நியூஸ் வே
* ‘உலகின் கவர்ச்சியான ஆண்’ என்ற பட்டத்துக்குச் சொந்தக்காரர் இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து ஆட்டக்காரர் டேவிட் பெக்காம். உடலில் விதவிதமாக டாட்டூகளை வரைந்துகொள்வதில் பெருங்காதல் கொண்டவர். தனக்குப் பிடித்தவர்களின் பெயர்கள், வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களையே டாட்டூகளாக வரைந்திருந்தார். இப்போது, ‘யுனிசெஃப்’ அமைப்புக்காக ‘குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும்’ நோக்கத்தில் டாட்டூகளை வரைந்துள்ளார்.
 ‘‘ஐந்து நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உலகின் ஏதோவொரு மூலையில் வன்முறையை எதிர்கொள்கிறது. இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகின்றனர். சில குழந்தைகள் இறந்தும் விடுகின்றனர். இதை நாம் தடுக்க வேண்டும்’’ என்று சொல்கிறார் நான்கு குழந்தைகளுக்குத் தந்தையாகிய பெக்காம்!
* ‘‘கதைசொல்லிகளை இந்தியர்கள் அதிகம் நேசிக்கிறார்கள். இங்கு மிகப்பெரிய வாசகர் வட்டம் இருக்கிறது. இருநூறு முதல் 250 மில்லியன் மிடில் கிளாஸ் வாசகர்கள் இருக்கிறார்கள். இது அமெரிக்க வாசகர்களைவிட அதிகம். அதனால், இந்தியா அற்புதமான சந்தையாக விளங்குகிறது’’ என புளகாங்கிதம் அடைந்திருக்கிறார் சமீபத்தில் தனது புத்தக புரொமோஷனுக்காக இந்தியா வந்திருந்த புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர்!
 * இந்தியாவுக்கு இன்னொரு அழகு கிரீடம் கிடைச்சாச்சு! ‘மிஸ் சூப்ராநேஷனல்’ அழகிப் போட்டியில் 80 நாட்டு போட்டியாளர்களோடு மோதி கிரீடம் வென்றிருக்கிறார், இந்தியாவின் நிதி ஷெட்டி. போலந்து நாட்டு அமைப்பு ஒன்றினால் நடத்தப்படும் இந்த அழகிப்போட்டியில் வெல்லும் இரண்டாவது இந்தியர் ஸ்ரீநிதி. இதற்குமுன் இந்தப் பட்டத்தை வென்ற இந்தியப்பெண் ஆஷா பட்! பெங்களூருவைச் சேர்ந்த 24 வயது ஸ்ரீநிதி, கம்ப்யூட்டர் எஞ்சினியராக இருந்து மாடலிங் துறையில் நுழைந்தவர்.
‘‘உண்மையில் வெற்றி என்பது நம் கையில் இல்லை. எதையும் எதிர்பார்க்காமல் கடினமாக உழைத்தேன். அதற்கான பலன் கிடைத்திருக்கிறது. இந்த மாதிரியான ஒரு போட்டியில் கலந்துகொள்வதைப்பற்றி அடிக்கடி கனவு கண்டிருக்கிறேன். இப்போது என் கனவு நிஜமாகியிருக்கிறது. நான் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என நெகிழ்கிறார் நிதி ஷெட்டி. சீக்கிரமே சினிமாவில் பார்க்க முடியும் இந்த அழகியை!
* இப்போதெல்லாம் பாரதிய ஜனதா பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் எங்கு நடந்தாலும், டெல்லியிலிருந்து சில வியாபாரிகள் வந்து கடை போட்டுவிடுகிறார்கள். மோடி அணிவது போன்ற ஜாக்கெட்டை வெவ்வேறு வண்ணங்களில் விரித்து கடை போடுகிறார்கள். ஒன்று எடுத்தால் 300 ரூபாய், இரண்டு எடுத்தால் 500 ரூபாய் என விற்பனை சக்கை போடு போடுகிறது.
* ‘‘பிரதமர் நரேந்திர மோடி இப்போது ஒரு ஆபத்தான புலியில் ஏறி சவாரி செய்கிறார். இது அவரது கூட்டணிக் கட்சிகளே அவரை விட்டு விலகி ஓடும் அளவுக்கு ஆபத்தான பயணம். எனினும் மக்கள் ஆதரவு இதற்கு உள்ளது. மக்கள் ஆதரிக்கும் ஒரு விஷயத்தை நாமும் ஆதரிக்க வேண்டும்’’ - கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மோடியின் முடிவை எல்லா எதிர்க்கட்சிகளும் எதிர்க்கும்போது, உறுதியாக ஆதரிக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதற்குச் சொன்ன விளக்கம் இது.
* வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அடுத்த வாரம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இருக்கலாம் எனப் பரபரக்கின்றன தகவல்கள். சர்க்கரை நோய் மற்றும் ஹார்மோன் பிரச்னைக்காக பல வருடங்களாக டெல்லி எய்ம்ஸில் சிகிச்சை எடுத்து வந்தார் சுஷ்மா. சமீபத்தில் அவரது சிறுநீரகங்கள் பழுதாக, ஆறு மாதங்களாக டயாலிசிஸ் செய்து வந்தார்.
ஏற்கனவே, சுஷ்மா தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி தெரிவித்து, ‘கடவுள் ஆசீர்வதிப்பார்’ எனக் குறிப்பிட்டும் இருந்தார். ‘‘இப்போது மாற்று அறுவை சிகிச்சைக்கான நடைமுறைகள் எல்லாம் முடிந்துவிட்டன. அவருக்கு நிறைய பேர் சிறுநீரக தானம் கொடுக்க முன்வந்தனர். நாங்கள் அவரது உறவினர் சிறுநீரகத்தை ஓகே செய்திருக்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.
* பணமில்லாத பரிவர்த்தனை செய்யும் முதல் கிராமம் எனப் பெயரெடுத்திருக்கிறது மகாராஷ்டிர மாநிலம் தானேவுக்கு அருகிலுள்ள ‘தசாய்’! சுமார் ஐயாயிரம் பேர் உள்ள இந்தக் குக்கிராமத்தில் முடிவெட்டுதல் தொடங்கி மளிகை சாமான்கள் வாங்குவது வரை அனைத்து பரிவர்த்தனைகளும் கார்டு மூலமே நடக்கின்றன. சுற்றிலும் உள்ள சிறு கிராமங்களுக்கு தசாய்தான் வணிகத்தளம். இதற்காக உள்ளூர் தன்னார்வத் தொண்டு நிறுவன உதவியுடன் வணிகர்களுக்கு மொத்தம் ‘150 பாயின்ட் ஆஃப் சேல்’ மெஷின்களை பாங்க் ஆஃப் பரோடா வங்கி வழங்கியிருக்கிறது.
* மணிப்பூரில் ராணுவத்துக்கு எல்லையற்ற அதிகாரமளிக்கும் சட்டத்தை எதிர்த்து பல ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளா, இப்போது அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியோடு இணைந்து அவர் மணிப்பூர் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறார் என தகவல்கள் பரவின. ஆனால் மணிப்பூர் தேர்தலில் கெஜ்ரிவால் ஆர்வம் காட்டவில்லை. அவர் ஆட்சி புரியும் டெல்லிக்கும், ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கும் பஞ்சாப்புக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார். எனவே ஷர்மிளா தனித்துப் போட்டியிடத் தீர்மானித்திருக்கிறார்.
* ‘‘என்னுடைய தந்தையின் பெயரை அறிந்தவர்கள் என் இசை நிகழ்ச்சிக்கு வரும்போது அவரைப் போலவே என்னிடமும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நான் யாரென்று எனக்கு மட்டுமே தெரியும். நான் செய்யும் ஒவ்வொரு வேலையும் எனக்குள்ளிருந்து எதிரொலிப்பவை. என் உள்ளத்திலிருந்து வருபவை’’ என நெகிழ்ச்சி பொங்கத் தெரிவித்திருக்கிறார் சமீபத்தில் சென்னை வந்திருந்த பிரபல சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கரின் மகள் அனுஷ்கா சங்கர்.
* நியூசிலாந்தில் எட்டு ஆண்டுகள் பிரதமராக இருந்த ஜான் கே, திடீரென்று தேசியக் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “எனது வாழ்நாளில் எடுத்திருக்கும் கடினமான முடிவு இதுதான். நான் அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. அதிக நேரம் குடும்பத்தினருடன் செலவிடப்போகிறேன். என் மனைவியும் இதைத்தான் விரும்புகிறார்’’ என்று அவர் தெரிவித்திருக்கிறார். இவரின் உணர்வுபூர்வமான இந்த முடிவுக்கு சமூக வலைத்தளங்களில் பரவலாக வாழ்த்துகள் குவிகின்றன.
|