குங்குமம் டாக்கிஸ்
* தெலுங்கில் நானியுடன், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘நேனு லோக்கல்’ ஷூட்டிங் முடியும் தருணத்தில் இருக்கிறது. அந்தப் படத்தை முடிக்கும் முன்பே தெலுங்கில் பவன் கல்யாணுடன் அடுத்து ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார் கீர்த்தி. தெலுங்கிலும் பிஸி பொண்ணு!
 * ஐஸ்வர்யா தனுஷ் எழுதியிருக்கும் ‘Standing on an apple box’ புத்தகத்துக்கு பாலிவுட்டிலும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. ‘‘ஐஸ்வர்யாவின் புத்தகத்தைப் படிக்க ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறேன். அந்த ஆப்பிள் என் கைகளில் தவழ்வதற்காகக் காத்திருக்கிறேன்’’ என ட்வீட்டியிருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா.
* ப்ரியங்கா சோப்ரா தன்னைத் திட்டியதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் ரன்வீர் சிங். இருவரும் இணைந்து இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்கள். ‘‘ஆரம்ப காலங்களில் நான் முரட்டுத்தனமாக இருந்தேன். யாருடன் எப்படிப் பழக வேண்டும் எனத் தெரியாது. நான் தவறாக நடந்துகொள்வதாக பலமுறை ப்ரியங்கா என்னைத் திட்டியிருக்கிறார். ஆனாலும் அவர்தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகை’’ என்றிருக்கிறார் ரன் வீர் சிங்.
 * ஷில்பா ஷெட்டியின் இலக்கிய அறியாமையை சோஷியல் மீடியாக்கள் கிண்டல் செய்து மகிழ்கின்றன. ‘‘குழந்தைகள் படிப்பதற்கு நல்ல புத்தகங்களை பரிந்துரை செய்யுங்கள்’’ என நிருபர்கள் கேட்டபோது, ‘‘ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘அனிமல் ஃபார்ம்’ படிக்க வேண்டும். விலங்குகளிடம் அன்பும் அக்கறையும் காட்டுவதை அதில் கற்றுக்கொள்ளலாம்’’ என்றார். உண்மையில் அது சீரியஸான அரசியல் நாவல். ‘‘என்ன செய்வது... எனக்கு எழுத்தாளர்களின் பெயர்கள்தான் தெரியும், புத்தகங்கள் படித்ததில்லை. இதுவும் கடந்து போகும்’’ என சமாளித்திருக்கிறார் ஷில்பா.
* புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் ‘விக்ரம் வேதா’வில் நடித்து வரும் மாதவன், அடுத்து ‘வாகை சூடவா’ சற்குணம் இயக்கத்தில் நடிக்கிறார். தமிழில் அடுத்த ஆண்டு நாலு படங்களாவது ரிலீஸ் ஆகிவிட வேண்டும் என விரும்புகிறார் மாதவன்.
* எப்போது வரலட்சுமியைப் பற்றி பேசினாலும் உற்சாகமாகப் பேசுவார் விஷால். இப்போது அவரைப் பற்றி யாரும் பேசினாலே வேறு விஷயத்துக்குப் பேச்சை மாற்றுகிறார்.
* ‘2.0’ படத்தில் அக்ஷய் குமார் ஒரு ஆராய்ச்சி செய்யும்போது ஏற்படுகிற தவறினால் பறவையாக மாறிவிடுகிறார். இதற்காக மெனக்கெட்டு காட்சிகளைப் படமாக்கி இருக்கிறார்கள். இதுவும் படத்தின் பெரிய ஹைலைட்டாம். பறவைகளை வாடகைக்குப் பிடிக்கவே பல லட்சம் செலவானதாம்.
* இனி அமலா பாலை ‘சின்ட்ரெல்லா’, ‘குயின்’ என அழைக்கப்போகிறார்கள். தமிழில் விஷ்ணு ஜோடியாக அமலா பால் நடிக்கும் படத்துக்கு ‘சின்ட்ரெல்லா’ என டைட்டில் வைத்திருக்கிறார்கள். இந்தியில் கங்கனா ரணாவத் நடித்த ‘குயின்’ மலையாள ரீமேக்கில் அமலா பால்தான் ராணி.
* நடிகை ராதா கேரளாவில் நடத்தி வரும் ‘உதய் சமுத்ரா’ ஹோட்டலுக்கு சிறந்த கடற்கரை ஹோட்டலுக்கான விருது கிடைத்திருக்கிறது. கொழும்பில் நடைபெற்ற 2016ம் ஆண்டுக்கான ‘சவுத் ஏஷியா டிராவல் அவார்ட்’ விழாவில் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
* ‘டங்கல்’ படத்துக்காக 25 கிலோ எடை கூடி தொப்பை போட்டதையும் பிறகு இளம் வயது கேரக்டருக்காக இளைத்ததையும் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் அமீர் கான். எடை கூடி தொப்பை விழுந்தபோது மூச்சு விடவே சிரமமாக இருந்ததாகவும், குனிந்து ஷூ லேஸ் கட்ட முடியவில்லை என்றும் கூறுகிறார் அமீர்.
* சமீபத்தில் விஜய் படத்துக்காக நயன்தாராவை அணுக, அதை அவர் தவிர்த்துவிட்டார். ‘‘இப்போது எனக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மட்டுமே நடிக்கப் போகிறேன். ஸாரி’’ என சொல்லிவிட்டாராம்.
* ‘பாகுபலி’ இந்தியில் ஓடியிருந்தாலும் தமன்னாவை அவர்கள் இன்னும் பெரிய ஹீரோயினாக பார்க்கவில்லை போலிருக்கிறது. பாலிவுட் நடிகர் கபில் ஷர்மாவின் படத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்த தமன்னா இப்போது அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என்கிறது மும்பை வட்டாரம்.
* செல்வராகவன், சந்தானம் காம்பினேஷனில் உருவாகி வரும் ரொமான்டிக் காமெடி படத்துக்கு ‘மன்னவன் வந்தானடி’ என டைட்டில் வைத்திருக்கிறார்கள். ஹீரோயினாக சாய் பல்லவி, ரெஜினாவிடம் பேசி வருகிறார்கள்.
* ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ படத்துக்காக மூன்று கேரக்டரில் வருகிறார் சிம்பு. அதற்காக அவருக்கு ஜோடிகளாக ஸ்ரேயா, தமன்னா நடித்துவிட்டார்கள். மூன்றாவதாக ஒரு புதுமுகத்தை நடிக்க வைக்கப் போகிறார்கள்.
* ரஜினியும், விஜய்யும் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியிருக்கிறார்கள். சினிமா தாண்டி பொதுவான விஷயங்கள் பற்றியும் பேச்சு நீடித்ததாம்.
|