உலகின் முதல் கறுப்பு பாதிரியார்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
         டலூர் ஆறுமுகம் பிள்ளை பற்றி நம்மைவிட இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மன் நாடுகளில் நிறைய தெரிந்திருக்கிறது. ஜெர்மனியின் ஹல்லே பல்கலைக்கழகத்திலும், டென்மார்க் ராயல் லைப்ரரியிலும், லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியிலும் ஆறுமுகம் பிள்ளை எழுதிய கடிதம் முதல் உடுத்திய உடை, அணிந்திருந்த செருப்பு வரை காட்சியாக்கிப் போற்றுகிறார்கள். அகிலம் போற்றும் அளவுக்கு அப்படியென்ன செய்தார் ஆறுமுகம் பிள்ளை?

ஆறுமுகம் பிள்ளைதான் உலகின் முதல் ஐரோப்பியர் அல்லாத பாதிரியார். ஐரோப்பியரே கோலோச்சிக் கொண்டிருந்த கிறிஸ்தவ மதபீடத்தில் சரிக்குச் சமமாக அமர்ந்த முதல் கறுப்பு மனிதன்!

கி.பி. 1700... இந்தியாவை அந்நியர்கள் போட்டிபோட்டு ஆளுமை செய்த காலம். தரங்கம்பாடியை வளைத்திருந்த டச்சுக்காரர்கள், பிராட்டஸ்டன்ட் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள். சமயத்தைப் பரப்பி ஊழியம் செய்வதற்காக 1706ல் இந்தியா வந்தார் சீகன்பால்கு. அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்திய சீகன்பால்கு, ‘நிருபன்’ என்ற செய்தி இதழையும் நடத்தினார். தமிழ்ப் பாடநூல்களை அச்சிட்டு, விளிம்புநிலை மக்களைத் தேடிப்போய் கல்வி வழங்கும் பணியிலும் ஈடுபட்டார்.

இக்காலகட்டத்தில் ஆறுமுகத்துக்கு 8 வயது. ஆறுமுகத்தின் தந்தை சொக்கநாதப் பிள்ளை, அம்மா, நல்லத்தாய். விவசாயக் குடும்பம். சைவ வேளாளர் சமூகம்.  

1717ல் பிரிட்டிஷ் கவர்னர் ஜோசப் காலெட், முதன்முதலில் தமிழ்ப் பள்ளிக்கூடத்தை கடலூரில் தொடங்கினார். பள்ளிக்கூடத்துக்கு எதிரில்தான் ஆறுமுகத்தின் வீடு. சீகன்பால்குவின் நிர்வாகத்தில் அப்பள்ளி இயங்கியது. அங்கு படித்த ஆறுமுகத்தின் துறுதுறுப்பும் ஆர்வமும் ஆசிரியர் சவரிமுத்துவுக்கு வித்தியாசமாகப்பட்டது. சீகன்பால்குவிடம் இதைச் சொன்னார்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
முதல் பார்வையிலேயே ஆறுமுகத்தின் முகத்தில் தெரிந்த ஒளியை இனம்கண்டார் சீகன்பால்கு.

 தனிக்கவனம் எடுத்து அவரைப் படிக்கவைத்தார். ஆறுமுகம் பல மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். கிறிஸ்தவ நூல்களைப் படித்ததாலும், சீகன் பால்குவின் பிரசங்கங்களைக் கேட்டதாலும் ஆறுமுகத்துக்கு அம்மதத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. 18 வயதில் கிறிஸ்தவத்தைத் தழுவிய ஆறுமுகத்துக்கு, ‘ஆரோன்’ என்று பெயரிட்டார் சீகன்பால்கு. 

1718ல், தரங்கம்பாடியில் முதல் இறையியல் கல்லூரியைத் தொடங்கினார் சீகன்பால்கு. ஆரோன் உள்பட 8 பேர் அதில் படித்தனர். அந்நேரத்தில், இன்னும் சில ஊழியக்காரர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பத் தீர்மானித்தது பிராட்டஸ்டன்ட் குருபீடம். சீகன்பால்கு, ‘தமிழ்நாட்டில் இருந்தே ஒருவரை பாதிரியாராகத் தேர்வு செய்யலாம்’ என்றார். குருபீடம் அதை ஏற்றுக்கொள்ள, அதற்கான வாக்கெடுப்பு தரங்கம்பாடி நியூஜெருசலேம் சர்ச்சில் நடந்தது. ஆரோன், தியாகு, சவரிமுத்து ஆசிரியர் ஆகிய மூவரும் வேட்பாளர்கள். ஆரோன் வெற்றி பெற்றார்!

டென்மார்க் மன்னர் நான்காம் பிரடெரிக்கும், பிராட்டஸ்டன்ட் தலைமை குருவும் ஆரோனை அங்கீகரித்தாலும், இங்கிலாந்து ஏற்றுக்கொள்ளவில்லை. ‘இந்தியர்கள் நம் அடிமைகள். அவர்களைப் பாதிரியார் ஆக்கி நமக்குச் சமமாக அமர வைப்பதை ஏற்கமுடியாது’ என்று இங்கிலாந்து குரல் எழுப்பியது. அங்குள்ள மதபீடங்களின் தலைவர்களும் போராட்டம் நடத்தினார்கள். இந்த எதிர்ப்பால் 5 ஆண்டுகள் கழித்தே ஆரோனால் பணியேற்க முடிந்தது.

பாதிரியாராகப் பணியேற்ற ஆரோன், குருவைப் போலவே விளிம்புநிலை மக்களையே இலக்காக்கினார். கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தந்தார். மூடநம்பிக்கைகளைத் தகர்த்து அறிவு புகட்டினார். மதக்கலவரங்களைத் தீர்த்து சமாதானத்தை உருவாக்கினார். மக்களின் வாய்மொழி இலக்கியங்கள், நாட்டுப்புறக் கலைவடிவங்கள், சடங்குகள், வழிபாட்டு முறைகளை ஓலைச்சுவடிகளாகவும் கடிதங்களாகவும் தலைமை பீடத்துக்கு அனுப்பி வைத்தார். அவர் அனுப்பிய பிரதிகள் அனைத்தும் இன்றும் ஜெர்மனியில் பாதுகாக்கப்படுகின்றன.

எதிர்த்த ஐரோப்பியரே பாராட்டும்விதமாக சிறப்புறப் பணியாற்றிய ஆரோன், 1745 ஜூன் 25 அன்று காலமானார். தரங்கம்பாடியில் இருந்த அவரின் கல்லறை கடல்கோளில் அழிந்துவிட்டது.

ஆறுமுகம் பிள்ளையாகப் பிறந்து, ஆரோனாக மாறி, ஐரோப்பியரை மிரளச்செய்து, பின்னர் அம்மக்களே போற்றும் விதமாக வாழ்ந்து மறைந்த இத்தமிழனின் சரித்திரத்தை வெளிக்கொண்டு வந்தவர் டாக்டர் டேனியல் ஜெயராஜ். லண்டன், லிவர்பூல் ஹோப் யுனிவர்சிட்டியில் பணியாற்றும் இவர், ஒரு ஆய்வுக்காக ஜெர்மன் சென்றபோது, தமிழில் சில ஓலைச்சுவடிகளும், கடிதங்களும் இருப்பதைக் கண்டார். அத்தனையும் ஆரோன் தன் பணிக்காலத்தில் தலைமை பீடத்துக்கு அனுப்பி வைத்த தகவல்கள். இவற்றைப் பார்த்ததும், தான் மேற்கொண்டிருந்த ஆய்வை பாதியிலேயே விட்டுவிட்டு ஆரோன் பற்றிய ஆய்வைத் தொடங்கி விட்டார் ஜெயராஜ். அதுமட்டும் இல்லாமல், ஆரோனின் இப்போதைய தலைமுறையையும் கண்டுபிடித்து விட்டார்!  
ஆரோனின் 8-வது தலைமுறையைச் சேர்ந்த ஆரோன் தங்கராஜ் சாமுவேல் வில்லிவாக்கத்தில் வசிக்கிறார். இசை ஆசிரியரான இவர், ஜெனிவாவில் உள்ள வேர்ல்டு கவுன்சில் ஆஃப் சர்ச்சஸ், லுத்தரன் வேர்ல்டு ஃபெடரேஷன், ஜெர்மன் ஹல்லே யுனிவர்சிடி, இங்கிலாந்து அரண்மனை உள்பட உலகம் முழுதும் இருந்து ஆரோன் பற்றிய தகவல்களைத் திரட்டி வைத்திருக்கிறார்.

‘‘உலகம் முழுதுமுள்ள பிராட்டஸ்டன்ட் கிறித்தவர்கள் அனைவருக்கும் எங்கள் தாத்தாவைப் பற்றித் தெரிந்திருக்கிறது. தமிழகத்தில்தான் பலருக்கு அவரைத் தெரியவில்லை. எனக்கே அண்மையில்தான் தெரிந்தது. ஊழியம் என்ற பெயரில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர் அவர். நம் பண்பாடு, தத்துவங்கள், இலக்கியங்களை மேலைநாடுகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறார். எங்கள் தாத்தாவை உருவாக்கிய சீகன்பால்குவுக்கு தபால்தலை வெளியிட்டு சிறப்பு செய்திருக்கிறார்கள். ஆரோனை பெருமைப்படுத்தும் விதத்தில் அவருக்கும் தபால்தலை வெளியிட வேண்டும்’’ என்கிறார் இவர்.
வெ.நீலகண்டன்
படம்: ஆர்.சந்திரசேகர்