ஒரு கேள்வி...? ஒரு பதில்..!
அவுட்டோர் அவசரம்... ஷூட்டிங் பரபரப்பு... டப்பிங் என படு ஸ்பீடில் இருக்கிற நட்சத்திரங்களிடம், ‘ஒரே ஒரு கேள்வி... ப்ளீஸ்’ என்றால் சந்தோஷமாக பதில் சொல்வார்கள். அடுத்த பெரிய பேட்டிக்கு அதுதான் அச்சாரம். காஷ்மீருக்கு புறப்பட்டுக்கொண்டிருந்த கார்த்தி, சென்னை வந்திருந்த சமந்தா, தனுஷ் ஷூட்டிங்கில் இருந்த கௌதம் மேனன், சந்தானத்தோடு ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த விவேக்... என அத்தனை பேரையும் வளைத்துப் பிடித்தது இவ்விதமே!
 கௌதம் மேனன் ஹேப்பி அண்ணாச்சி!
‘‘செல்வாவோட ‘நெஞ்சம் மறப்பதில்லை’ உருவாகக் காரணம் நீங்கதானா?’’ ‘‘நான் அந்தப் படத்தோட புரொடியூசர் கிடையாது. அந்த ப்ராஜெக்ட்டை நான் வடிவமைச்சேன். அவ்வளவுதான். அவரோட வொர்க் பண்ண ரொம்ப நாளாகவே ஆசை. ஒரு ஐடியா சொன்னார், அது பிடிச்சிருந்தது. அவரோட ஸ்டைல்ல எப்பவும் ஒரு இன் டெப்த் இருக்கும். எஸ்.ஜே.சூர்யா பண்ணினா நல்லா இருக்கும்னு அவரையும் ஃபிக்ஸ் பண்ணிக் கொடுத்துட்டு வந்துட்டேன். மத்தபடி அது அவர் படம். இன்னும் நான் ஒரு காட்சிகூட பார்க்கல. டீஸர், ட்ரெய்லர் எல்லாம் செம ஹிட் அடிச்சதுல நான் ஹேப்பி!’’
சமந்தா ரிப்பீட் கெமிஸ்ட்ரி!
‘‘விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், ஜீவானு யாரோட நடிச்சாலும் அவங்களுக்கு பொருத்தமான ஜோடியாவே இருக்கீங்க...’’ ‘‘நிஜமாவா! ஆனா நான் ஹீரோக்களை பார்த்து ஒரு படத்தை செலக்ட் பண்றதே இல்லை, தெரியுமா! இயக்குநரின் திறமையைத்தான் முதல்ல பார்க்குறேன். அதனாலதான் சில ஹீரோக்களோட மறுபடியும் மறுபடியும் நடிச்சிடுறேன். அதே மாதிரி என்னோட ஃப்ரெண்ட்ஸுங்க முக்கியம். அவங்களுக்காக சின்ன ரோல்னாலும் நடிச்சுக் கொடுத்துடுவேன். அப்போ நான் ஹீரோயின்னு பார்க்குறதில்ல. எனக்கு அவங்க நட்பு வேணும். ‘பெங்களூர் டேஸ்’ல நடிச்சது கூட அப்படித்தான். இப்ப இருக்கற சினிமால ஒருத்தருக்கொருத்தர் சப்போர்ட் வேண்டியிருக்கு. நல்ல விஷயம்தானே!’’
 கார்த்தியின் ஸ்லிம் சீக்ரெட்!
‘‘கார்த்தி, ஸ்லிம் கார்த்தியா மாறினது எப்படி?’’ ‘‘மணிரத்னம் சாரோட அசிஸ்டென்ட் டைரக்டரா வொர்க் பண்ணியிருக்கேன். அப்ப நடிக்கணும்னு நினைக்கவே இல்லை. இப்ப அவரே ‘காற்று வெளியிடை’ படத்துக்காக கேட்டார். உடனே சம்மதிச்சேன். அவர் சொன்ன கண்டிஷனில் ஒண்ணு, ‘இப்ப நான் எதிரே பார்க்கற கார்த்தியை நிறைய பேர் பார்த்துட்டாங்க. அதனால எனக்கு வேற லுக் வேணும்’னார். உடனே உடம்பை ஸ்லிம் பண்றதுக்கான வேலையில இறங்கிட்டேன். வெயிட் குறைக்கறது சாதாரணமானது இல்ல.
நிறைய அக்கறை எடுத்துக்கணும். தினமும் ரெண்டு முறை ஜிம்ல பலியா கிடக்கறேன். கடுமையான டயட் வேற. ரைஸ், சப்பாத்தி ரெண்டையும் கனவிலும் நினைக்கக் கூடாது. எல்லாமே ஜூஸ்தான். இதனால் லிவர், கிட்னி எல்லாம் ரொம்ப க்ளீன் ஆகிடும். சாயங்காலம் வொர்க் அவுட் முடிஞ்சதும் லைட்டா கொஞ்சம் மயக்கம் வரும். அதை சமாளிச்சிட்டா வேற எதுவும் இல்ல. உடம்பு பூ மாதிரி லேசா ஆகணும்னா நீங்களும் எங்கூட ஜிம்முக்கு வாங்க பிரதர்.’’
விஜய் கூட விவேக் எப்போ?
‘‘ஒரு காலத்தில விஜய், அஜித் படங்கள்ல நீங்கதான் மெயின்... இப்ப..?’’ ‘‘நான் எப்பவும் ரெடி பாஸ். நாங்க சேர்ந்து நடிச்சதெல்லாம் ஹிட்டுதான். அஜித் கூட கடைசியா ‘என்னை அறிந்தால்’ல நடிச்சேன். விஜய் கூட கடைசியா நடிச்ச படம், ‘ஆதி’. அவருக்கு என் காமெடி பிடிக்கும். ‘திருமலை’யில ‘டேக் டைவர்ஷன்’ காமெடி அவருக்கு எப்பவும் ஃபேவரிட். அவரோட மறுபடியும் நடிக்க சந்தர்ப்பம் வரல.
இப்போ எதுக்காக இதைச் சொல்றேன்னா... ‘சந்தானம் படத்துல நடிக்க கேட்டால் நடிப்பீங்களா?’னு ‘குங்குமம்’ பேட்டியில கேட்டிருந்தாங்க. ‘நான் ஒரு தொழில் முறை நடிகன். யார் கூப்பிட்டாலும் போய் நடிப்பேன்’னு சொல்லியிருந்தேன். அந்த முகூர்த்தம் பலிச்சு சந்தானம் கூட நடிக்கறேன். அதே மாதிரி இந்த சென்டிமென்ட்டும் வொர்க் ஆகி மறுபடியும் விஜய் படத்துல கமிட் ஆனா சந்தோஷம்தான்..!’’
- மை.பாரதிராஜா
|