ச்சியை மறைமுகமாக தடை செய்பவராவார். அதாவது, தன்னுடைய இஷ்டத்திற்கு வளைக்கிறார் என்கிற குற்றச்சாட்டை வைப்பார். உட்கார்ந்து சம்பாதிப்போம் என்று நிம்மதியாக இருக்க முடியாது. அதேபோல சேமிப்புகளும் இவர்களிடத்தில் தங்காது.
மத்திம வயதுக்கு மேல் தர்ம ஸ்தாபனங்களில் ஈடுபட்டோ, அல்லது தானே ஒன்றைத் தொடங்கியோ மற்றவர்களுக்கு உதவுவார்கள். கடக ராசியான பத்தாம் இடத்தில் சுக்கிரனும் சனியும் அமர்ந்தால் வேலை மாறிக் கொண்டே இருப்பார்கள். ஒரு தொழிலில் ஈடுபட்டு முன்னேறாமல் இரண்டு, மூன்று என்று செய்து சிக்கிக் கொள்வார்கள். ஆனால், அனுபவத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்களாக இருப்பார்கள். அடிக்கடி தனிமையில் எங்கேயாவது சென்று விட்டு வருவார்கள்.
மீன், இறால், கோழிப்பண்ணை, உரம் போன்ற தொழில்கள் செய்தால் பெரும் முன்னேற்றம் இருக்கும். பெரிய தலைவர்களின் மூளையாக செயல்படுவார்கள். கலைத்துறையில் டைரக்டர், கலை இயக்குனர் என்று நுழைந்து சாதிப்பார்கள். ஐ.ஏ.எஸ்., வங்கி அதிகாரி, டாக்டர், கெமிக்கல் எஞ்சினியர் போன்ற துறைகளில் தனித்துவமாக செயல்படுவார்கள். சனி பத்தில் இருந்தால் காலதாமதமான அங்கீகாரமே கிடைக்கும். அதற்குரிய மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது நல்லது.
பதினோராம் இடமான சிம்மத்தில் இவ்விரு கிரகங்களும் அமைவதென்பது சுமார்தான். ஏனெனில், சூரியனுடைய இடத்தில் சுக்கிரனும் சனியும் கொஞ்சம் மங்கித்தான் பலன்களை அளிப்பார்கள். மூத்த சகோதரரே கொஞ்சம் பகையுணர்வோடு செயல்படுவார். மூத்த பிள்ளைகளோடு சண்டை வந்து மறைந்தபடி இருக்கும். எவ்வளவு வருமானம் வந்தாலும் செலவும் இருந்தபடியே இருக்கும்.
எல்லாவற்றையும் தாண்டி நிறைய புலம்பியபடி இருப்பார்கள். கணுக்கால்களில் திடீரென்று வலி வந்தால் கவனம் தேவை. இவர்களின் உழைப்பில் வராத ஏதேனும் சொத்து நிச்சயம் புதையல் போல் கிடைக்கும். கப்பல் வழிப் பயணத்தையே பெரிதும் விரும்புவார்கள். கன்னி ராசியான பன்னிரெண்டாம் இடத்தில் இந்த இரு கிரகங்களும் இணைந்து மறைவதென்பது அவ்வளவு நல்லதல்ல.
ஏதாவது ஒரு கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகிக் கிடப்பார்கள். சின்னச் சின்ன விஷயங்கள் கூட தள்ளிப்போய்த்தான் முடியும். எப்போதும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். மத்திம வயதுக்கு மேல் தீவிர ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். சரியான தூக்கமே இருக்காது. இல்லாத நோயையெல்லாம் தனக்கு இருப்பதுபோல நினைத்து பாவித்துக் கொள்வார்கள். சனியும் சுக்கிரனும் சேர்ந்த இந்த அமைப்பானது உலகிலுள்ள தவறையெல்லாம் தங்கள் பார்வையில் சரி என்று வாதிடும் குணத்தைக் கொடுக்கும்.
அதனால், ‘‘எதிலுமே சரி, தவறு என்று பார்க்காமல் விஷயங்களின் சூழல் மட்டுமே முக்கியம்’’ என்பார்கள். நிம்மதியாக இருக்கிறோமா என்பதே இவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வியாகும். இருப்பதை விட்டுவிட்டு பறப்பதை நோக்கி ஓடும் குணம் இருக்கும். கடுமையாக உழைப்பார்கள். ஆனால், சுற்றியுள்ளோரை காயப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இதனால் நல்லோரை இழக்கும் சூழலும் வரும்.
இவர்கள் கொஞ்சம் கிராம தெய்வங்களை வணங்குவது மிகவும் நல்லது. அதிலும் ஐயனார் போன்ற தெய்வங்களை வணங்குவதால் நன்மை பெறுவார்கள். எனவே, இவர்கள் சென்று தரிசிக்க வேண்டிய தலமே தேரிக்குடியிருப்பாகும். இங்குள்ள ஐயனாருக்கு கற்குவேல் ஐயனார் என்று பெயர். இந்தக் கோயிலுக்கு செல்லும் முன்பே நம்மை மிகப் பெரிய வளைவு ஒன்று வரவேற்கும். கோயிலுக்கு இடது புறம் திரும்பினால் அங்கே பட்டவராயன், பொம்மக்கா, முன்னடிசாமி, முன்னடிதேவி, பலவேசக்காரன், வலதுபுறம் புலமாடியம்மன், புலமாடன், கள்ளர்சாமி உட்பட பல தெய்வங்கள் உள்ளனர்.
கிழக்குப் பார்த்த சந்நதியில் பூரண, பொற்கமல தேவியருடன் அமர்ந்திருக்கிறார் கற்குவேல் ஐயனார். கோயிலின் சுற்றுப் பிரகாரத்தில் உதிரமாடன், மாலையம்மன், மாலை சூடும் பெருமாள், வன்னிய ராஜா, வன்னச்சி, இருளப்பன், முன்னடிசாமி, முன்னடிதேவி, சுடலைமாடன், சொல்கேளா வீரன், கள்ளர்சாமி, பேச்சியம்மன், ராக்காயி, உச்சிமாகாளி, துப்பாக்கிமாடன், பெரியசாமி என எண்ணிலடங்கா துணை தெய்வங்களும் குடிகொண்டிருக்கின்றனர்.
திருச்செந்தூர்-திருநெல்வேலி நெடுஞ்சாலையிலிருந்து ஐந்து கி.மீ. தூரத்தில் தெற்கு நோக்கி காயாமொழி கிளைச் சாலை பிரிகிறது. அதில் 8 கி.மீ. தூரம் சென்றால் தேரிக்குடியிருப்பை அடையலாம். திருச்செந்தூரில் இருந்து ஆட்டோ மற்றும் மினி பஸ் வசதி உண்டு. குரும்பூர்-பணிக்க நாடார் குடியிருப்பு வழியாகவும் தேரிக்குடியிருப்பு செல்ல சாலை வசதி உள்ளது.
(கிரகங்கள் சுழலும்...)
ஓவியம்: மணியம் செல்வன்
|