சைத்தான் விமர்சனம்



போதை மருந்து கும்பலால் பாதிக்கப்பட்ட சாஃப்ட்வேர் எஞ்சினியர், தனக்கு நேர்ந்த கொடுமைக்குக் காரணமானவர்களைப் பழிக்குப்பழி வாங்கப் புறப்படுவதே ‘சைத்தான்’. அழகான குடும்பம், அருமையான ஆபீஸ், புதிதாகத் திருமணம் செய்துகொண்ட சூழல்... வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டிய விஜய் ஆண்டனிக்கு திடீர் சிக்கல். மண்டைக்குள்ளிலிருந்து ஒரு குரல் அவருக்குக் கட்டளை இடுகிறது. அதிகாரம் செய்கிறது. விபரீதமாக நடக்கச் சொல்கிறது.

அப்படித் தூண்டிய போதை கும்பலை விஜய் ஆண்டனி கண்டுபிடித்துப் பழி வாங்கினாரா என்பதே மீதிக் கதை. முற்றிலும் புதிய கதைக்களத்தில், வாழ்க்கை சுழற்றிப் போட்டு வேறொரு இடத்திலிருந்து ஆரம்பிக்கிற பதற்றத்தை, அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதையே ‘திக் திடுக்’ திரைப்படம் ஆக்கியிருக்கிறார் புதுமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. சுஜாதாவின் ‘ஆ’ கதையின் தழுவலில், முடிந்த மட்டும் ஆவன செய்திருக்கிறார் இயக்குநர்.

முதலில் அப்பாவியாகவும், பிறகு தனக்கு நேர்ந்ததைப் புரிந்துகொண்டு தீப்பிடிக்கும் திரைக்கதையிலும் செம ஸ்கெட்ச் அடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. புதிதாகத் திருமணம் செய்துகொண்ட பெண்ணுடன் இருக்க முடியாமல் தலைக்குள் குரல் கேட்பது, அதனால் குழம்புவது, மனைவிக்கு அதைத் தெரிய விடாமல் மறைக்க முயல்வது என ஆல் ரவுண்ட் அசத்தல். கடைசி ரவுண்டில் மட்டுமே அதிரடியில் இறங்கும் விஜய் ஆண்டனி ஆஹா அண்டர்ப்ளே.

இந்தத் தடவை புதுக்கதையில் தன்னை பரிசோதனையாகப் பொருத்திக் கொண்டதும் அழகு. அவரின் ‘மூவ்’களை முறியடிக்கும் எதிரியின் மதியூகமும் புது ரகம். சாந்தமான, இரக்கமான, தீர்க்கமான ‘தெளிவான தேவதை’யாக தோற்றம் கொள்வதில் ஜெயிக்கிறார் அருந்ததி நாயர். அந்தக் கன்னம்... கிள்ளலாம் போலிருக்கிறது. அந்த அருந்ததி படத்தில் அடுத்த முகம் காட்டும்போது நமக்கே பதற்றம். காதலைக் காட்டுகிற அந்தக் கண்களே பிறகு ஒரு சமயத்தில் மாறுகிற விதம்... ஆசம்.

விஜய் ஆண்டனி பழைய காலத்தை நினைவு கூர்வது, அதற்கான விடை தேடிப் புறப்பட்டுப் போவது எல்லாம் சரியான த்ரில்லர் வகையறா. ஒய்.ஜி.மகேந்திரா, கிட்டி என அனுபவக்காரர்களின் நடிப்பு படத்திற்கு பாந்தமாக உதவுகிறது. அலட்டல், மிரட்டல் வில்லன் கடைசியில் காமெடியனாக மாறுவது காமெடி. விஜய் ஆண்டனியின் தோள் மீது உட்கார்ந்து பயணிக்கும் உணர்வைக் கடத்தியிருக்கிற பிரதீப் காளிபுரயத் கேமரா நேர்த்தி.

விறுவிறு திருப்பத்தை எதிர்பார்க்கும் தருணமெல்லாம் தடக்கென முளைக்கிறது பாடல்கள். ஆனாலும் பின்னணியில் திகில் ட்விஸ்ட் ஏற்றுகிறது விஜய் ஆண்டனியின் இசை. செம பில்டப்போடு ஆரம்பமாகும் முன்பாதி காரணமாக அடுத்த பகுதியும் அந்த விதமே இருக்கும் என எதிர்பார்த்தால் கொஞ்சமே வெடிக்கிறது பின்பாதி.

எந்த நிமிடத்தையும் வீணாக்காத முதல் பாதி திரைக்கதை, பின்பகுதியில் ஏன் அத்தனை தடுமாறுகிறது? முன்ஜென்ம ஞாபகம், போதை மருந்து கும்பல் என இரட்டைக் குதிரை சவாரிதான் காரணமா? ஏதாவது ஒன்றில் கண் வைத்திருந்தால் இன்னும் தெளிவு வந்திருக்குமோ? பின்பகுதி குழப்பத்தைத் தவிர்த்து, இன்னும் பவர்ஃபுல் ஃப்ளாஷ்பேக் காட்டியிருக்கலாம். ட்விஸ்ட், ஆக்‌ஷன், த்ரில்லரில் இந்த ‘சைத்தான்’ கவர்கிறான்.

- குங்குமம் விமர்சனக்குழு